பிரபாகரன் தனிநாட்டுக்காகப் போராடவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனிநாட்டுக்காக போராடவில்லை, தமிழ் மக்கள் ஒரு தேசம் என்னும் அடிப்படையிலேயே அவர்களுடைய போராட்டம் இடம்பெற்றது. அவர்களுடைய இலக்கு தனிநாடு என்றால், புலிகளின் தாகம் தமிழீழ தனியரசு என்றல்லவா கூறியிருப்பார்கள் ஆனால் அவர்கள் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றுதானே குறிப்பிட்டார்கள் என்றும் கஜன் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யுடியூப் தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதி வரையில் தனது தனிநாட்டு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முற்றிலும் மாறுபட்ட வகையில் தெரிவித்திருக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து, முதல் முறையாக வேலுப்பிள்ளை பிரபாகரன் சர்வதேச ஊடகங்களுக்கு முகம் காட்டினார். இந்த சந்தர்ப்பத்தில் கூட, தனிநாட்டை கைவிடுவதற்கான அவசியம் இப்போது ஏற்படவில்லை என்று கூறினாரே தவிர, அதனை கைவிடுவதாக பிரபாகரன் கூறியிருக்கவில்லை. மேலும் தாம் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வது இடைக்கால தீர்வு ஒன்றை காண்பதை அடிப்படையாகக் கொணடது என்றே அவர் வலியுறுத்தியிருந்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாலசிங்கமே அதிகம் பேசினார். பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரபாகரன் பதிலளிப்பதற்கு முன்னரே அவசரப்பட்டு பாலசிங்கமே பதிலளித்திருந்தார். இப்போதும், குறித்த ஊடக சந்திப்பின் காணொளி அதற்கு சாட்சியாக இருக்கின்றது. இவ்வாறிருக்க கஜேந்திரகுமார் இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்ன என்று, அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.