இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் யுரேனிய இறக்குமதி தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அரசுமுறைப் பயணத்தின் போதே, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்திய அணுசக்தித் துறைக்குத் தேவையான யுரேனியம் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவிடமிருந்து பெறப்படும் யுரேனியம், பிரத்தியேகமாக அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது போன்ற அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
மேலும், இந்த யுரேனியம் ஏற்றுமதியானது சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கண்காணிப்புகளின் கீழ் முறைப்படுத்தப்படும்.
2047-ஆம் ஆண்டிற்குள் 100 கிகாவாட் அணுசக்தி திறனை எட்ட இலக்கு வைத்துள்ள இந்தியாவிற்கு, உலகின் 28 சதவீத யுரேனிய இருப்பைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் இந்த ஒப்பந்தம் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, இரு நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், விண்வெளித் துறையில் கூட்டுமுயற்சியாக இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் ‘கோகோஸ் கீலிங்’ தீவுகளில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு ஆதரவாக தற்காலிக விண்வெளி கண்காணிப்பு முனையத்தை அமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சீனாவை எதிர்கொள்ளும் மூலோபாய நகர்வுகளின் ஒரு பகுதியாகவே இந்திய-ஆஸ்திரேலிய உடன்பாட்டை நோக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
