சந்திரிக்கா குமாரதுங்கவே குமார் பொன்னம்பலத்தை கொலை செய்தார்.

தனது தகப்பனார் குமார் பொன்னம்பலத்தை, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவே கொலை செய்ததாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யுடியூப் தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இதனை தெரிவித்திருக்கின்றார். தனது சொந்த தகப்பனின் கொலை விவகாரத்தில் இலங்கையின் நீதித்துறை சரியாக நடந்துகொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான், தமிழ் மக்களின் விவகாரத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிவருகின்றேன் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

குமார் பொன்னம்பலம் கொழும்பில் வைத்து, 2000ஆம் ஆண்டு, ஜனவரியில் கொல்லப்பட்டார். சாந்தா என்று அழைக்கப்படும் ஒரு நபருடன், அவரது இல்லத்தில் வைத்து, முப்பது நிமிடங்கள் பேசிய பின்னர், குறித்த நபரை, தனது பென்ஸ் காரில் ஏற்றிக்கொண்டு வெளியில் சென்றவர், பின்னர்  சடலமாகவே கண்டடையப்பட்டார். சாந்தாவுடன் செல்லும் போது, தனது கைக்கடிகாரம், தங்கச் சங்கிலி ஆகிவற்றை கழற்றி வைத்து விட்டு அவர் சென்ற விடயம் பின்னரே அறியப்பட்டது. ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்னும் கேள்விக்கு இன்றுவரையில் பதில் இல்லை.