ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டு தொடர்ந்தால் நல்லது, தொடருமா என்பதுதான் கேள்வி – அரசியல் ஆய்வாளர் யதீந்திரா

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும், அவர்கள், தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் பணியாற்றுவதும், பாரம்பரிய தமிழ் மொழிக் கட்சிகளை அச்சமடையச் செய்திருக்கின்றது. இதன் காரணமாக தங்களுக்குள் வலுவானதொரு கூட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதே வேளை அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களாவது எஞ்சியிருக்குமா என்னும் அச்சமும் தமிழ் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில்தான், தமிழ் மொழிச் சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு கட்சிகள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்திருக்கின்றன.

இவ்வாறானதொரு அரசியல் கூட்டு தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நீண்டகாலமாக விலியுறுத்தி வந்திருக்கின்றார் – ஏனையவர்கள் எவரை விடவும், அவரே இதில் அதிக ஆர்வத்தை காண்பித்தவர். எனினும் கட்சிகளுக்கிடையில் காணப்படும் உள்ளக சச்சரவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சங்களால் குறித்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் கூட்டின் எதிர்காலம் தொடர்பில் கூட, அவரசப்பட்டு நம்பிக்கை வைப்பதும் சிக்கலானதுதான் – இவ்வாறு அரசியல் ஆய்வாளரும், திருகோணமலை மூலோபாய கற்கைகள் நிலையத்தின் நிறுவக பணிப்பாளருமான யதீந்திரா தெரிவித்திருக்கின்றார். ஆறு தமிழ் கட்சிகளின் கூட்டின் முக்கியத்துவம் தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

ஈழத் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் காணப்படும் உள் முரண்பாடுகளும், குறிப்பாக இலங்கை தமிழரசு கட்சிக்குள் காணப்படும் அதிகார இழுபறிகளும், தேசியளவில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு எப்போதும் சவாலானவை எனினும் தற்போதைய சூழலில் சாத்தியமான விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்களாயின் இவ்வாறான அரசியல் கூட்டு ஒன்றை ஏற்படுத்தியதற்கு பலன் கிடைக்கலாம் – முக்கியமாக, மாகாண சபைத் தேர்தலின் அவசியம் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதும், அதற்காக ராஜதந்திரரீதியாக செயலாற்றுவதும் அவசியமானது என்றும் யதீந்திரா, சுட்டிக்காட்டியிருக்கின்றார்.