ஈழத் தமிழர்களின் அரசியலின் எதிர்காலம் தொடர்ந்தும் தோல்வியின் பாதையிலேயே நகர்கின்றது. யுத்தம் முடிவுற்று பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் கூட, ஈழத் தமிழ் அரசியல் சூழலில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கூட காண முடியவில்லை. தொடர்ந்தும், சுலோகங்களில் சுகம் கான்பதிலேயே தலைமைகள் எப்போர் தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கின்றனர்.
அரசியல் என்பது அடிப்படையில் சாத்தியங்களின் கலையாகும் – இதனை புரிந்துகொண்டு, அதற்கேற்ப பெறக் கூடியதை பெற்றுக்கொள்வதும், பெற வேண்டியவற்றுக்காக தொடர்ந்தும் தந்திரோபாயமாக செயலாற்றுவதும்தான் அரசியலாகும். ஒன்றைப் பெற முடியாத போது, அதற்காக மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு அரசியல் தலைமைகள் தேவையில்லை. ஆனால் அதனைத்தான் தமிழ் தலைமைகள் என்போர் செய்துவருகின்றனர். அதனையே அரசியல் என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழலில், தர்க்கரீதியான அரசியல் உரையாடலொன்றின் தேவையை நாம் உணர்கின்றோம். ஆயுதத் தலையீட்டின் தோல்விக்கு பின்னரான, கடந்த ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலான அரசியல் போக்கின் தோல்வியானது, அவ்வாறானதொரு புதிய அரசியல் உரையாடலுக்கான தேவையை நிர்பந்திக்கின்றது.
புதிய அரசியல் உரையாடல் என்றால், முன்னையவர்கள் மீது அனைத்து பழியையும் போட்டுவிட்டு, நாம் தப்பித்துக் கொள்வது அல்ல – மாறாக, கடந்த காலத்தை ஒரு ஆசானாக் கொண்டு, கற்றுக்கொள்வதும், அதற்கு ஏற்ப புதிய சூழலை கையாளும் வழிகளை அறிய முயற்சிப்பதுமாகும்.
பின்-யுத்த கால, தமிழ் ஊடக உரையாடல்களை நோக்கும் போது, ஒரு பெரிய வெற்றிடம் தெரிகின்றது. உண்மைகளை எதிர்கொள்ளுவதற்கு தயங்கும் போக்கே மேலோங்கிக் காணப்படுகின்றது.
பழக்கப்பட்ட ( Mainstream media ) ஊடகங்களின் வரையறைகளை நாம் அறிவோம். ஆனால் தற்போது, நமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் பல்கிப் பெருகியிருக்கும் இணைய ஊடகங்களும் கூட – பழைய தோல்விக் கற்பனைகளுக்கு மெருகூட்டும் பணியையே செய்ய முற்படுகின்றன. யதார்த்தத்திற்கு முக்கியத்துமளிக்கும் ஊடக வெளி முன்னரைப் போல் சுருங்கித்தானிருக்கின்றது.
எது யதார்த்தமோ – அதுவே உண்மையாகும். நமது விருப்பு வெறுப்புக்களிலிருந்து விடயங்களை நோக்காமல், சூழ்நிலையை புரிந்துகொள்ளும் அரசியல் மற்றும் சமூக உரையாடலொன்றுதான், இன்றைய தலைமுறைக்கு தேவைப்படுகின்றது.
நமது இளைய தலைமுறை கரப்பான் பூச்சிகள் அல்லர் – ஆனால் அவர்களது அரசியல் புரிதலின் அளவு மட்டுப்பட்டுக்கிடக்கின்றது. இந்தப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு, அவ்வாறானதொரு புதிய அரசியல் உரையாடலுக்கான கதவை அகலத் திறக்கும் முயற்சிதான் – புதிய தமிழ் முரசு.
வரலாறு முழுவதும் புதிய உரையாடல்கள் என்பவை, பழையவற்றின் மீதான கேள்விகளிலிருந்தே உருவாகியிருக்கின்றது.
