நாங்கள் மெத்தப் படித்தாக்கள் தெரியுமோ – என்னும் நிலைமை போய், எங்களப் போல மொக்கர்களாக இருக்க ஏலுமோ என்று கேட்கும் நிலைமை இப்போது.
சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த காலத்தில், தேர்தல் மேடைகளில் ஒரு விடயத்தை அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். அதாவது, நாங்கள் ஒரு ராஜதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். பொதுவாக சம்பந்தன் மேடையில் பேசுகின்ற போது, கீழே இருப்பவர்களை நோட்டம் விடுவதுண்டு.
இதனை பல்வேறு தடவைகள் நான் அவதானித்திருக்கின்றேன். கீழே இருப்பவர்களில், விடயங்கள் அறிந்த எவரேனும் இருக்கின்றார்களா அல்லது, இருக்கின்ற அனைவருமே நான் என்ன கூறினாலும் ஆவென்று வாயை பிளந்து கொண்டு நிற்கக் கூடியவர்களா, என்பதை மதிப்பிடுவதற்காகத்தான் சம்பந்தன் அவ்வாறு சுற்று முற்றும் பார்ப்பதுண்டு. கிட்லர் பற்றிக் கூறுவார்கள், கிட்லர் பேசுகின்ற போது, தனக்கு முன்னால் லட்சக்கணக்கான முட்டாள்கள் இருக்கின்றனர் என்னும் எண்ணத்தோடுதான் பேசுவதுண்டாம். கிட்லர் அவ்வாறு எண்ணினாரோ இல்லையோ நாமறியோம், ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் பலர் அப்படித்தான் பேசுகின்றனர். அப்படித்தான் செயற்படுகின்றனர்.
செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ குழுவினர், இலங்கைக்கான ஜப்பான் தூதரக அதிகாரிகள் இருவரை கண்டிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில், ஜப்பான் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்தச் செய்தியை பார்த்த நண்பர் ஒருவர் கேட்டார், ஜப்பான் எப்படி தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கு உதவி செய்ய முடியும்? நாட்டு நடப்புக்களை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரிந்த விடயம் கூடவா, இவர்களுக்கு விளங்கவில்லை?
இதே போன்றுதான், சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சுவிஸ் தூதுவருக்கு டெலோ பொன்னாடை போர்தி, அவருக்கு நன்றி தெரிவித்திருந்தது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சி, எதற்காக ஒரு நாட்டின் தூதுவருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்க வேண்டும்? என்னிடம் சிலர் இப்படியான கேள்விகளை கேட்கும் போதெல்லாம், என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் சங்கடப்பட வேண்டியிருக்கின்றது. உண்மையில் இப்படியான கேள்விகளுக்கு ஒரு வரியில் பதிலளிப்பதானால் – தமிழ் அரசியல்வாதிகளின் ராஜதந்திர அறிவு இவ்வளவுதான் – என்றுதானே கூற முடியும்.
யாரிடம் எதைக் கேட்க வேண்டும் – எப்படிக் கேட்க வேண்டும் – எப்போது கேட்க வேண்டும் – முதலில் ஒன்றை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதற்கு முன்னர், அதனை அவர்களிடம் எதிர்பார்க்கும் தகுதிநிலை நமக்கு இருக்கின்றதா? ராஜதந்திரப் பயணத்தில் இறங்குவதற்கு முன்னர், ஒரு அரசியல் கட்சி தங்களுக்குள் இவ்வாறான கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் சொல்வார்களே கோம் வேர்க் (வீட்டு வேலை) என்று – ராஜதந்திர அரசியலுக்கான வீட்டு வேலையை முதலில் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் தடியெடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது போல், கட்சி வைத்திருப்பவர்கள் எல்லோருமே மாபெரும் ராஜதந்திரிகள் என்பது போலவே தமிழ் கட்சியினர் நடந்து கொள்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது. சீனாவிற்கு ஒரு அரசியல் குழு சென்றிருந்தது. அதில் தமிழரசுக் கட்சி சார்பில் ஒரு ஊடகவியலாளர் சென்றிருந்தார்.
அங்கு சந்தித்த சீன அதிகாரிகளிடம், தமிழ் மக்களின் அரசியல் விடயம் தொடர்பில் அவர் பேசியிருக்கின்றார். அதனைக் கேட்டுவிட்டு, அந்த சீன ராஜதந்திரி கூறியிருக்கின்றார், எங்களின் வெளிவிவகாரக் கொள்கை உங்களுக்கும் தெரியும்தானே – நாங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை. எனவே இந்த விடயங்களை விட்டுவிட்டு, உங்கள் பகுதியில் ஒரு வீதியை போட வேண்டியிருக்கின்றது என்றால் எங்கள் உதவியை நீங்கள் கேட்கலாம், அதனை நாங்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி, எங்கள் உதவியில் இந்த வீதியையும் உள்ளடக்குமாறு அரசாங்கத்தை கோருவோம். இப்படித்தான் நீங்கள் எங்களிடம் வர வேண்டும். நாடுகளை அறிந்து அணுக வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சீனாவிடம் ஒருவர், இன்னொரு நாட்டில் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் பேசுவாரானால், அவருக்கு சீனாவின் வெளிவிவகாரக் கொள்கையின் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதுதான் பொருள். இந்தியாவி;;டம் எதைக் கோர வேண்டும், அமெரிக்காவிடம், ஜப்பானிடம் எதைக் கேட்க வேண்டும் என்பதை அறிந்து பேச வேண்டும். அதுதான் ராஜதந்திரம் பழகுவதன் அடிப்படை.
ஆனால் நமது சூழலில் அப்படியான முதிர்சியை காண முடியவில்லை. தொடர்ந்தும் ராஜதந்திரம் என்னும் பெயரில் கோமாளித்தனம்தான் அரங்கேறுகின்றது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுடன் ஏட்டிக்குப் போட்டியாக படம் எடுத்துக் கொண்ட சம்பவம் இதனை தெளிவாக படம்பிடித்துக் காட்டியது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலில் சென்றார். ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்ற போது அவரைச் சந்தித்து, சமஸ்டியை அடைவதற்கு தமிழ்நாடு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர், முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து அவரிடமும் அந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இன்னொரு புறம், சிவஞானம் சிறிதரன், கர்நாடாகாவிலுள்ள எதிரணி அரசியல்வாதிகளை சந்தித்து, அவர்களின் உதவியை கோரியிருக்கின்றார். தமிழ் நாட்டிற்கும் கர்நாடாகாவிற்கும் இடையிலுள்ள தண்ணீர் பிரச்சினையே அவர்களால் தீர்க்க முடியாமல் இருக்கின்றது. இவர்கள் எல்லாம் போகின்ற போது, எங்களுடைய பங்கிற்கு நாங்களும் ஏதாவது செய்யத்தானே வேண்டும் என்று கருதிய, எம்.ஏ.சுமந்திரனும் அவருடைய பங்கிற்கு எதிரணியில் இருக்கும் ஸ்டாலின், கனிமொழி போன்றவர்களை சந்தித்திருக்கின்றார். இவ்வாறான சந்திப்புக்களில் அரசியல் பெறுமதி என்ன?
கடந்த காலங்களில் புலம்பெயர் நாடுகளில் உள்ள சிலர், தமிழரசு கட்சியிலிருக்கும் சிலரையும் இணைத்துக் கொண்டு, தமிழ் நாடு சென்று, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை சந்தித்திருந்தனர். அதன் பின்னர் ஒரு குழு புதுடில்லியில் உறவாடுவதாகக் கூறி, ஜனநாயகப் போராளிகள் என்னும் கட்சியின் உறுப்பினர்களுக்கு கோர்ட் அணிவித்;தது. அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி, தமிழ் நாட்டில் அஞ்ஞாதவாசம் செய்துவரும் காசியானந்தன், ஒரு நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியிருந்தார். இந்துத் தமிழீழம் என்னும் ஒரு புதுக் கதை சொல்லப்பட்டது. அதற்கு சில அரசியல் ஆய்வாளர்கள் என்போரும் விளக்கவுரைகள் எழுதியிருந்தனர்.
திரும்பிப் பார்த்தால் எந்தளவிற்கு ஈழத் தமிழ் சமூகத்தை ஒரு கோமாளிச் சமூகமாக காண்பிக்க முடியுமோ, அந்தளவிற்கு தேவையான அனைத்தையும் கடந்த பதினேழு வருடங்களில் செய்திருக்கின்றனர். ஆனாலும் அந்தக் கோமாளிப் பயணம் நின்றதாகத் தெரியவில்லை.
தமிழ் நாட்டுத் தலைவர்களை சந்திப்பது தொடர்பில் பேசுகின்ற போது ஒரேயொரு கேள்வியைத்தான் நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டின் அரசியல் எல்லை என்ன? அதற்கு தனியான ஆற்றல் இருக்கின்றதா? இறுதி யுத்தத்தின் போது, கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றம் கழகம், மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்திருத்தது. அவ்வாறானதொரு நிலையில் கூட, இறுதி யுத்தத்தை நிறுத்துவதிலோ, மக்களை பாதுகாப்பதிலோ எந்தவொரு தலையீட்டையும் செய்ய முடியவில்லை. இப்போது புதுடில்லியில் இடம்பெறும் விடயங்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டு நடிகர்கள் மேடையில் முழங்குவது போன்று, அப்போதும் பலர் மேடைகளில் ஆவேசப்பட்டனர். என்ன நடந்தது? இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பலியுடன் யுத்தம் முடிவுற்றது. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போதே, செய்ய முடியாததை, மத்தியில் எவ்வித குரலும் இல்லாத நிலையிருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் செய்ய முடியுமா?
முதலில் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் மானில அரசாங்கங்களுக்கு இடம் இல்லை. இது அடிப்படையான விடயம். புதுடில்லி, அதன் வெளிவிவகார நகர்வுகளுக்கு தேவை என்றால் மானிலத்தின் சென்ரிமென்டுகளை பயன்படுத்திக் கொள்ளும். தனது தலையீட்டிற்கான ஒரு காரணமாக்கிக்கொள்ளும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது அதுதான் நடந்தது – தமிழ் நாட்டின் சென்ரிமென்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அளவிற்கு பயன்படுத்திக் கொண்டது.
இந்த விடயங்கள் தொடர்பில் போதிய புரிதல் இல்லாமல், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் எவ்வித பயனும் இல்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் எல்லை தாண்டிய மீனவர் பிரச்சினை. அவர்கள் எவரும் வட இந்தியர்கள் அல்லவே! தமிழ் நாட்டு மீனவர்கள்தானே எல்லை தாண்டுகின்றனர். அதைத் தடுப்பதற்கு தமிழ் நாட்டால் என்ன செய்ய முடிந்தது? தமிழ் நாட்டால் சமஸ்டித் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று நம்புவதும், அதற்காக அங்கு செல்வதும் எந்தளவிற்கு நகைச்சுவையானது என்பதை புரிந்து கொள்வதில் இப்போது சிரமம் இருக்காதல்லவா.
தமிழர் தரப்புக்கள் முதலில் தங்களின் பாசாங்குத்தனமான அரசியல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தாங்கள் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப முதலில் தங்களை அரசியல்ரீதியில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழர் தரப்பு தன்னை தயார்படுத்தாமல், உலகில் எங்கு சென்றும் பயனில்லை. ஏனெனில் ஒரு ராஜதந்திர நகர்வின் வெற்றி என்பது, நாம் எந்தளவிற்கு மற்றவர்களுக்கு முன்னால் பெறுமதியுடைவர்களாக இருக்கின்றோம் என்பதில்தான் இருக்கின்றது.
ராஜதந்திரம் என்பது நலன்களை வெற்றிகொள்ளும் மிகப் பெரிய வியாபாரம். இந்த வியாபாரத்தில், நம்மிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றால் மற்றவர்களிடமிருந்து எதனையும் பெற முடியாது. யூத ராஜதந்திரத்தின் வெற்றி இந்த அடிப்படையில்தான் நிகழ்ந்தது. அவர்கள் தங்களை மற்றவர்களுக்குத் தேவையானவர்களாக ஆக்கிக் கொண்டனர். அவர்களை தவிர்த்துச் செல்ல முடியாது என்னும் நிலைமையை உருவாக்கினர். ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எவரும் பிச்சையிட முடியாது. ராஜதந்திரம் என்பது பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயல் அல்ல – மாறாக, நமது ஆளுமை கொண்டு மற்றவர்களை வசியப்படுத்தி, அவர்கள் மூலம் பெறக் கூடியதைப் பெறுவதற்கு முயற்சிப்பது.

யதீந்திரா