அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க விரைவில் தனது பதவியிலிருந்து விலகி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார். அமெரிக்காவில் நிகழ்வு ஒன்றில் பேசுகின்ற போதே, அவர் இதனை தெரிவித்திருக்கின்றார். எனினும் நாடு திரும்பினாலும் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்திருக்கும் சமரசிங்க, தற்போதைய அரசாங்கம் இந்தப் பதவியில் நீடிக்குமாறு கூறிய போதிலும் தனிப்பட்ட காரணங்களினால், தான் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
அடிப்படையில் தொழில்முறை ராஜதந்திரி அல்லாத மகிந்த சமரசிங்க, நீண்டகாலமாக அமெரிக்காவிற்கான தூதுவராக பணியாற்றிவருகின்றார். ஆட்சிகள் மாறிய போதிலும் கூட, அவரை பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கங்கள் கோரவில்லை. இதற்கு அவருடைய ராஜதந்திர அனுபவமும் ஆற்றலுமே காரணமாகக் கூறப்படுகின்றது. இந்தப் பின்னணியில் தற்போது அவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்திருப்பது உண்மையிலேயே தனிப்பட்ட காரணம்தானா அல்லது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டு வரும் பரந்தளவிலான மாற்றங்களில் ஒரு பகுதியா என்னும் கேள்வி அரசியல் அவதானிகள் மத்தியில் உண்டு.
