வடக்கு ஆளுனர் இரண்டு உள்ளுராட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்திருக்கும் விடயம்தான் இன்றளவில் பேசுபொருள். கூடவே அவர் குறித்த இரண்டு உள்ளுராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமையும் நீக்குவதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருக்கின்றார். இந்த விடயம் சாதாரணமானது அல்ல. அதாவது, மாகாண அரசாங்கத்தின் கீழ், ஒரு விடயம் இடம்பெறுவதற்கும், மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டுவரும் நிலையில், இவ்வாறானதொரு விடயம் இடம்பெறுவதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு. இதனை வடக்கு மாகாண ஆளுனர் தன்னிச்சையாக செய்திருப்பார் என்று நம்புவது கடினமானது. ஏனெனில் இவ்வாறானதொரு நடவடிக்கையை தன்னிச்சையாக மேற்கொள்வதற்கான அரசியல் பின்புலம் அவருக்கு இருப்பதாக நம்புவதும் கடினமானது.
இது தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் வெறும் எதிர்ப்புக்களின் வழியாக இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாது. ஒரு புறம் அரசியல்ரீதியாகவும், அதே வேளை சட்டரீதியாகவும் இந்த விடயம் கையாளப்பட வேண்டும். இது அடிப்படையில் தமிழ் மக்களின் அதிகாரம் கோரும் போராட்டத்தின் ஒரு அங்கம். இந்த அடிப்படையில்தான் இந்த விடயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஒரு மக்கள் கூட்டம் கோரும் அதிகாரம் இரண்டு அடிப்படையில்தான் சாத்தியப்பட முடியும். ஒன்று புரட்சியின் மூலமாக – இரண்டு, ஜனநாயக வழிமுறையின் ஊடாக, அதாவது, படிப்படியாக பயணிப்பது – அதன் மூலம் எதிர்பார்க்கும் அதிகாரங்களை பெறுவதற்கு முயற்சிப்பது. ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களால் புரட்சி செய்ய முடியுமா? பதிலை நான் கூற வேண்டியதில்லை. ஈழத் தமிழ் மக்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் அவ்வாறான புரட்சி இலக்கை கொண்டதுதான். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தென்னிலங்கையை தோற்கடித்து தமிழர்களுக்குத் தேவையானதை, தமிழர்களே பெற்றுக் கொள்வதுதான் ஆயுதப் போராட்டத்தின் இலக்கு. ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இப்;போது எஞ்சியிருப்பது ஒரேயொரு வழிமுறைதான், அதாவது, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, எதிர்பார்ப்பதை நோக்கி மெதுதுவாக முன்னேறுவது. ஆனால் இது இலகுவானதல்ல. பொறுமையும் விடாமுயற்சியும், சூழ்நிலையை புரிந்து கொண்டு செயலாற்றும் திறனும் இதற்கு அவசியம்.
சூழ்நிலையை புரிந்து கொண்டு செயற்படுவது என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு பதில் தேட முற்படும் போது, முதலில் இப்போது எவ்வாறானதொரு சூழ்நிலை, நமக்கு முன்னால் இருக்கின்றது என்னும் கேள்விக்கு பதில் தேட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் பல்வேறு சாக்குப் போக்குகளை கூறி இழத்தடிக்கப்பட்டுவருகின்றது. இந்த நிலையில்தான் வடக்கு மாகாண ஆளுனர் தெரிவு செய்யப்பட்ட இரண்டு உள்ளுராட்சி உறுப்பினர்களை நீக்குவதாக அறிவித்திருக்கின்றார். அதே வேளை மாகாண சபைக்குள் இருப்பதை மத்தியின் கீழ் கொண்டு செல்லும் வேலையையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், ஈழத் தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான கோரிக்கை, எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்? இல்லாத ஒன்றை அடிப்படையாகக் கொண்டா – அல்லது, இருப்பதை அடிப்படையாகக் கொண்டா? நாம் விரும்பும் ஒன்றை அடைய வேண்டும் என்று, விரும்புவது தவறானது அல்ல – ஆனால், அதனை வெறும் வார்த்தை ஜாலங்களால், அறிக்கைகளால், சில சந்திப்புக்களின் பின்னரான பிரகடணங்களினால் அடைய முடியுமா? கடந்த பதினேழு ஆண்டுகளாக உங்களுடைய ஆவேச அறிக்கைகள், சந்திப்புக்கள் ஆகியவற்றுக்கு என்ன நடந்தது? ஆகக் குறைந்தது அவற்றை ஒரு சாதாரண அழுத்தங்களாகக் கூட தென்னிலங்கை கருதவில்லையே! ஒப்பீட்டடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியை மட்டும்தான் தென்னிலங்கை சற்று உற்றுநோக்கியிருந்தது – அதுவும் தேர்தல் காலம் என்பதால்தான். ஆனால் அந்த முயற்சியும் கூத்தாடிப் போட்டைத்தாண்டி என்பதாகவே முடிவுற்றது.
அரசியல் என்பது அடிப்படையில் ஒரு பேரம். நாங்கள் இதைத் தருகின்றோம் நீங்கள் அதைத் தாருங்கள் – அல்லது, நாங்கள் இதை விட்டுக் கொடுக்கின்றோம் நீங்கள் அதைத் தாருங்கள் என்பதாக பேசுவதும், முடியுமானவரையில் பெறக் கூடியதை, ஒரு குறிப்பிட்ட சூழலில் பெறுவதும்தான் ஒரு அரசியல் நகர்வின் இலக்காக இருக்க முடியும். ஒன்றை அடை முடியாத முயற்சிகள் அனைத்துமே தோற்றுப் போன முயற்சிகள்தான். அவைகள் கற்றுக் கொள்வதற்கான படிப்பினைகள் மட்டுமே!
அடுத்த கேள்வி, இன்றைய நிலையில், எந்த அடிப்படையில் ஈழத் தமிழர்களால் தென்னிலங்கையுடன் பேச முடியும்? தென்னிலங்கை ஆகக் குறைந்தது தமிழ் மக்களின் பிரச்சினை தனித்துவமானது, அதற்கு தனியான பேச்சுவார்த்தை அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையிலா இருக்கின்றது? யுத்தம் முடிந்த கையோடு, அவ்வாறானதொரு நிலைமை சிறிய அளவில் இருந்தது. அந்த அடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அங்கும் மாகாண சபையை முன்னிறுத்தாமல், அதற்கப்பால் செல்வது தொடர்பில் சிந்தித்தால், ஒரு கட்டத்திற்கு மேல் நகர முடியவில்லை.
தென்னிலங்கையை பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் பலமாக இருந்த காலத்தில், ஒரு ஆகக் கூடிய தீர்வு தொடர்பில் அவர்கள் சிந்தித்திருக்கலாம் – அந்த அடிப்படையில்தான் சந்திரிக்கா “பிராந்தியங்களின் ஒன்றியம்” என்னும் நிலைக்குச் சென்றார் ஆனால் அப்போது அதனை பிரதானமாக எதிர்த்தவர் ரணில் விக்கிரமசிங்க. அப்போது சந்திரிக்கா சிந்தித்ததும் கூட, விடுதலைப் புலிகளின் இராணுவத் தலையீட்டை அடிப்படையாகக் கொண்டுதான். அதனை அவரே பிற்காலத்தில் கூறியுமிருக்கின்றார். புதிய அரசியல் யாப்பு விவகாரத்தில், அப்போது ஆதரித்ததை ஏன் இப்போது ஆதரிக்க முடியாது என்று கேட்ட போது, அப்போது புலிகள் இருந்தார்கள் என்று அவர் பதலளித்திருந்தார். இந்த அடிப்படையில் நோக்கினால் தென்னிலங்கை சுயவிருப்பில் ஒரு போதும் உச்சபட்டசமான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்கு வழக்கப் போவதில்லை. அந்த அதிசயம் ஒரு போதும் இலங்கைத் தீவில் நிகழாது.
இவ்வாறானதொரு அரசியல் சூழலில், தமிழர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தின் எதிர்காலம் என்ன? வெளித்தரப்புக்களின் தலையீடுகள் என்பது வெறுமனே உதட்டளவிலான விடயமாக மாறிவிட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரையும் சந்திப்பது போன்று, சில தமிழ் பிரதிநிதிகளையும் சந்திக்கின்றனர். ஒரு சிறிய ஆறுதல் இருக்கிறது என்றால், இந்தியா தொடர்ந்தும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் தொடர்பில் அதன் ஆர்வத்தை காண்பித்துவருகின்றது என்பது மட்டும்தான். அதுதான் இந்தியாவின் எல்லைக் கோடு. ஆதற்கப்பால் இந்தியாவிடம் கேட்டால், அதற்கு பதில் பாலத்திற்கு கீழே தண்ணீர் நீண்டகாலமாக ஓடிவிட்டது என்னும் பதில் வரும். அந்த பதிலில் தவறில்லை. இந்தியா ஒரு பிராந்திய சக்தி, உலகில் எழுச்சியடைந்துவரும் சக்திகளில் ஒன்று – அவ்வாறானதொரு நாடு, ஈழத் தமிழர்களை கருத்தில் கொண்டு அதன் வெளிவிவகார நலன்களை தீர்மானிக்காது – தீர்மானிக்கவும் முடியாது.
இவ்வாறானதொரு பின்னணியில்தான், நமது சூழலில், இப்போதும் சிலர் சர்வதேச நீதி என்று கூறும் அப்பாவிகளாக இருகின்றனர். காசாவில், லெபனானில், பல ஆபிரிக்க நாடுகளின் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கே தீர்வை வழங்க முடியாமல் தடுமாறும், சர்வதேசம் பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்து முடிந்த ஒன்றிற்கு எவ்வாறு தீர்வைத் தரப் போகின்றது?
எந்தப் பக்கத்திலிருந்து சிந்தித்தாலும் கூட, இறுதியில் எஞ்சியிருப்பது என்ன? நினைக்குமளவிற்கு ஒன்றுமில்லை. ஆனாலும் ஒன்று இருக்கிறது என்றால், அது மாகாண சபை மட்டும்தான். தமிழ் மக்களின் அதிகாரத்திற்காக போராடப் போகின்றோம் என்றால், அதன் ஆரம்பப்புள்ளி மாகாண சபை ஒன்றுதான். சிலர் எண்ணலாம் மாகாண சபை முறைமை இல்லாதொழிப்படுமானால், அதன் பின்னர் தமிழரின் போராட்டத்திற்கான கதவு திறந்துவிடும். இப்படியான அப்பாவிகள் அரசியல்வாதிகளாகவும், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பதும் கூட, தங்களை மெத்தப் படித்தவர்கள் என்று எண்ணிக் கொண்ட ஒரு சமூகத்தின் சாபக்கேடுதான்.
மாகாண சபை முறைமை இல்லையென்றால் அதன் பின்னர் அதிகாரப்பகிர்விற்கான அடித்தளமே இருக்காது. இந்தியாவின் ஈடுபாடு முற்றிலும் இல்லாது போய்விடும். வேண்டுமானால் மனித உரிமை தொடர்பான மேற்குலகின் உதட்டளவு ஈடுபாடு இருக்கலாம். ஒரு வேளை தன்னிச்சையாக, இந்தியாவையும் பகைத்துக் கொண்டு தற்போதிருக்கும் அரசாங்கம் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்குமாயின், அது தமிழர்களுக்கு சாதகமானதா மாறலாம் ஆனால் அவர்கள் மாகாண சபையை உள்ளுக்குள்ளால் குடையும் வேலையை அல்லவா செய்து கொண்டிருக்கின்றனர். எனவே அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது தமிழ் மக்களின் உரிமையல்லவா!

யதீந்திரா