யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டங்கள் என்றாலே சுவார்சியமும் சிரிப்பும் என்றாகிவிட்டது. இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது, ஒரு புலம்பெயர் நண்பர் கூறினார், ஆற்றல் உள்ளவர்கள் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். அரசியலை முன்னெடுக்க அங்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்டது – அதனால்தான் இந்த நிலைமை. இப்போதேல்லாம் கோபப்படாமல் பேசுவது எவ்வாறு என்றுதான் இந்தக் கட்டுரையாளர் பயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார். கோபப்பட்டு ஒன்றுமது. ஆகிவிடப் போவதில்லை என்பது வேறு விடயம்.
அவருக்கான எனது பதில் இப்படியிருந்த – புலம்பெயர் சூழலில் இடம்பெறும் அரசியல் உரையாடல்களையும் செயற்பாடுகளையும் உற்றுநோக்கினால் அப்படித் தெரியவில்லையே – அங்கும் இங்குபோல் சந்திக்குச் சந்தி, சண்டையிடும் குழுக்களும், ஆட்களும்தானே தென்படுகின்றனர். மேற்குலகின் முன்னேறிய ஜனநாயகச் சூழலில் கூட, நாகரீகமான தமிழ் அரசியல் கலாசாரத்தை காண முடியவில்லையே! ஆகக் குறைந்தது நாகரீகமான அரசியல் உரையாடல்களைக் கூட காண முடியவில்லையே! இப்போதும் பழைய துரோகி-தியாகிக் கதைகள்தானே அங்கும் தலைவிரித்தாடுகின்றது.
எவ்வாறு, யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் கூத்துக்களை பார்த்து, படித்தவர்கள் என்போர், சிவில் சமூகத்தினர் என்போர், பல்கலைக்கழக சமூகம் என்போர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனரோ – அப்படித்தானே வெளிநாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது. அப்படிப் பார்த்தால் அங்கும் புத்திசாலித்தனத்தை காண முடியவில்லையே! இது அரசியல்ரீதியிலான அவதானம் மட்டும்தான்.
பொதுவாக அனைத்துக்கும் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதுதான் நமது பழக்கம். உந்த அரசியல்வாதிக்கு மண்டையில ஒன்றும் இல்ல போல – உந்த அரசியல்வாதிக்கு ஒழுக்காய் பேசத் தெரியவில்லையே! – இப்படிப் பலரும் பேசிக்கொள்வதை நமது அன்றாட வாழ்வில் அடிக்கடி காண முடியும். ஆனால் நாம், நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்றுண்டு அல்லவா – அதாவது, இப்படியானவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தவர்கள் யார்? அவர்களுடைய அறிவு நிலை என்ன?
சில தினங்களுக்கு முன்னர் ஒரு அரசியல் கட்சித் தலைவருடன் பேசிக் கொண்டிருந்த போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர், காலம் சென்ற, சௌமிய மூர்த்தி தொண்டமான் தன்னிடம் கூறிய ஒரு விடயத்தை பகிர்ந்து கொண்டார். எனது மக்கள் பெரிதாக புத்திசாலிகள் இல்லை ஆனால் உங்களுடைய மக்கள் அப்படியல்ல – யாழ்ப்பாண மக்கள் படித்தவர்கள் – புத்திசாலிகள் ஆனால் நான் யோசிப்பதுண்டு – இப்படியான புத்திசாலிகள் ஏன் இப்படியிருக்கின்றனர் – எதனையும் அடையும் நோக்கில் அவர்களால் செயலாற்ற முடியவில்லையே! இது பற்றி முன்னரும் சில சந்தர்ப்பங்களில் இந்தக் கட்டுரையாளர் எழுதியிருக்கின்றார். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பேசியுமிருக்கின்றார்.
தமிழ் சமூகத்தின், முக்கியமாக யாழ்ப்பாண சமூகத்தின் புத்திசாலித்தனம் என்பது அடிப்படையில் தனிப்பட்ட நலன்களை வெற்றிகொள்வது பற்றியது மட்டும்தான். அது எப்போதும் கூட்டு நலன்கள் பற்றியதல்ல. இதன் காரணமாகத்தான், இத்தனை இயக்கங்கள், இத்தனை கட்சிகள், இத்தனை அப்புக்காத்துக்கள் (சட்டத்தரணிகள்) என்றெல்லாம் தம்பட்டம் அடித்தும், இறுதியில் உள்ளதையும் கெடுத்தான் ஆண்டி என்னும் நிலைக்கே, இன்று தமிழினம் வந்து சேர்ந்திருக்கின்றது. இதில் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கின்றது?
இப்போது நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி – அரசியல்வாதிகள் பற்றியது அல்ல – மாறாக மக்கள் என்போர் பற்றியது. இந்திய பிரதமர் நேருவின் காலத்தில், அவருடைய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் கிருஸ்ண மேனன் ஆவார். மேனன் அன்றைய காலத்தின் புகழ்பெற்ற அறிவுஜீவி. அவர் இந்தியா தொடர்பில் இப்படி கூறியிருக்கின்றார் – அதாவது, இந்தியா என்பது வறுமையான நாடு அல்ல – ஆனால் வறுமையான மக்களின் நாடு. ஒரு நாடு வறுமையில் இருக்கின்றது என்பதற்கும், வறுமையான மக்களைக் கொண்ட நாடு என்பதற்கும் அடிப்படையான வேறுபாடுண்டு. அதாவது ஒரு மக்கள் கூட்டம் எப்படியிருக்கின்றதோ அதற்கேற்றப்படிதான் அந்த நாடு இருக்கும் – அந்த நாட்டின் தலைவர்கள் இருப்பார்கள் – நாட்டின் தலைவர்கள் எப்படியிருப்பார்களோ அப்படித்தான் அந்த நாட்டின் ஆட்சி இருக்கும்.
ஈழத் தமிழர்களின் அரசியல் புரிதலின் அளவுதான், அவர்களால் தெரிவு செய்யப்படும் தலைவர்களின் அறிவுநிலையினதும் ஆற்றலினதும் அளவாகும். இன்று வடக்கு கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலையும் அறிவையும், செயற்திறனையும் நோக்கினால், தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வும், அரசியல் புரிதலும் எத்தகையது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். வடக்கில் கஜேந்திரகுமாரையும் கிழக்கில் சாணக்கியனையும் தவிர்த்துப் பார்த்தால், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடம் பிரதேச சபைகளாகும்.
இலங்கை தமிழரசு கட்சி 1949இல் உருவாக்கப்பட்டது. 78 ஆண்டுகள் கடந்துவிட்டது. விடுதலை – தீர்வு என்பதுதான் இத்தனை ஆண்டுகளினதும் கோசம். ஆனால் நடந்தது என்ன? ஒரு மக்கள் கூட்டம் போரடிக் கொண்டிருக்கவே முடியாது. போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலின் விளைவாக இடம்பெறுவதுண்டு. அது மனித குல வரலாறு முழுவதும் இடம்பெற்ற விடயம்தான் ஆனால் பேராட்டங்களின் இலக்கு போராடிக் கொண்டிருப்பதே அல்ல – மாறாக போராட்டத்தின் விளைவைக் கொண்டு, பெறக் கூடியதை உச்சபட்சமாக பெற்றுக் கொண்டு, முன்னோக்கி பயணிப்பது. சமூக பொருளாதார ரீதியாக முன்னேறுவது. உலக வளர்ச்சியோடு சமாந்தரமாக பயணிப்பதற்கான ஆற்றலை பெருக்கிக் கொள்வது.
ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டமும் கூட ஒரு குறிப்பிட்ட சூழலின் விளைவாக ஏற்பட்டதுதான். அன்றைய சூழலில் அவ்வாறான போராட்டங்களுக்கான நியாயம் இருந்தது. ஆட்சியாளர்கள் தமிழரின் நியாயமான கோரிக்கைளை புறக்கணித்தமையின் விளைவாகவே, தமிழர் அரசியலில் தீவிரப் போக்குள் முகம் காட்டத் தொடங்கியது. அந்தத் தீவிரப் போக்குகளையும் அதன் விளைவுகளையும் கணித்து, அப்போதே தமிழ் மக்களின் மனக் குறைகளை போக்கும் நடவடிக்கைகளை, தென்னிலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருக்கவில்லை.
இந்தப் பின்புலத்தில்தான் தமிழர் அரசியலில் வன்முறை விருப்பம் தீவிரமடைந்தது. ஆனால் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடும், இந்தியாவின் நேரடியான இராணுவத் தலையீடும் நிலைமைகளில் பெரும் மாற்றங்களை கோரியிருந்தது. அந்த மாற்றங்களை உள்வாங்கிச் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழர் தரப்புக்களுக்கு இருந்தது ஆனால் அது நடைபெற்றிருக்கவில்லை. கடந்த காலத்தை சுருக்கமாகப் பார்ப்பதானால் இப்படித்தான் நோக்க முடியும். நடந்து முடிந்தவைகள் அனுபவங்கள் மட்டும்தான். அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள மட்டுமே முடியும்.
ஆனால் இங்கு கேள்வி ஈழத் தமிழர் மத்தியிலிருந்த சிந்திக்கும் தரப்பினர், பல்கலைக்கழக சமூகம் என்போர், கல்விமான்கள் என்போர், சிவில் சமூகத்தினர் என்போர், மாற்றங்களை புரிந்து கொண்டு சிந்திப்பவர்களாக இருந்தனரா அல்லது எது பெரும்போக்கோ, எந்தத் தரப்பு மேலாதிக்கம் பெறுகின்றதோ – அந்த தரப்பின் நிலைப்பாடுகளோடு ஒத்தோடுபவர்களாக இருந்தனரா? மனச்சாட்சியுடன் சிந்தித்தால், இதற்கான பதில் என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும் அல்லவா! இன்று ஒரு தோல்வி ஏற்பட்ட பின்னர் தடுமாறிக் கிடக்கும் நாம், இந்தப் பேரழிவிற்கு பின்னால் நமது ஒத்தோடும் பண்பும் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளும் பக்குவத்தோடு இருக்கின்றோமா?
பேரழிவு ஒன்றை சந்தித்து, நிலைகுலைந்த பின்னரும் கூட, எங்களால் ஆரோக்கியமாக சிந்திக்கவோ, எங்களின் பிரதிதிநிதிகளை சரியாக தெரிவு செய்யவோ முடியாமல் இருக்கின்றது என்றால், அதன் பொருள் என்ன? இப்போது பிரச்சினை அரசியல்வாதிகள் அல்ல – அவ்வாறான அரசியல்வாதிகளை தெரிவு செய்யும் மக்கள்தான். ஒரு சமூகத்தின் முன்னேறிய பிரிவினர் என்போர்தான் அந்த சமூகத்தின் அரசியல் பாதையை தீர்மானிப்பதில் பெரிய பங்கை ஆற்றுகின்றனர் ஆனால் தமிழ்ச் சூழலிலோ முன்னேறிய பிரிவினர் என்போரோ, சாதாரன மக்களை விடவும் மோசமான நிலையில் இருப்பதாகவே தெரிகின்றது. கட்சிவாத குழுச் சண்டைகள், சாதி, பிரதேசம் என்னும் அற்பத்தனங்களுக்குள், தங்களின் மூளையை அடகு வைத்தவர்களாகவே இருக்கின்றனர். நிலைமை இவ்வாறிருந்தால், தமிழ் அரசியல் சூழலில் மாற்றம் எவ்வாறு நிகழும்?

யதீந்திரா