சில தினங்களுக்கு முன்னர் சில புகைப்படங்களை பார்த்தேன். தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மணோ கணேசனும் மற்றும், ஜனநாயக மக்கள் முன்னணியின் துணைத் தலைவர் பாரத் அருள்சாமியும், Observer Research Foundation, Vivekananda International Foundation – போன்ற, இந்தியாவின் முன்னணி சிந்தனைக் கூடங்களில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை பார்த்த போது, முதலில் மகிழ்ச்சி ஏற்பட்ட – கூடவே கவலையும் ஏற்பட்டது. நமது அரசியல் தலைவர்கள் என்போர் செய்ய வேண்டிய வேலை – ஆனால் செய்யவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் நமது தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளை நோக்கி இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்தேன். மனோவின் சந்திப்புக்களை அறிந்த போது, அதுதான் நினைவுக்கு வந்தது.
இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த போது, அடிக்கடி தான் ராஜதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறிக்கொண்டிருந்தார். கொழும்பில் பல நாட்களும், திருகோணமலையில் சில நாட்களுமாக இருந்து கொண்டு, எவ்வாறு ராஜதந்திரப் போர் புரிவது? இந்தக் காலத்தில், எனது எழுத்துக்கள் வழியாக ஒரு விடயத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றேன் – அதாவது, இந்தியாவை (புதுடில்லியை) நோக்கிச் செல்லுமாறும், இப்போது மனோகணேசன் மேற்கொண்டது போன்ற சந்திப்புக்களில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தியிருந்தேன். இந்தியாவை (புதுடில்லி) நோக்கிச் செல்வது என்பதுதான், ஈழத் தமிழர்களுக்கான ராஜதந்திரத்தின் அஸ்திபாரமாகும்.
அப்போது இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் புதுடில்லி நோக்கிச் செல்லும் அவசியத்தை கட்சிக்குள் வலியுறுத்தினார். அதற்கு சம்பந்தன் கூறிய பதில்தான் சுவார்சியமானது. நாங்கள் அப்படிச் செய்தால், சிங்கள மக்கள் கோபிப்பார்கள். பின்னர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தது போது, ஒரு முறை கூட உத்தியோகபூர்வமாக புதுடில்லி செல்லவில்லை. ஆனாலும் தங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு, கூட்டமைப்பு கேட்டுக் கொண்டேயிருந்தது. ஒருவாறு, அவ்வாறானதொரு வாய்ப்பை பிரதமர் மோடி, வழங்கினார். ஆனால் உலகத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத காரியத்தை சம்பந்தன் செய்தார் – “மாவையின் மகனுக்கு திருமணம்” என்று கூறி, வாய்ப்பை வேண்டும் என்றே நழுவவிட்டார். அதன் பின்னர் இன்றுவரையில் புதுடில்லியிலிருந்து அவ்வாறானதொரு அழைப்பு வரவேயில்லை – எனது பார்வையில் அவ்வாறானதொரு வாய்ப்பு வரப்போவதில்லை.
சம்பந்தன் வாழும் போது, அவர் ஆசைப்பட்டப்படியே, அவர் ஒரு போதுமே, சிங்கள மக்களை கோபப்படுத்தவில்லைதான் – ஆனால் ஏதாவது நன்மை விளைந்ததா – பதில் கூற எவரும் இல்லை.
மனோ கணேசன் சந்திப்பில் ஈடுபட்ட சிந்தனைக் கூடங்கள், இந்தியளவில் முக்கியமானவை. 2009இல் ஆரம்பிக்கப்பட்ட (Vivekananda International Foundation) விவேகானந்தா இன்ரநேசனல் பவுண்டேசன் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது பாரதிய ஜனதாக் கட்சிக்கு மிகவும் நெருக்கமானது. அதன் வெளிவிவகாரக் கொள்கைசார் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. தற்போது பிரதமர் மோடியின் நெருங்கிய சகாக்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான அஜித் குமார் டோவால்தான் இதனை நிறுவியவர்.
இதன் பணிப்பாளராக இயங்கிக் கொண்டிருக்கும் போதுதான், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இணைத்துக் கொள்ளப்பட்டார். தற்போது இதன் தலைவராக இருப்பவர் துக்களக் ஆசிரியர், ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளராக அறியப்படும், சுவாமிநாதன் குருமூர்த்தி. விவேகானந்தா இன்ரநேசனல் பவுண்டேசனின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள இது போதுமானது. இதை உணர்ந்துதான் மிலிந்த மொறகொட, அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றார். புதுடில்லியில் எத்தனையோ சிந்தனைக் கூடங்கள் இருக்கின்ற போது, மொறகொட ஏன் இதனை மட்டும், தெரிவு செய்து நட்பாயிருக்கிறார்? ஒரு வேளை நாளை, தான் ஜனாதிபதியாக வர முயற்சித்தால், பாரதிய-ஜனதா இந்தியாவின் ஆசீர்வாதத்தை, தனதாக்கிக் கொள்வதற்கு இவ்வாறான தொடர்புகள் அவசியமல்லவா – அதற்காக.
மலையக மக்களை பிரதிநித்துவம் செய்யும் மனோகணேசன் புதுடில்லியின் சிந்தனைக் கூடங்களில் சந்திப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வதாக் கூறிவரும், அரசியல்வாதிகளோ, தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலரோ, கர்நாடகா அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களோ, அருகிலுள்ள தமிழ் நாட்டிற்கே தண்ணீர் கொடுக்க முடியாதென்று சண்டைபோடுபவர்கள். இந்திய மத்திய அரசினாலேயே செய்ய முடியாத காரியங்களை, மானில அரசியல்வாதிகளிடம் கேட்குமளவிற்குத்தான், ஈழத் தமிழரின் அரசியல் மூளை வளர்ச்சியடைந்திருக்கின்றது.
நவீன ராஜதந்திர அரசியலில், சிந்தனைக் கூடங்களின் (think tanks) பங்கு வலுவானது – அதிலும் இந்தியா போன்ற (bureaucratic influence) அதிகாரப்பிரிவினர் வெளிவிவகாரக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் இடங்களில், பல்வேறு சிந்தனைக் கூடங்களில் இருப்பவர்கள்தான் ஆட்சிகள் மாறுகின்ற போது, உயர் வெளிவிவகாரப் பொறுப்புக்களில் நியமிக்கப்படுகின்றனர். இது மாறி, மாறி நிகழ்கின்றது. அமெரிக்காவின் முன்னணி சிந்தனைக் கூடங்களில் இருப்பவர்கள்தான் கொள்கைசார் பதவிகளுக்கு வருகின்றனர். அது ஆட்சியின் தன்மைக்கும், அவர்கள் அந்தக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கும் அமைவாக அமைகின்றது.
நமது சூழலுக்கும் சிந்தனைக் கூடத்திற்கும் எட்டாப் பொருத்தம் – ஆகக் குறைந்தது அது பற்றி விழிப்புணர்வு கூட அரசியலில் இருப்பவர்களிடம் இல்லை. தமிழ்ச் சூழலிலிருந்து, ஒரு மூலோபாய சிந்தனைக் கூடத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்தேன். தமிழர் வரலாற்றியேயே அவ்வாறானதொரு சிந்தனைக் கூடத்தை முதல் முதலாக, உருவாக்கியது நான்தான். இதன் மூலம் ஒரு சிந்தனைக் கூட அறிவுப்பாரம்பரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சித்தேன். இந்தப் பின்புலத்தில் நான் உருவாக்கியதுதான் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையம். ஆனாலும் அந்த முயற்சியில், இன்றுவரையில் முன்னோக்கி நகர முடியவில்லை காரணம் எமது அறிவாளர் சமூகத்தின் பரிதாப நிலைமையும், கோயில்களை கட்டுவதுதான், கொடையென்று எண்ணும் புலம்பெயர் சமூகத்தின் அறியாமையும்.
பார்வைகள் தொடரும் …
குறிப்பு : அரசியல்ரீதிலான உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆர்வமாக இருக்கின்றேன். உடனடியாக இல்லாவிட்டாலும் பதிலளிப்பேன். தமிழர் அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில், தொடர்ந்தும் பேசலாம் என்றிருக்கின்றேன். இது ஒரு அரசியல் கல்வியூட்டல் நடவடிக்கையாகும்.

யதீந்திரா