இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிரி வால்ட் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து, வெளியேறவுள்ளார். இந்த நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான டெலோ, அவருடைய கடந்த கால பணிகளுக்காக வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றது. இந்த சந்திப்பின் போது, தமிழ் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் தூதரக முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அந்த முயற்சியை தொடருமாறும், அதற்கு டெலோ ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்ததாக, டெலோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜக்கிய நாடுகள் சபை அமர்வின் போது சுவிட்சர்லாந்து தெரிவித்திருந்த கருத்துக்கள் இந்தியாவினால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டிருந்தன. இந்தியா சிறுபாண்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில், சுவிட்சர்லாந்தில் காணப்படும் இனவாதம், ஒழுங்குபடுத்தப்பட்ட பாரபட்சம், அன்னியர் வெறுப்பு போன்ற விடயங்களிலிருந்து விடுபடும் விடயத்தில் சுவிட்சர்லாந்திற்கு உதவுவதற்கு, தாம் தயாராக இருப்பதாக, இந்தியாவிற்கான பிரதிநிதி தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் இது ஒரு முக்கிய விடயமாக நோக்கப்பட்டது.
மேற்குல நாடுகள் தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தப் போவதாக கூறுவதை புதுடில்லி எவ்வாறு நோக்கும் என்பதும் கேள்வியே.
