வடக்கு மாகாண ஆளுனர் வேதநாயகன், இரண்டு உள்ளுராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்கியதாக வர்த்தமானி மூலம் அறிவித்தார். அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ் அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கின்றது என்னும் அடிப்படையில்தான், அவர் அதனை செய்திருக்கின்றார். ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒருவர், சாதாரணமாக மக்களின் தெரிவை இல்லாமலாக்க முடியுமா? அவ்வாறு செய்ய முடியும் என்றால் தேர்தல்கள் மூலம் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் பொருள் என்ன?
இந்தக் கேள்விகளின் அடிப்படையில் இந்த விடயத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டியது இன்றைய நிலையில் தமிழ் சமூகத்தின் சிந்திக்கும் தரப்பினரின் கடமையாகும். இது வெறுமனே ஆளுனரின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரமோ அல்லது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் நடத்தைகள் தொடர்பான விடயமோ அல்ல. மாறாக, அடிப்படையில் இது தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் தொடர்பானது.
மத்திய அரசின் பிரதிநிதிகளால், மாகாண அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது, ஈழத் தமிழ் அரசியல் தரப்புக்கள் வாய்மூடி இருக்க முடியாது. அப்படி இருக்கக் கூடாது. அந்த வகையில் மேற்குலக நாடுகளில் இயங்கும் தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் இது பற்றி குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறான கரிசனைகளை எங்குமே காண முடியவில்லை.
புலம்பெயர் சமூகமானது வடக்கு கிழக்கின் அரசியல் சூழலுக்கு பெரிய பங்களிப்பை வழங்கிவிட முடியாது. எதுவானாலும் அது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியிலிருந்துதான் வர வேண்டும். ஆனால் களத்தில் நிகழும் இது போன்ற நிகழ்வுகளின் போது, தார்மீகரீதியான இணைவை காண்பிக்க வேண்டும். இருக்கும் அதிகாரங்களின் மீதும் மத்திய அரசு கைவைக்க முற்படும் போது, அதற்கு எதிராக புலம்பெயர் சமூகம் குரல் எழுப்ப வேண்டும். இருக்கும் அதிகாரங்கள் எவ்வாறு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன என்பது பற்றி மேற்குல ராஜதந்திர சமுகத்துடன் உரையாட வேண்டும்.
இந்த அடிப்படையில்தான் களமும் புலமும் இணைய முடியும். அவ்வாறில்லாது சிலர் ஒன்று கூடிக் கலையும் கேளிக்கைகளுக்கு செலவழித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. கடந்த பதினேழு ஆண்டுகளாக அரசியல்ரீதியில் புலம்பெயர் சமூகம் ஒரு சிறு முன்னேற்றத்தையும் நிரூபிக்கவில்லை. இந்த அடிப்படையில் புலம்பெயர் சமூகம் அரசியல்ரீதியில் பங்களிப்பதற்கு ஒரு விடயம் இருக்கின்றது என்றால், அது இருக்கும் அதிகாரங்களை பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பது மட்டும்தான். மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படுவது ஒரு ஜனநாயக உரிமை மீறல் என்னுமடிப்படையில் புலம்பெயர் சமூகங்கள் வாழும் இடங்களிலிருந்து பரவலான குரல்கள் வெளிப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் அப்படி எதனையும் காண முடியவில்லை.
