புத்தர் ஒரு வேளை மீண்டும் வரலாம் ஆனால், அரசியல் தீர்வு என்னும் அதிசயம் நிகழப் போவதில்லை – அரசியல் ஆய்வாளர் யதீந்திரா

இலங்கையில் ஒரு வேளை புத்தர் மீண்டும் வரும் அதிசயம் நிகழ்ந்தாலும் கூட, தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றைத் தருவார்கள் என்னும் அதிசயம் நிகழப்போவதில்லை. இந்தப் பின்னணியில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை தாண்டிய ஒரு அரசியல் ஏற்பாடு இலங்கையில் சாத்தியமில்லை – இதனைப் புரிந்து கொண்டு தமிழ் கட்சிகள் செயற்பட வேண்டும். எங்களுக்குள் மாகாண சபை தொடர்பில் உரையாடுவது நல்ல விடயம்தான் ஆனால் எங்களுக்குள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. பல வருடங்களாக மாகாண சபைத் தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டுவருகின்றனர்.

இந்த நிலைமை தொடருமானால் மாகாண சபை முறைமையொன்று நாட்டுக்குத் தேவையில்லை என்னும் வாதமே பலமடையும். இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியத்தை ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்ற வேண்டும். மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கையை ஆட்சியாளர்கள் மீறி வருகின்றனர் என்னும் வாதத்தின் அடிப்படையில், மாகாண சபைக்கு ஆதரவான தென்னிலங்கை தரப்புக்கள், மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டும்.

இதற்கான தலைமைத்துவத்தை தமிழ் கட்சிகள் வழங்க வேண்டும் ஏனெனில் மாகாண சபை என்பது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விடயம். அதனைக் அமுல்படுத்தக் கோரும் உரிமை எவரையும் விடவும் எங்களுக்கே உண்டு.

இந்தியாவின் கரிசனையே இதுவரையில் மாகாண சபையை பாதுகாத்து வைத்திருக்கின்றது. ஒரு வேளை இந்தியா அதன் ஈடுபாட்டை கைவிடுமானால், அதன் பின்னர் மாகாண சபையும் இல்லாமல் போகவே வாய்ப்புண்டு. இவ்வாறு, அரசியல் ஆய்வாளரும், மூலோபாய கற்கைளுக்கான திருகோணமலை நிலையத்தின் நிறுவக பணிப்பாளருமான ஆ.யதீந்திரா தெரிவித்திருக்கின்றார்.

மாகாண ஆட்சியின் அவசியத்தை வலியுறுத்தி முல்லைத் தீவில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். ஜனநாயக தேசியக் கூட்டணியின் (டீ.ரி;.என்.ஏ) ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அரசறியவில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், பொறியியல் பேராசிரியர் சிவகுமாரன், யாழ் பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவர் திருமதி கோசலை மதன் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.