சீனாவின் நுரைச்சோலைக்கான நிலக்கரியால் இலங்கைக்கு 37 மில்லியன் டொலர் இழப்பு

தரமற்ற நிலக்கரி இறக்குமதி மோசடியால் இலங்கைக்கு 37 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவினால் முன்னெடுக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்திக்காக அண்மையில் 18 கப்பல்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

அதில் ஐந்து கப்பல்களில் நிலக்கரி அவசரகால விநியோகமாக கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. குறித்த ஐந்து கப்பல் சரக்குகளில் ஒன்றில் அதிக சாம்பல் உள்ளடக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஐந்து கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த நிலக்கரியும் தரமற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக அரசாங்கத்துக்கு 37 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நிலைமைகளை ஆராய்ந்திருக்கும் அரசாங்கம், நிலக்கரியை வழங்கிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கத் தீர்மானித்திருப்பதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்திருக்கின்றார்.