போதை வஸ்த்து சர்ச்சையில் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன்

தனிப்பட்ட பாவனைக்காக ஒருவர் குறிப்பிட்டளவான போதை வஸ்த்தை வைத்திருப்பது, குற்றமற்றதாக்கப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்திருப்பது, இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் சிலர் குகதாசனை முகநூலில் கண்டித்திருப்பதுடன், அவர் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

போதை வஸ்த்து பயன்பாடு தொடர்பான இலங்கையின் உத்தியை முற்றிலும் தண்டிக்கும் செயலாக்க மாதிரியிலிருந்து மாற்றியமைத்து, ஒருவர் தனது பயன்பாட்டுக்காக சிறிதளவு போதை வஸ்த்து வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும். கடந்த (26,யூன்) வெள்ளிக்கிழமை போதை வஸ்த்து ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும போதே, அவர் இவ்வாறு வலியுறுத்தியிருக்கின்றார். குகதாசனின் கூற்றுப்படி, ஒருவர் அவரது வீட்டில் தனிப்பட்ட பாவனைக்காக, ஜஸ் போதை வஸ்த்தை வைத்திருந்தாலும் கூட, அவர் குற்றமற்றவராக கருதப்பட வேண்டும். இது தொடர்பில் புதிய முரசிடம் பேசிய இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், குகதாசன், தான் கூறும் விடயத்தின் தார்ப்பரியத்தை அறியாமல், ஒரு விடயத்தை எவ்வாறு கூறுவது என்று தெரியாமல்தான் அவ்வாறு பேசியிருக்கின்றார் என்றார். இதனால் கட்சியின் பெயர்தான் கெடுகின்றது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

குகதாசன் நீண்டகாலம் கனடாவில் வாழ்ந்தவர். கனடிய தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஆதரவுடன், தமிழரசு கட்சியின் ஊடாக, அரசியலில் பிரவேசித்தவர்.