நேபாளத்தை வளைக்க முயலும் சீனா

கடந்த மார்ச் மாதம் நேபாளத்தில் ‘ராஷ்டிரிய ஸ்வதந்திரா கட்சி’ பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், நேபாள் வெளிவிவகார அமைச்சர் சிசிர் கானல் சீனாவிற்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

பிராந்திய சக்தியான இந்தியாவிற்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்தே, அவரது சீனப் பயணம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அயல்நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டுவரும் சீனா, நேபாளத்தின் புதிய ஆட்சியாளர்களுடனும் நெருங்கிச் செயற்படுவதற்கான வாய்ப்புக்களை தேடிவருகின்றது.

இந்த பின்னணியிலேயே, நேபாளத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, மின் உற்பத்தி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க சீனா உறுதியளித்துள்ளது.

சீனாவின் முலோபாயத் திட்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் நேபாளம் 2017இலேயே இணைந்திருந்தது – எனினும் சில இணக்கப்பாடுகளில் இழுபறிகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், சீனா எதிர்பார்த்தவாறு முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.