தமிழ் பேசும் சமூகங்களுக்கான கட்சிகளின் கூட்டு

இலங்கையில் தமிழ் பேசும் மக்களை பிரதிநித்துவம் செய்யும் தமிழ் கட்சிகள், பொது விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவது என்று தீர்மானித்திருக்கின்றன. இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழர் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் ஆரம்பகட்டமாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கின்றன. ஆனால் எந்த விடயங்களில் உடன்பட்டுச் செல்வது என்று தெளிவான புரிதல் இல்லாவிட்டால், இந்த இணக்கப்பாடு நிலைக்காது என்று அரசியல் நோக்கர்கள் புதிய முரசிடம் தெரிவித்தனர்.

ஏனெனில் கடந்த காலங்களில் இவ்வாறான இணக்கப்பாடு தொடர்பில் உரையாடப்பட்ட போதிலும் அவைகள் எவையுமே செயல் வடிவம் பெறவில்லை. குறிப்பாக ஈழத் தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள், தங்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வதில்லை ஆனால் ஏனைய கட்சிகள் தங்களுக்கு சாதகமான ஆட்சி அமையும் போது, அவற்றுடன் இணைய வேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவை. ஆனாலும் தேசிய மக்கள் சக்தி தொடர்பில் ஏற்பட்டிருக்கும் அச்சமே தற்போது இவர்களுக்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.