ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இடம்பெற்ற ஆர்மேனிய இனப் படுகொலையை, இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. 1915 – 1923 வரையான காலப்பகுதியில் ஒட்டோமான் பேரசில், ஆர்மேனிய மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப் படுகொலையையே இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றது. இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான விரிசல்கள் வலுவடைந்துவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
தெளிவான வரலாற்று ஆவணங்கள் இருக்கின்ற போதிலும் கூட, துருக்கி அரசு நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையில் வரலாற்றை திரிவுபடுத்தி வருவதுடன், அதனை ஒரு பிரச்சாரமாகவும் முன்னெடுத்து வருகின்றது என்று குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியான் சா’ ஆர், ஆர்மேனிய மக்களை அழித்தொழிக்கும் நோக்கில், மிகவும் திட்டமிட்ட வகையில் அவர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார்.
ஆர்மேனிய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையில் 15 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாத்தை தழுவுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆர்மேனியர்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள் என்னும் வாதத்தை, துருக்கி தொடர்ந்தும் எதிர்த்து வரும் நிலையில், அமெரிக்கா உள்ளடங்கலாக முற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அதனை அங்கீகரித்திருக்கின்றன.
