தென்னிலங்கை ஒரு போதும் தீர்வை தரப் போவதில்லை – அரசியல் ஆய்வாளர் யதீந்திரா

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல, எந்தவொரு தென்னிலங்கை ஆட்சியாளரும் ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைத் தரப் போவதில்லை. இதுதான் இலங்கையின் அரசியல் யதார்த்தம். அரசியல் தீர்வு தொடர்பில் சிந்திக்கும் போது நீங்கள் இரண்டு கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும். எதற்காக தென்னிலங்கை ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றைத் தர வேண்டும்? நீங்கள் விரும்பும் தீர்வை தராவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இவ்வாறு அரசியல் ஆய்வாளரும் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் நிறுவக இயக்குனருமான ஆ.யதீந்திரா தெரிவித்திருக்கின்றார். நேற்றைய தினம் (19.06.2026) திருகோணமலையில் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 36வது தியாகிகள் தின நிகழ்வில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச காலத்திற்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் காலத்திற்கும் இடையில் ஒரு ஒற்றுமையுண்டு. மகிந்தவின் காலத்தில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் யாரென்னும் கேள்வி இருந்தது – மகிந்தவா அல்லது கோட்டபாய ராஜபக்சவா என்னும் கேள்வி இருந்தது. இப்போதும் அவ்வாறானதொரு நிலைமை காணப்படுகின்றது. யார் உண்மையில் தீர்மானிப்பவர்? அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பினரா அல்லது ஆட்சியில் பங்குகொள்ளாது கட்சியை கட்டுப்படுத்தும் ஜே.வி.பின் செயலாளர் டில்வின் சில்வாவா? தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் ஒருவர், இந்த ஆண்டு தேர்தல் இடம்பெறும் என்கிறார் ஆனால் டில்வின் சில்வாவோ நடக்காது என்கின்றார்? இது எதனை காண்பிக்கின்றது. தொடர்ந்தும் மாகாண சபையை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளையே தென்னிலங்கை ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வந்தனர். தேசிய மக்கள் சக்தியும் அதன் தொடர்சியாகவே, செயற்படுவதாகத் தெரிகின்றது. தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை விவகாரம் இதற்கான சிறந்த உதாரணமாகும். இவ்வாறு யதீந்திரா மேலும் தெரிவித்திருந்தார்.