மாகாண சபையை ழுழுமையாக போராளிகளிடம் ஒப்படையுங்கள். நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன், கிளிநொச்சியில் உள்ள 40 வட்டாரங்களில், 13 வட்டாரங்கள் இன்று பேராளிகளின் கைகளில்தான் உள்ளன. அவர்களின் குடும்பங்களை மையப்படுத்தியே நாம் எமது அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். கிளிநொச்சி இன்று நிமிர்ந்து நிற்கின்றது என்றால், அதற்கு மாவீரர்களது தியாகமும் போராளிகள் சிந்திய இரத்தமுமே காரணம். இவ்வாறு இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருக்கின்றார். போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கல் நிகழ்வில் பங்குகொண்டு, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு கிழக்கு மாகாண சபையின் பொறுப்புக்களை போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கின்றேன் இத்தகைய வரலாற்றுப் பணியை செய்ய எல்லோரும் தயாரா என்றும் சிறிதரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இந்தத் தகவல் தொடர்பில் புதிய முரசிடம் பேசிய ஒருவர், இதன் மூலம் பிரபாகரனின் இறுதி விருப்பமும் மாகாண சபையாகத்தான் இருந்திருக்கின்றது என்பது தெளிவாகியிருப்பதாகத் தெரிவித்தார். ஏனெனில் இதுவரையான புரிதல் விடுதலைப் புலிகள் அமைப்பு மாகாண சபையை ஆதரிக்கவில்லை என்பதாகவே இருந்தது ஆனால் மாகாண சபையை முன்னாள் போராளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருப்பதானது இதுவரையான பார்வைகளின் மீது கேள்வி எழுப்பியிருக்கின்றது என்றும் அவர் புதிய முரசிடம் தெரிவித்தார்.
