திருமலையில் மேலும் 65000 ஏக்கர்கள் பறிபோகும் ஆபத்து.

திருகோணமலையில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் சுமார் 65000 ஏக்கர் நிலப்பகுதியை மீள்பரீசிலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசுரிய தெரிவித்திருக்கின்றார். அந்த நிலப்பகுதி 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் அவற்றை மீளவும் வழங்குவது அல்லது அதற்கு பதிலாக மாற்று காணிகளை வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமரசூரிய இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தியிருக்கின்றார். ஆனால் இதன் மூலம் மேலும் 65000 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படும் நிலைமையும் ஏற்படலாம். இதன் மூலம் ஏங்கனவே குறித்த திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் அவர்களது அதிகாரத்தின் கீழ் நிரந்தரமாக்கப்படலாம். அதனை எப்போதுமே மக்கள் கோர முடியாத நிலைமை ஏற்படலாம். குகதாசன், இந்த விடயத்தை முறையாக கையாளாமையால் அவ்வாறான ஆபத்துக்கள் இல்லையென்று கூறிவிட முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.