அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கிவரும், உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த அரசாங்கம் என்னும் புலம்பெயர் அமைப்பு, இருக்கின்றதா அல்லது கலைக்கப்பட்டுவிட்டதா என்பது கேள்வியாக இருந்த நிலையில், அவர்கள் தொடர்பில் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது.
சீனப் பல்கலைக்கழகமான (Chinese University of Hong Kong (CUHK LAW) ஹாங்காங் பல்கலைக்கழகத்தில், தமிழீழ அரசை நிறுவுவதற்கான சட்டரீதியான சர்வதேச ஏற்பாடுகள் மற்றும் அதிலுள்ள சவால்களை ஆராயும் நோக்கில், (கலாநிதிக் கற்கைக்கு பின்னரான) ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கான ஆய்வாளர் ஒருவரை எதிர்பார்ப்பதான விளம்பரம் வெளியாகியிருக்கின்றது.
இந்த ஆய்வு இலக்கை, குறித்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியரான அலெக்சாண்டர் கிரீன் மேற்பார்வை செய்யவுள்ளார். கிடைக்கும் தகவல்களின்படி, பேராசிரியர் கீரீனை இந்த விடயத்திற்காக நாடு கடந்த அரசாங்கமே அணுகியிருக்கின்றது.
இந்த விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு வேளை நீண்டகால அடிப்படையில் தனது புவிசார் அரசியல் ஆட்டத்திற்கு இலங்கை தமிழர் விவகாரத்தோடு இணைத்து, தென்னிந்தியாவையும் கையாளலாம் என்று சீனா கருதுகின்றதா, என்னும் சந்தேகத்தை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.
ஏனெனில் எத்தனையோ மேற்கு பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற போது, நாடுகடந்த அரசாங்கம் எதற்காக சீனப் பல்கலைக்கழகம் ஒன்றை நாட வேண்டும். இந்தக் கேள்வியே சந்தேகங்களுக்கான அடிப்படையாக இருப்பதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
