மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து, எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை கடுமையாக்க அரசாங்கம் ஆலோசனை

உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில், அதனை சமாளிப்பதில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக, எரிபொருளுக்கான கியூ.ஆர் ஒதுக்கீட்டு முறை கடுமையாக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வதால், பெருமளவிலான அந்நியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறுகிறது. ஜனவரியில் எரிபொருள் இறக்குமதிக்காக 186 மில்லியன் டொலர் செலவிடப்பட்டது. பெப்ரவரியில் அது 197 மில்லியன் டொலராக உயர்ந்தது. மே மாதத்தில் அது 524 மில்லியன் டொலராக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் வகைகளின் அனைத்துலக விலைகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படாவிட்டால், நாடு எரிபொருள் பற்றாக்குறையையும், விநியோக அமைப்பு சரிந்து விடும் அபாயத்தையும் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் சந்தை சரிவதைத் தடுக்கவும், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும் நாங்கள் விலைகளைத் திருத்த வேண்டியிருந்தது.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் 92-ன் விலையில் 80 சதவீதமும், டீசலின் விலையில் கிட்டத்தட்ட 79.81 சதவீதமும் அதீத உயர்வு பதிவாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அனைத்துலக சந்தையில் நிலவும் உண்மையான விலைகளுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டுச் சந்தைக்கு எரிபொருளை வழங்குவது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

ஏப்ரல் மாதம் நாங்கள் விலை திருத்தம் செய்தபோது, ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ. 100-ம், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு ரூ. 20-ம் அரசு மானியம் வழங்கியது.
மேலும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பிற எரிபொருள் வழங்குநர்களும் தங்கள் இலாபத்தை விட்டுக்கொடுத்து, நட்டத்தை ஏற்றுக்கொண்டு சந்தைக்கு எரிபொருளை வழங்கினர்.

இருப்பினும், ஏப்ரல் மாத இறுதியில், ஒரு லீற்றர் டீசலுக்கான உண்மையான செலவு ஏறக்குறைய ரூ. 750 ஆக இருந்தபோதிலும், அது ரூ. 392 என்ற விலைக்கு விற்கப்பட்டது.
அரசாங்கம் வழங்கிய மானியத்துடன், ஒரு லீற்றருக்கு ரூ. 250-க்கும் அதிகமான நட்டத்துடன் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

இந்த நட்டம், அனைத்து எரிபொருள் விநியோக நிறுவனங்களையும் பாதித்துள்ளது.
காலவரையின்றி நட்டங்களைத் தொடர்ந்து தாங்கிக்கொள்ள நாம் நிர்பந்திக்கப்பட்டால், எரிபொருள் வழங்குநர்கள் தங்கள் வணிகச் செயல்பாடுகளைத் தக்கவைத்துக் கொள்வது கடினமாகிவிடும்.

அதன் மூலம், எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகம் தடைபடும் அபாயம் உருவாகிறது.

எரிபொருள் சந்தையில் சரிவு ஏற்பட்டால், அதன் தாக்கம் போக்குவரத்துத் துறையை மட்டுமல்ல, மின்சார விநியோகம், தொழிற்சாலைகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

இந்தக் காரணத்திற்காகவே, தயக்கத்துடன் இருந்தாலும், உலகச் சந்தை விலைக்கும் உள்நாட்டுச் சந்தை விலைக்கும் இடையிலான இடைவெளியை ஓரளவிற்குக் குறைப்பதற்காக, மே 30 ஆம் நாள் எரிபொருள் விலைகளை நாங்கள் திருத்தி அமைக்க வேண்டியிருந்தது.

இருப்பினும், அந்தச் சுமை முழுவதுமாகப் பொதுமக்கள் மீது சுமத்தப்படவில்லை. அதன் பெரும்பகுதியை அரசாங்கம் தொடர்ந்து தாங்கிக்கொண்டிருக்கிறது.
மீதமுள்ள பகுதியை எரிபொருள் வழங்குநர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்த விலை உயர்வு பொதுமக்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.
இருப்பினும், இந்த முடிவு எடுக்கப்படாமல் இருந்திருந்தால், எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கக்கூடும்.

கியூஆர் (ஞசு) முறை மற்றும் ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் எரிபொருள் நுகர்வை கணிசமாகக் குறைக்க முடிந்த போதிலும், அது இன்னும் நாட்டின் தேவைகளுக்குப் பொருந்தும் அளவை எட்டவில்லை.

எனவே, தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் முறையை எதிர்காலத்தில் இன்னும் கடுமையாக அமுல்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும்.
இதன் நோக்கம், எரிபொருள் நுகர்வை ஓரளவிற்குக் குறைப்பதும், நாட்டிலிருந்து வெளியேறும் அந்நியச் செலாவணியின் அளவைக் குறைப்பதும், பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை ஓரளவிற்கு தணிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.