இந்தியாவின் திட்டங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது – பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த கடல்வழிப் பாலம், மற்றும் எரிபொருள் குழாய் இணைப்பு போன்ற பாரிய மூலோபாயத் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் முடக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் காரியவசம் குற்றம்சாட்டியிருக்கின்றார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் கூறிய விடயங்கள்.

இந்தியாவின் திட்டங்கள் மூலம் எமது நாட்டின் கட்டுமானத் துறைக்கும், எரிபொருள் பாதுகாப்புக்கும் கிடைக்கவிருந்த பில்லியன் கணக்கான டொலர் முதலீடுகளை இன்று நாடு இழந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 1 பில்லியன் டொலரை மட்டுமே நம்பியிருப்பது நாட்டை ஒருபோதும் முன்னோக்கி நகர்த்தாது.

தேர்தல் மேடைகளில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்துக்கு வந்தவர்கள், இன்று உலகளாவிய சவால்களையும் கச்சா எண்ணெய் விலை உயர்வையும் எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றார்கள். நிதி அமைச்சும் மத்திய வங்கியும் முறையான ஒருங்கிணைப்பு இன்றிச் செயல்படுவதையே தற்போதைய நிதி நிலைமைகள் காட்டுகின்றன.

நாங்கள் நாட்டைப் பாரிய நெருக்கடியில் இருந்து மீட்டு இவர்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் இவர்களின் தொலைநோக்கற்ற கொள்கைகளால் நாடு மீண்டும் ஒருமுறை படுகுழியில் விழுந்தால், அதற்கு இந்த அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
இனியாவது போலிப் பிரசாரங்களை நிறுத்திவிட்டு, ஆபத்துக்களை உணர்ந்து, பொருளாதாரத்தை முறையாகக் கையாள அரசு முன்வர வேண்டும் என எச்சரிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.