தமிழ் மக்களுக்கு எஞ்சியிருப்பது மாகாண சபை ஒன்றுதான். ஆனால் மாகாண சபை, முழுமையான அதிகாரமுடைய சபையாக இயங்கக் கூடாதென்னும் அடிப்படையிலேயே ஒவ்வொரு அரசாங்கமும் செயற்பட்டது.
இப்போது அந்த அரியாசனத்தல் தேசிய மக்கள் சக்தி. ஆனாலும் மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிப்பதிலுள்ள அரசியல் சிக்கல்களை கண்டு தென்னிலங்கை அஞ்சுகின்றது. அதனால்தான் இதுவரையில் எவரும் அதில் முழுமையாக கைவைக்க முயற்சிக்கவில்லை. அதனால்தான் இன்றுவரையில் மாகாண சபை முறைமை இருக்கின்றது.
ஆனால் அரசாங்கங்கள் கையாளும் உக்தி வேறு – அதாவது, மாகாண சபை முறைமையை அப்படியே வைத்துக் கொண்டு, அதனை உள்ளுக்குள்ளால் பலவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. இதில் கட்சிகளுக்கு நிறம் இல்லை. தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை விவகாரம் இதற்கான சமீபத்தைய உதாரணமாகும்.
மாகாண நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தெல்லிப்பளை புற்று நோய் பிரிவு அத்துடன் தெல்லிப்பளை ஆதார வைத்திசாலை ஆகியவற்றை, மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை ஆளுனர் அறிவித்திருக்கின்றார். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.
கூட்டத்தில் சமூகமளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமே அதனை எதிர்த்திருக்கின்றார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மாகாணத்தின் கீழிருந்த பாடசாலைகள், வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால் நமது ஊருக்கு, மாவட்டத்திற்கு வளங்கள் கிடைக்கும் தானே – அது நல்லது தானே – இப்படித்தான் ஒருவர் சிந்திப்பார். ஆனால் இங்கு கேட்க வேண்டிய கேள்வி – ஏன் அந்த வளங்களை இப்போதும் ஒதுக்கலாம்தானே – மத்திய அரசின் கீழ் கூடுதல் வளங்களை ஒதுக்க முடியும் என்றால் – ஏன் அதனை மாகாணத்தின் கீழ் ஒதுக்க முடியாது? இங்குள்ள அடிப்படையான பிரச்சினை வள ஒதுக்கீடு பற்றியது அல்ல – மாறாக, மாகாண நிர்வாகத்தை திறம்பட இயங்க அனுமதிக்கக் கூடாது என்னும் நோக்கம்தான் மேலோங்கியிருக்கின்றது.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மாகாண நிர்வாகம் பலமாக இருந்தால் மட்டும்தான், தமிழர் பகுதிகள் சமூக பொருளாதார அபிவிருத்தியை, தமிழர் தீர்மானிக்க முடியும். மாகாண சபையின் அதிகாரங்கள் குறைவாக இருந்தாலும் கூட – இருக்கும் ஒன்றை மெது மெதுவாக பலவீனப்படுத்தி, அதில் என்ன இருக்கின்றது – நாங்கள் மத்தியின் கீழ் இயங்குவதுதான் நல்லது – என்றவாறான அபிப்பிராயத்தை தமிழர்களைக் கொண்டே சொல்ல வைக்கும் முயற்சிதான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
இதற்கு தமிழர் ஆதரவளிப்பதானது, தங்கள் தலையில் தாங்களே மன்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கு சமமானது. இது தொடர்பில் வடபுல சிவில் சமூகம் ஏன் அமைதியாக இருக்கின்றது?
