அண்மையில் தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மணோ கனேசன், கனடாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அழைக்கப்பட்டிருந்தார். கனடிய தமிழ் புலம்பெயர் சமூகம், அவ்வப்போது சிலரை அழைப்பதும், அவர்கள் அங்கு அதிகம் பேசுவதெல்லாம், பல வருடங்களாக இடம்பெற்றுவரும் சங்கதிதான்.
அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை அனைத்து சிறுபாண்மை சமூகங்களும் ஒன்றிணைந்து கூட்டாக முன்வைத்தால், அது வெற்றியடையக் கூடிய வாய்ப்பு அதிகம் என்றும், அதுவே தனது எதிர்பார்ப்பு என்றும், அதுதான் தனது முக்கியமான செய்தி என்றும் கணேசன் தெரிவித்திருக்கின்றாராம். பேசுவது அரசியல்வாதிகளின் தொழில் ஆனால், அவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதுதான் சிந்திக்கும் தரப்பினரின் பணி.
இலங்கையின் தமிழ் மொழிச் சமூகங்கள் அதிகாரப் பகிர்வு விடயத்தில் ஒன்றுபட்டுச் செயற்படுவது நல்லதுதான். அப்போதும் கூட, அரசியல் தீர்வை அடைய முடியும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை, ஆனால் ஆகக் குறைந்தது கொழும்பின் மீது சில அழுத்தங்களை கொடுப்பதற்காவது அது பயன்படும்தான். எனவே அதனை நாம் ஆதரிக்கலாம் ஆனால் கேள்வி – ஏன் இன்றுவரையில் அவ்வாறானதொரு இணைவு சாத்தியப்படவிலலை?
யுத்தம் முடிந்து பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டதே – இந்த பதினேழு ஆண்டுகளில், அந்த நல்ல விடயம் ஏன் நடக்கவில்லை? இதற்கு என்ன காரணம்? ஒன்றுபட்டு செயற்பட்டால் நல்லது என்பதைச் சொல்வது இலகுவான – அதனை எவர் வேண்டும் என்றாலும் சொல்லிவிட்டுச் செல்லலாம் – கடந்த பதினேழு வருடங்களாக இதனைத்தான் பலர், மேடைக்கு மேடை சத்தமிட்டனர். ஆனால் எதுவும் நடக்கவில்லையே – ஏன்?
விடுதலைப் புலிகள் இருக்கின்ற காலத்தில் கூட மலையக அரசியல் தலைவர்கள் வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். முஸ்லிம் தலைவர்கள் வன்னிக்கு அழைக்கப்பட்டனர். உடன்பாடும் எட்டப்பட்டது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்த தருணம் பற்றி அண்மையில் ஹக்கீம் நினைவுபடுத்தியிருந்தார். ஜே.வி.பியின் தலைவர் றோகண விஜயவீரவின் (உண்மையில் ருகுணு விஜயவீர) மகனைப் போன்று, பிரபாகரனின் மகனும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அண்மையில் கூறியிருந்தார்.
உண்மைதான் பிரபாகரனின் மீதான வெறுப்பை, ஒரு சிறுவன் மீது காண்பித்தது மிலேச்சத்தனமானது. ஆனால் அவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்கள் நடந்த காலத்தில், ஹக்கீம் ஏன் அமைதியாக இருந்தார்? அவ்வாறான மிலேச்சத்தனங்களை புரிந்தவர்களோடு, ஆட்சியில் பங்குகொள்ளும் போது, இந்த ஞானம் ஏன் வரவில்லை?
சில வருடங்களுக்கு முன்னர் டெலோ – தமிழீழ விடுதலை இயக்கம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, கடிதம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டது. யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் கட்சிகள், புதுடில்லியை நோக்கி நேரடியாக ஒரு அழைப்பை விடுத்த சந்தர்ப்பம் அதுதான். இந்தக் கட்டுரையாளர் அப்போது அந்த முயற்சியை மிகவும் உறுதியாக ஆதரித்திருந்தார்.
அன்றைய சூழலில், சம்பந்தன் உடல்ரீதியாக தளர்வடைந்திருந்தார். ஒரு வேளை சம்பந்தன் இயங்கு நிலையில் இருந்திருந்தால், டெலோவினால் அவ்வாறானதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கவும் முடியாது. அந்த முயற்சி கூட முறையாக அணுகப்படவில்லை என்னும் விமர்சனத்தையும் இந்தக் கட்டுரையாளர் அப்போதே முன்வைத்திருந்தார்.
அந்த முயற்சியின் போது, ஆரம்பத்தில் ஹக்கிமும், மனோ கணேசனும் ஆதரவாக இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டனர். ஏன் விலகினர்? ஆரம்பத்தில் அரசியலமைப்பில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை அமுல்படு;த்தும் விடயம்தான் விவாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சம்பந்தனின் தலையீட்டைத் தொடர்ந்து கடிதத்தின் உள்ளடக்கம் மாறியது.
சமஸ்டி என்னும் சொல் உள்ளடக்கப்பட்டால்தான் தான் கையெழுத்திடுவேன் என்று அவர் அடம்பிடித்தார். சம்பந்தனை தவிர்த்து ஒரு கடிதத்தை அனுப்புவது பயனில்லை என்னனுமடிப்படையில், கட்சிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹக்கீமும் மனோ கணேசனும் அந்த முயற்சியிலிருந்து வெளியேறினர்.
சமஸ்டியை ஏற்றுக் கொள்வதில் மனோ கணேசனுக்கும் ஹக்கீமுக்கும் என்ன பிரச்சினை? சமஸ்டி என்பது நல்ல விடயம்தானே! இங்குதான் மனோ கணேசன், ஹக்கீம் போன்றவர்களின் வீரவேச அரசியல்-ஆமை திடிரென்று தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும். அதாவது, ஹக்கீமும், மனோகணேசனும் தென்னிலங்கையிலுள்ள ஒரு கட்சியுடன் இணைந்து அரசியல் செய்யும் நிலைப்பாடுடையவர்கள். சில வருடங்களாகத்தான் அவர்கள் அமைச்சுக்கள் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஈழத் தமிழ் தலைமைகளுடன் முற்றிலுமாக நின்றால் தென்னிலங்கையுடன் இணைந்த அதிகார அரசியலில் பங்கு கொள்ள முடியாமல் போய்விடும். அதற்கு இடையூறு ஏற்படும். இந்த அடிப்படையில்தான் சமஸ்டி அரசியலுடன் அவர்களால் ஒத்துப் போக முடியவில்லை.
இது இப்போது மட்டுமல்ல. தமிழர் விடுலைக் கூட்டணியின் உருவாக்கத்தின் போதும் நடந்தது. ஆரம்பத்தில், கூட்டணியுடன் உடன்பட்டிருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் – பின்னர், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த போது, அதிலிருந்து வெளியேறினார். ஏனெனில் அவ்வாறானதொரு அரசியலுடன் ஒத்துப் போனால், தன்னுடைய சமூகம் சார்ந்து, தென்னிலங்கையோடு பணியாற்ற முடியாதென்று எண்ணினார். அவர் அவ்வாறு எண்ணியதில் தவறில்லை. ஒவ்வொருவரும் அவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் பற்றித்தானே சிந்திக்க வேண்டும். இந்த வரலாற்றிலிருந்துதான் விடயங்களை நோக்க வேண்டும்.
இங்கு பிரச்சினை அனைத்து சிறுபாண்மை சமூகங்களும் அதிகாரப்பகிர்விற்காக ஒன்றுபட்டுச் செயற்படுவது பற்றியது அல்ல – மாறாக, எந்த அரசியல் தீர்வுக்காக செயற்படுவது என்பதில்தான் பிரச்சினையுண்டு. தற்போதுள்ள சூழலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும், அரசியலமைப்பில் உள்ளவற்றை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் மட்டும்தான் அனைத்து கட்சிகளும் ஒரு புள்ளியில் சந்திக்க முடியும், ஆனால் அந்த விடயத்தில் கூட ஒன்றுபட்டுச் செயற்படுவதாகத் தெரியவில்லை.
அடுத்த விடயம் – இவ்வாறு பேசுபவர்களின் அரசியல் ஒழுக்கம் பற்றியது. அதிகார அரசியலில் ஒழுக்கம் பற்றி விவாதிப்பது பொருத்தமில்லைதான் ஆனால் குறைந்தளவாவது ஒரு ஒழுக்க நிலைக்குள் வரக் கூடியவர்களால்தானே மற்றவர்களுடன் இணைந்து செயற்பட முடியும்.
இப்போதெல்லாம் எதிரணியிலுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள், தேசிய மக்கள் சக்தி பற்றி அதிகம் பேசுகின்றனர். எவர் ஆட்சியில் இருக்கின்றார்களோ அவர்கள் தொடர்பில் பேசுவதில் ஆச்சரியமில்லை. அது ஒரு அரசியல் இயல்பும் கூட. ஆனால் சிந்திக்கும் தரப்பினர் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி வேறு. அதாவது, இவர்கள் ஒரு ஆட்சியை சார்ந்திருந்த போது அப்போது எவ்வாறான முன்னேற்றங்கள் இடம்பெற்றன? ஏன் இடம்பெறவில்லை – அப்போது எவ்வாறான தடைகள் இருந்தன? அந்தத் தடைகளை அகற்றுவதற்காக இவர்கள் செய்தது என்ன?
யாரிந்த ஹக்கீம்? 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, அன்றைய சூழலில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கே பிரதானமானதாகும். முஸ்லிம்களின் பங்கும் இருந்ததுதான், என்றாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லாதுவிட்டால், அந்த ஆட்சி மாற்றம் சாத்தியப்பட்டிருக்காது. எவருடைய ஆதரவு இல்லாமல் ஒரு விடயம் சாத்தியமில்லையோ, அடிப்படையில் அவர்களே தீர்மானிக்கும் தரப்பினராவர். அந்த அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குகளே அன்றைய சூழலில் மைத்திரியின் வெற்றியில் தீர்மானகரமான வாக்குகளாகும்.
அந்த ஆட்சி மாற்றத்தால், தமிழ் மக்கள் அரசியல்ரீதியில் எவ்வாறான நன்மைகளை பெற முடிந்து என்றால், எதுவுமில்லை. ஆனால் மறுபுறமாக, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் ஆட்சி மாற்றத்தை உச்சபட்சமாக பயன்படுத்திக் கொண்டன. அமைச்சரவையில் அதிகாரமுள்ள இடங்களை எடுத்துக் கொண்டனர். 2010இல் ஜக்கிய தேசியக் கட்சிக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹக்கீம், சில மாதங்களிலேயே, மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து, நீதி அமைச்சரானார். மகிந்தவின் அரசியல் மாளிகையில் மயக்கத்தில் புரண்டு கொண்டிருந்தவர், பொது பல சேனா என்னும் அமைப்பால் சுயநினைவு பெற்றார்.
மகிந்தவின் அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த ஒருவர், தேசிய மக்கள் சக்தி தொடர்பில் விமர்சிக்க முடியுமா?
மனோ கணேசன் ஈழத் தமிழர்கள் தொடர்பில் தொடர்ந்தும் பேசிவருகின்ற ஒருவர்தான். ஆனால் அவரது அரசியலுக்கும் ஒரு எல்லையுண்டு. ஏனெனில் அவரும் தென்னிலங்கையின், ஒரு பிரதான கட்சியுடன் இணைந்து அரசியலை முன்னெடுப்பவர். அவர் வெளிப்படையாக பேசுபவராக இருந்த போதும் கூட, வெளிப்படையாகவே சிங்கள-பௌத்த நிலைப்பாடுகளை ஆதரித்துவரும் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துவருகின்றார்.
2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மைத்திரிபாலவின் ஆட்சியில் தேசிய உரையாடலுக்கான அமைச்சராக இருந்தார். உண்மையில் ஒரு தமிழரின் மூலம் தேசிய உரையாடலை முன்னெடுக்க முடியாது – ஆனால் அந்த அமைச்சில் அங்கம் பெற்றதன் ஊடாக எதனையும் செய்ய, செய்ய முடியாத அமைச்சராக வலம் வந்தார்.
எனவே இவ்வாறானவர்களின் பேச்சுக்கள் வெறும் பேச்சுக்கள் மட்டும்தான். புலம்பெயர் சூழலிலுள்ள அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களிடம் நிதியுண்டு. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சிலரை அழைத்து மகிழ்கின்றனர். அது ஒரு போட்டியாகவும் – அதே வேளை செருக்காகவும் மாறிவிட்டது. யுத்தம் முடிந்த காலத்திலிருந்து இதுதான் இடம்பெறுகின்றது.
ஆனால், பேச்சு பல்லக்கு தம்பி பொடி நடை என்பதற்கு அப்பால் எதுவும் நடக்கவில்லை. உண்மை – அப்படியொன்றும் நடக்காது, நடந்துவிடவும் முடியாது என்பதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம். ஆகக் குறைந்தது மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் கூட, அனைத்து தமிழ் மொழிச் சமூகங்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான சூழல் கனியவில்லை. அது தானாகக் கனியாது என்பது எந்தளவு உண்மையோ, அந்தளவிற்கு காய் எங்கு கனியுமே, அங்குதான் அதற்கான முயற்சிகள் இடம்பெற வேண்டும். மேற்குலக நகரங்களில் அல்ல.
