ஏம்.ஏ.சுமந்திரனை எதிர்த்தல் என்பது இலங்கை தமிழரசு கட்சிக்குள் புதிய விடயமல்ல – அதே வேளை வெளியிலும் அது புதிய விடயமல்ல. இந்த அடிப்படையில் நோக்கினால், தற்போது வெளிவந்திருக்கும் அறிக்கை ஆச்சிரியம் தரும் ஒன்றல்லதான். நேற்று வரையில் அமைதியாக இருந்த, இலங்கை தமிழரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளைக்கு திடிரென்று அரசியல் சுறணை எங்கிருக்கு வந்தது?
ஆறு தமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவதாக அறிவித்திருக்கும் பின்னணியில்தான், இவ்வாறானதொரு அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இலங்கை தமிரழசு கட்சி சார்பில், அதன் பொதுச் செயலாளராக சுமந்திரனே குறித்த கூட்டத்தில் பங்கு கொண்டிருந்தார். குறித்த கூட்டத்தில் பங்குகொண்டிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் சுமந்திரன் பொதுச் செயலாளராகவே பங்கு கொண்டிருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் குறித்த அறிவிப்பும் வெளியாகியிருக்கின்றது. இதில் சி.வி.கே.சிவஞானத்தை வெளியேறச் சொல்வது என்பது, சுமந்திரன் ஒப்பிரேசனின் ஒரு அங்கம்தான். இது ஒரு விடயத்தை அம்பலப்படுத்துகின்றது – அதாவது, தமிழரசு கட்சியின் தலைவருக்கான போட்டியிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றவர்கள் இருக்கின்ற போது, அனைத்திலும் தோல்வியுற்றவர் தமிழரசு கட்சியை பிரதிநித்துவம் செய்வதா! இந்த ஆவேசத்தின் அடிப்படையில்தான், ஒரு சிலரால் மேற்கொள்ப்பட்ட தூண்டுதலில் விளைவாகவே, குறித்த அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இந்தத் தூண்டுதலுக்கு பின்னால் – முக்கியமாக ஒருவரே இருக்கின்றார் என்பதை ஆராய்வதற்கு விசேட புலனாய்வு தேவையில்லை.
இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரம் இல்லாத போதும், கட்சியின் நிழல் தலைவராகவும் அதன் கிங் மேக்கராகவும் சுமந்திரனே இருக்கின்றார். சுமந்திரன் எதிர்ப்பு அணியின் பிரச்சினை இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றது. சுமந்திரனை எப்படியாவது தமிழரசு கட்சியிலிருந்து மட்டுமல்ல, தமிழ் அரசியலில் இருந்தே வெளியேற்றிவிட வேண்டும் என்று எண்ணுபவர்கள் கட்சிக்குள்ளும் இருக்கின்றனர், எதிரணியிலும் இருக்கின்றனர், புலம்பெயர் சூழலிலும் இருக்கின்றனர்.
தமிழரசு கட்சியின் தலைவர் போட்டிக்கான தெரிவின் மூலம், சுமந்திரனை அகற்றுவதற்கான திட்டம் கச்சிதமாக போடப்பட்டது. நான்தான் வெல்லுவேன் – அது மிகவும் சுலபமானது – என்னும் சுமந்திரனின் அளவுக்கதிகமான நம்பிக்கையும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. சுமந்திரன் சாதாரணமான வெற்றியை கற்பனை செய்து கொண்டிருக்க, அவர்களோ கச்சிதமாக அனைத்தையும் செய்து முடித்தனர். இது எந்தளவிற்கு சென்றது என்றால் – வாக்குரிமையுள்ள தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று, என்ன உங்கள் வீட்டுக்கு பெயின்ட் அடிக்கவில்லை போல, கதவும் பழசு போல கிடக்குது – இதை வச்சுக்கொள்ளுங்கள் – என்னுமளவிற்கு கிழக்கில் இரகசிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கிழக்கில் இவ்வாறு நன்மையடைந்தவர்கள், கட்சி சுவருக்கு வர்ணம் பூசுவதற்காவது பயன்படுகிறதே – கிடைச்சவரைக்கும் இலாபம்தான் என்று சோமபாண சந்திப்புக்களில் புலம்பியிருக்கின்றனர். விளைவு, சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டார். இதற்கு பின்னால் புலம்பெயர் பணம், தாராளமாகவே இறைக்கப்பட்டதாகவும் பலரது காதுகளுக்குள் குசுகுசுக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வளவு செய்தும் முடியாமல் போய்விட்டதே என்பதுதான் இப்போது அவர்களின் பிரச்சினை. என்ன வந்தாலும் ஒரு கை பார்ப்பதுதான் என்னும் சுமந்திரன் நிலைப்பாடும், அதில் சுமந்திரன் உறுதியாக இருப்பதும், சுமந்திரனை இலகுவாக விரட்டிவிடலாம் என்று கருதியவர்கள் அனைவரது முகத்திலும் கரியை பூசிவிட்டது.
ஒரு வேளை மாகாண சபைத் தேர்தல் நடந்தால், சுமந்திரன் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பது பெருமளவிற்கு உறுதியான ஒன்றாகவே தெரிகின்றது. அப்படி போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்தது போன்று, இங்கும் தோற்கடிக்க வேண்டும் என்னும் வெறியோடுதான் தற்போது அந்தக் குழுவினர் இருக்கின்றனர். கிடைக்கும் உள் தகவல்களின் படி, இது எப்படியிருக்கும் என்றால், 2015 நாடாளுமன்றத் தேர்தலின் போது, வடக்கு முதலமைச்சராக இருந்த சி.வி.விக்கினேஸ்வரன், எவ்வாறு தமிழரசு கட்சியில் இருந்து கொண்டே, மறைமுகமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டாரோ, அப்படியானதொரு நிலைமைதான் ஏற்படும். சுமந்திரனை தோற்கடிக்கும் நோக்கில் தமிழரசு கட்சியிலுள்ள – அந்த ஒருவர் சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றுவார்கள். இவர்களை அந்தக் குழு வழிநடத்தும். அவர்களுக்கு பின்னால் ஒரு புலம்பெயர் அணி வேலை செய்யும்.
சுமந்திரனை தோற்கடித்துவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர், இப்போது மாகாண சபையிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார் என்றால் – அதன் பின்னர் அவராகவே அரசியலில் இருந்து வெளியேறிவிடுவார் என்பதுதான் இவர்கள் போடும் கணக்கு.
இந்தக் குழுவிற்கு பின்னால் புலம்பெயர் மக்கள் மத்தியில் தன்னையொரு பிரபாகரன் விசுவாசியாக காண்பித்துக் கொண்டிருக்கும் ஊடக முதலாளியும் இருகின்றார். ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறான ஒருவர் இருந்ததற்கே சான்றில்லை. 2009இற் பின்னர், பல திடீர் புலிவிசுவாசிகள் முளைத்தார்கள். இதில் பணமுள்ளவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். மாவை சேனாதிராசாவை மயக்கி, தமிழரசு கட்சிக்குள் புகும் அவரது திட்டத்திற்கு சுமந்திரன் சாவுமணியடித்து விட்டதால், அவர் இப்போது மாகாண சபையையை இலக்கு வைத்திருக்கின்றாராம். இந்த ஊடக முதலாளியினால் நடத்தப்படும் இணையத் தளங்களில் அறிவு குறைவான “ஊடறுப்புக்கள்” மூலம், அவ்வப்போது சுமந்திரன் எதிர் புராணம் வாசிக்கப்படுவதும் இந்த அடிப்படையில்தான். இதற்கிடையில், தனக்கு பதவியுயர்வு கிடைக்கவில்லையே என்று வெளிநாடுகளில், கண்ணீர் சிந்திய ஒரு பிரமுகரை களமிறக்குவதன் ஊடாக, சுமந்திரனுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று யோசிக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.
