ஈரான் எண்ணெய் கப்பல்களை தடுத்த அமெரிக்கா – ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு

ஈரானை விட்டு வெளியேற முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் போர்க்கப்பல் இடைமறித்து திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அந்தக் கப்பல்களை, வானொலி தொடர்பு மூலம் அணுகிய அமெரிக்கப் போர்க்கப்பல், மீண்டும் திரும்புமாறு உத்தரவிட்டதாக ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகின் சுமார் 20மூ எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியிருப்பதை முடிவுக்கு கொண்டு வர அழுத்தம் கொடுப்பதே ட்ரம்பின் நோக்கமாகும்.

கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்க நிபந்தனைகளில், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதும் ஒன்றாகும். இதனை ஏற்கும்படி ஈரானை கட்டாயப்படுத்த இந்த முற்றுகை நடவடிக்கையை ட்ரம்ப் முன்னெடுத்திருந்தார்.
மேலும், அடுத்த வாரம் காலாவதியாகவுள்ள ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளிலும் இதுவும் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். “இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாக இல்லை. நாம் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்க மத்திய கட்டளை மைய அறிக்கையில், “ஓமான் வளைகுடாவில் உள்ள ஈரானிய துறைமுகத்திற்குத் திரும்புமாறு வழங்கப்பட்ட உத்தரவை பின்பற்றிய ஆறு வர்த்தகக் கப்பல்களில், இந்த இரண்டு எண்ணெய் கப்பல்களும் அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் நேரப்படி திங்கள்கிழமை காலை 10 மணிமுதல் (1400 GMT) இந்த முற்றுகை நடைமுறைப்பட்டது முதல் எந்தக் கப்பலும் அதை மீறிச் செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானுடன் தொடர்பில்லாத கப்பல்களின் சுதந்திரப் போக்குவரத்தை பாதுகாக்கும் முயற்சியும் தொடரும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முற்றுகையை ட்ரம்ப் அறிவித்தார்.