வெனிசுவேலாவின் தலைநகர் கரகாஸ் நகரில் நேற்றையதினம்(5) மாலை துப்பாக்கிச் சத்தமும், வான்வழி பாதுகாப்பு துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றதாக வெளியாகிய காணொளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள காணொளிகளில், கரகாஸ் வானில் வான்வழி பாதுகாப்பு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், வேறு ஒரு காணொளியில் துப்பாக்கிச் சத்தமும் கேட்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தலைநகரில் உள்ள பாதுகாப்பு அணிகளுக்கிடையே ஏற்பட்ட குழப்பமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள உர்தனெட்டா அவென்யூ பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதுகுறித்து வெனிசுவேலா தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அனுமதியின்றி பறந்த ட்ரோன்களை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்” என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவித மோதலும் நடைபெறவில்லை. நாடு முழுவதும் நிலைமை அமைதியாக உள்ளது” என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி அளித்த தகவலில், வெனிசுவேலாவில் இருந்து வரும் துப்பாக்கிச் சத்தம் தொடர்பான தகவல்களை அமெரிக்கா கவனமாக கண்காணித்து வருவதாகவும், “இந்த சம்பவங்களில் அமெரிக்கா எந்தவிதத்திலும் ஈடுபடவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
