வெனிசுலாவின் மீதான இராணுவ நடவடிக்கை பிராந்திய மேலாதிக்கத்ததை புதுப்பிக்குமா?

வெனிசுலா விவகாரம்தான் இன்றைய நிலையில் உலகளவில் முக்கியமான விவாதப் பொருளாகும். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், விசேட இராணுவ நடவடிக்கை ஒன்றில் மூலம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோவை கைது செய்து, அமெரிக்காவிற்குள் கொண்டு சென்றது. தற்போது அவர் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றார். இந்த நடவடிக்கை வழமைபோல், சர்வதேசளவில் கண்டனங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வதேச சட்டங்களின் வழியாக விடயங்களை நோக்குபவர்கள் இது ஒரு அப்பட்டமான மீறல் என்று கூறிவருகின்றனர். ஆனால் யதார்த்தமோ இவ்வாறான விமர்சனங்களுக்கு அதிக தொலைவில் இருக்கின்றது. ஏனெனில் சர்வதேச அரசியலை சர்வதேச சட்டங்கள் வழிநடத்துவதில்லை. அதற்கு மாறாக, உலக அதிகார சக்திகளின் நலன்களே உலக அரசியலை நகர்த்தும் அச்சாணியாக இருக்கின்றது. வெனிசுலா விவகாரம் மீண்டும் ஒரு முறை இதனை வெளிப்படுத்தியிருக்கின்றது.
இது தொடர்பில் அமெரிக்காவிலும் கூட ஏராளமான விமர்சனங்கள் உண்டு. சிலர் இதனை, ஜனாதிபதி ட்ரம்பின் எதேச்சாதிகார அணுகுமுறை என்று வர்ணிக்கின்றனர். பொதுவாக அமெரிக்காவின் நகர்வுகளை அந்தக் காலத்தில் ஜனாதிபதியாக இருப்பவர்களை முன்வைத்துத்தான் நோக்குவதுண்டு. ஆனால் அது சரியான பார்வை அல்ல. ட்ரம்ப் என்னும் ஒரு தனிநபர் மிகவும் பலமான அமெரிக்க கட்டமைப்பை மீறி, அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயற்பட முடியுமா? காலத்திற்கு காலம் அமெரிக்க ஜனாதிபதியாக வருபவர்கள், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்கான பாதுகாவலர்களாக மட்டுமே தொழிற்படுகின்றனர். அடிப்படையில் ஒரு குறிப்பி;ட்ட காலத்தை கையாளுவதற்காக, அந்தக் காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதற்கு தலைமையேற்கும் காரியத்தையே அவர்கள்; செய்கின்றனர். இது ட்ரம்பிற்கான காலம்.
1989இல், அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஸ், பனாமாவின் மீதான இராணுவ நடவக்கையை மேற்கொண்டு, சர்வாதிகாரியான மானுவல் நொரியோகாவை அகற்றினார். கைது செய்யப்பட்ட நொரியேகா 40 ஆண்டுகள் அமெரிக்கச் சிறையில் இருந்தார். பனாமா கால்வாய் தொடர்பில் அமெரிக்காவுடனான உடன்பாட்டை மீறியமை, அமெரிக்காவிற்குள் போதை வஸ்த்தை கடத்தியமை, அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவரை கொன்றமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே, புஸ் நிர்வாகம் பனாமாவின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.
35 வருடங்களின் பின்னர் அவ்வாறானதொரு நடவடிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டிருக்கின்றது. அப்போது போல், இப்போதும் கண்டனங்கள் தாராளமாகவே முன்வைக்கப்படுகின்றன. அப்போது போல், இப்போதும் – இது நாடுகளின் இறைமையை மீறும் செயல் என்று ஜக்கிய நாடுகள் சபை கண்டித்திருக்கின்றது. ட்ரம்ப் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், முதலில் நடவடிக்கை பின்னர் நிலைமையை ஒழுங்கமைத்தல் என்னும் அடிப்படையிலேயே விடயங்களை கையாள முற்படுகின்றது. ஏனெனில் இவ்வாறான விடயங்கள் சிறிது காலத்திற்கு மட்டும்தான் பரப்பரப்பாக பேசப்படும், பின்னர் புதிய அரசியல் கொந்தளிப்புக்களால் காணாமல் போய்விடும். பனாமாவின் மீதான படையெடுப்பு, ஈராக் விவகாரம் தொடர்பில் இப்போது பேசப்படுகின்றதா – இல்லைதானே!
வெனிசுலாவின் மீதான இராணுவ நடவடிக்கையானது, புஸ் நிர்வாகத்தின் பனாமா நடவடிக்கையை நினைவூட்டினாலும் கூட, சில வேறுபாடுகளும் உண்டுதான் ஆனால் சில அடிப்படையான ஒற்றுமைகள் உண்டு.
மதுராவை ஆட்சியிலிருந்து வெளியேறுமாறு ட்ரம்ப் தொடர்ந்தும் வலியுறுத்திவந்தார். அவரது முதலாது ஆட்சிக்காலத்திலும் வெனிசுலா மீதான இராணுவ நடவடிக்கையை ஆலோசித்தார். தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகத்தின் நகர்வுகள் தடைப்பட்டது. ஆனால் பொருளாதாரத் தடைகள், உள்ளக ரீதியான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் பலனளிக்காத போது அடுத்து என்ன செய்வது என்னும் கேள்விக்கான பதில் எப்போதும் ஒன்றே ஒன்றுதான் – அது இராணுவ நடவடிக்கை.
பனாமா விடயத்திலும் கூட அப்போதைய ரீகன் நிர்வாகம், இராஜதந்திர வழிகளில் சர்வாதிகாரி நொரியேகாவை அகற்றுவதற்கு முயற்சித்தது. அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த புஸ் அதனை கடுமையாக ஆட்சேபித்திருந்திருந்தார். 1989இல் இடம்பெற்ற தேர்தலில் வழமைபோல் மோசடிகளை செய்து, தேர்தலில் வெற்றிபெற்றவர்களை அச்சுறுத்தி, தனது பாடசாலைத் தோழன் ஒருவரை ஜனாதிபதியாக அறிவித்தார். இந்தப் பின்புலத்தில், பலப் பிரயோகம் ஒன்றே அமெரிக்காவிற்கான தெரிவாக இருந்தது. வெனிசுலா விடயத்திலும் இதுதான் நடந்திருக்கின்றது.
1999இல், சோசலிச அடையாளத்தை முன்னிறுத்திய ஹியூகோ சாவேஸ் தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, வெனிசுலாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு நெருக்கடிமிக்கதாக மாறியது. சாவேஸ் அமெரிக்க எதிர்ப்பை தனது பிரதான அரசியலாக முன்னெடுத்தார். அமெரிக்காவின் எதிரி நாடான ஈரானுடனும், போட்டியாளரான சீனா மற்றும் ரஸ்யாவுடனும் நெருக்கத்தை பலப்படுத்தினார். கியூபாவுடன் இணைந்து, அமெரிக்க எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பரந்த கூட்டணி ஒன்றை ஏற்படுத்த முயற்சித்தார். இந்தப் பின்னணியில்தான், 2002இல், அமெரிக்க ஆதரவுடன் சாவேஸை அகற்றும் சதிப் புரட்சியொன்று இடம்பெற்றது. அது தோல்வியடைந்தது. 2013இல் சாவேஸ் இறந்ததைத் தொடர்ந்து, நிலைமை இன்னும் மோசமடைந்தது. எவ்வாறு பனாமாவில் தேர்தல் மோசடிகளைச் செய்து ஆட்சி தக்கவைக்கப்பட்டதோ, அவ்வாறானதொரு வழியிலேயே மதுரோவும் நடைபோட்டார். 2018இல் இடம்பெற்ற தேர்தலில் மோசடி வழிகளின் மூலம் தனது அதிகாரத்தை தக்கவைத்தார். இதனைத் தொடர்ந்து அப்போதைய ட்ரம்ப் நிர்வாகம் மதுரோவின் ஆட்சியின் மீது அதியுச்ச அழுத்தங்களை பிரயோகித்தது. மதுரோ ஆட்சியிலிருந்து வெளியேறி ஜனநாயகத்திற்கு இடமளிக்க வேண்டும் என்று ட்ரம் நிர்வாகம் வலியுறுத்தியது.
2024இலும், மதுரோ தேர்தலில் தோல்வியடைந்தார் ஆனால் மோசடி வழிகளை பிரயோகித்து அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டார். அப்போதைய ஜனாதிபதி பைடன் நிர்வாகம் எதிரணியில் வெற்றிபெற்ற எட்முண்டோ கோன்சாலஸையே உத்தியோகபூர்வமான ஜனாதிபதியாக அறிவித்தது. 2024 நொவம்பரில் ட்ரம் மீண்டும் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து வெனிசுலா விவகாரம் தொடர்பான நிலுவை விடயங்கள் மீளவும் வெள்ளை மாளிகையின் முதன்மை விடயமானது. மிகவும் மோசமான போதைவஸ்த்து பயங்கரவாதியாக மதுரோ அறிவிக்கப்பட்டார். மதுரோவின் தலைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விலை விதிக்கப்பட்டது. ராஜதந்திர வழிமுறைகளில் மதுரோவை அகற்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில், ஒக்டோபர் 2025இல், ட்ரம்ப் வெனிசுலாவுக்குள், CIA இரகசிய நடவைடிக்கைளில் ஈடுபடுவதற்கான உத்தரவை வழங்கினார். சீனாவை ரஸ்யாவை வைத்து கடுமையாக நடந்து கொள்ளலாம் என்று எண்ணாமல் மதுரோ உடன் பதவி விலக வேண்டும் என்று டிசம்பர் மாதத்திலும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். நடவடிக்கை இடம்பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும் கூட, தனிப்பட்ட தொலை பேசி உரையாடலில், மதுரோவை பதவியிலிருந்து வெளியேறுமாறு ட்ரம்ப் அறிவுறுத்தியதாக, அமெரிக்க ஊடகமொன்று குறிப்பிடுகின்றது.
ராஜதந்திர அணுகுமுறைகள், பொருளாதாரத் தடைகள் அனைத்தும் பலனளிக்காத பின்னணியிலேயே வோசிங்கடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் பனாமாவின் மீதான இராணுவ நடவடிக்கைக்கும் வெனிசுலாவின் மீதான இராணுவ நடவடிக்கைக்கும் இடையில் அதிக ஒற்றுமையுண்டு.
இவ்வாறான வரலாற்றுத் நகர்வுகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுவதுண்டு. அமெரிக்கா ஏன் இவ்வாறானதொரு நகர்வை மேற்கொண்டது? வெனிசுலாவின் பிரமாண்டமான எண்ணெய் வளமே இதற்கான காரணம் என்பதே பலரது பதிலாக இருக்கின்றது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. இது அமெரிக்க செல்வாக்கிற்குட்பட்ட மேற்கு அரைக் கோளப் பிராந்தியம் (Western Hemisphere) இங்குள்ள வளங்களை எங்களுடைய எதிரிகளும் போட்டியாளர்களும் கொண்டு செல்ல முடியாது. அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக்கல் ரூபியோவின் வார்த்தையில், “எண்ணெய் அல்ல பிரச்சினை ஆனால் அது அமெரிக்காவின் எதிரிகள் போட்டியாளரை நோக்கிச் செல்வதுதான் பிரச்சினை. அதே வேளை, அமெரிக்க துணை ஜனாதிபதி, இது எங்களுடைய செல்வாக்கு வளையமாகும், சீனா, ஈரான் ரஸ்யா வெளியில் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் வெனிசுலாவின் மீதான வோசிங்டனின் இராணுவ நடவடிக்கை, மேற்கு அரைக்கோளத்தின் மீதான அமெரிக்காவின் பழைய பனிப்போர்கால அணுகுமுறைக்கு திரும்பும் போக்கிற்கான சான்றாகும். நீண்டகாலமாக இந்தக் கொள்கையிலிருந்து அமெரிக்க நிர்வாகம் எட்ட நின்றது. இனி அவ்வாறு எட்ட நிற்க முடியாது. அந்தக் காலம் முடிந்துவிட்டது. எங்களுடைய பிராந்தியத்திற்குள் உங்களுக்கு வேலையில்லை, வெளியில் செல்லுங்கள் என்பதே ட்ரம்ப் நிர்வாகத்தின் அறைகூவலாகும்.
2015 டிசம்பரில் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மூலோபாய அறிக்கையில் இந்த விடயம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில் அமெரிக்கா மீண்டும் மன்றோ கோட்பாட்டுக்கு திரும்புகின்றது. ஜனாதிபதி ட்ரம் இதனை, “டோன்ரோ கோட்பாடு” (Donroe Doctrine) என்று வரையறுக்கின்றார். மேற்கு அரைக்கோளம் என்பது அமெரிக்காவின் செல்வாக்கிற்குட்பட்ட பிராந்தியம் என்னுமடிப்படையில், ஜரோப்பிய அதிகாரங்கள் இங்கு செல்வாக்குச் செலுத்த முடியாது என்னும் கொள்கை நிலைப்பாடுதான், (Monroe Doctrine) மன்றோ கோட்பாடாகும். அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் மன்ரோ 1823இல் இதனை அறிமுகம் செய்தார். 1904இல், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் – தங்களின் பிராந்தியத்தில் சர்வதேச பொலிஸ்காரராக தொழிற்படும் உரிமை அமெரிக்காவிற்குண்டு என்று அறிவித்தார். இந்தப் பிராந்தியத்தில் தீய விடயங்கள் இடம்பெறுமானால், லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது தலையீடு செய்யும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு என்னுமடிப்படையில் மன்றோ கோட்பாட்டை விரிவுபடுத்தினார்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால், ட்ரம்ப் நிர்வாகமானது, முன்னைய சர்வதேச பொலிஸ் நிலைப்பாட்டுக்கு திரும்பியிருக்கின்றது என்னும் அறைகூவலே வெனிசுலாவின் மீதான இராணுவ நடவடிக்கையாகும். 1933இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட்,“நல்ல அயலவர்கள்” என்னும் கோட்பாட்டை அறிமுகம் செய்தார். இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்னும் நிலைப்பாட்டை முன்வைத்தார் ஆனால் அதன் பின்னர் உருவாகிய அமெரிக்க – சோவியத் பணிப்போர் அரசியலானது, இந்தக் நிலைப்பாட்டை அதிக காலத்திற்கு அனுமதிக்கவில்லை. சோவியத் செல்வாக்கிற்குள் லத்தீன் அமெரிக்க நாடுகள் வீழ்ந்துவிடும் என்னுமடிப்படையில்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க உளவுத் துறை நிழல் யுத்தங்களை நடத்தியது. பல ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தியது, அழித்தது, பல சதிப்புரட்சிகளுக்கு போசகர்களாக இருந்தது. இது பற்றி CIA வெளியிட்ட ஆவணங்களே இருக்கின்றன.
இங்கு பிரச்சினை ஒரு பெரிய நாடு நல்ல அயலவராக இருப்பதுடன் பிரச்சினை முடிந்துவிடுவதில்லை என்பதுதான். குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருக்கும் சிறிய நாடுகளும் பெரிய நாட்டிற்கு நல்ல அயலவராக இருக்க வேண்டியது கட்டாயமானது. அவ்வாறான நிலைமை இல்லாத போது அதிகாரத் தலையீடுகள் தவிர்க்க முடியாதவையாகும். அமெரிக்கா உலகில் இருக்கும் ஒரேயோரு மேலாதிக்க அதிகாரமாகும். (Hegemonic power) எனவே அதன் நீண்டகால நலன்களின் அடிப்படையில் காலத்திற்கு காலம் இவ்வாறான தலையீடுகளை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், இந்த அதிகாரத்திற்கான சதுரங்க ஆட்டம் வெனிசுலாவுடன் முடிந்துவிடாது. ஆனால் அமெரிக்காவின் நகர்வானது, முன்னைய பனிப்போர் கால பிராந்திய மேலாதிக்கத்திற்கான பச்சைக் கொடியாகவும் மாறலாம் என்பதுதான் விடயம். அன்றைய பனிப்போர் கால அரசியல் நிர்பந்தங்கள்தான், இந்திராகாந்தி நிர்வாகம் அயல்நாடுகளின் மீதான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியது. வெனிசுலா விவகாரம், மீண்டும் பிராந்திய மேலாதிக்கத்திற்கான அவசியம் தொடர்பான உரையாடல்களை தூண்டலாம். ஏனெனில் இப்போது சோவியத் யூனியனின் இடத்தில் சீனா நோக்கப்படுகின்றது.