அமெரிக்காவின் பெரும் செல்வந்தரும் தொழிலதிபருமான எலான் மாஸ் (Elon Musk) அண்மையில் மீண்டும் ஒரு உலகப் போரொன்றை சந்திப்பதற்கு நாடுகள் தயாராகின்றன எனக் குறிப்பிட்டிருந்தார். அவ்வகைக் கருத்தினை சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய உரையாடுகிற ஜோர்ஜ் ஃப்ரீட்மேன் (George Friedman), றிச்சட் வேல்ப் (Rechard D.Wolff ) மற்றும் தோமஸ் பிக்கட்டி (Thomas Piketty) போன்ற பலர் முன்வைத்து வருகின்றனர். அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகம் ஒரு போருக்குள் நுழைந்து விடக்கூடாது என செயல்படுவதாக கூறி வருகின்றனர். ஐரோப்பாவில் போருக்கான தயார்படுத்தலும் பயிற்சியும் ஆயுதங்களின் குவிப்புகளும் தொடங்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவுடன் இணைந்திருக்கும் நாடுகள் அத்தகைய போர் பயிற்சிக்கான கோரல்களை மக்கள் முன் வைத்திருப்பதோடு, போர் வீரர்களை பயிற்சிக்கு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஐரோப்பா முழுவதும் போர் முகம் ஒன்றுக்கான அடையாளம் இனம் காணப்படுகிறது. அதற்கான அடிப்படைகளை ஆழமாக உரையாடுவது அவசியமானது.
முதலாவது, ஐரோப்பா பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஒன்றை முகம் கொடுத்து வருகிறது. உலகத்தின் இருதய நிலம் என அழைக்கப்பட்ட ரஷ்சியாவுடனான முரண்பாடு மேற்கு ஐரோப்பியர்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக உக்கரையின் மீதான ரஷ;சியப் போர் மேற்குலகத்தின் உற்பத்திப் பொருளாதாரத்தையும் வளத்தையும் வாய்ப்புகளையும் இல்லாமல் செய்துள்ளது. நேட்டோ விஸ்தரிப்பு என்ற பெயரில் இருதய நிலத்தை சுற்றி வளைக்கும் முயற்சித்த மேற்குலகம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. இதனால் ரஷ்சியா மீது அச்சுறுத்தலை அல்லது ரஷ்சியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது ஐரோப்பிய ஆட்சியாளர்களின் இருப்புக்கு நெருக்கடியாகியுள்ளது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களை ரஷ்சியாவுக்கு எதிராக அணி திரட்டுவதில் மேற்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அடிப்படையில் அவர்கள் வகுத்த இராணுவ ரீதியான கொள்கைகளும் உபாயங்களும் தோற்றுப் போகின்ற சூழலில் தோல்விக்கான காரணங்களை கண்டறிவதை விடுத்து ரஷ்சியாவை நோக்கி எதிர்ப்பு உணர்வையும் ரஷ்சியாவின் நடவடிக்கை ஐரோப்பாவை ஆக்கிரமிக்க போகிறது என்ற அச்சத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். இதுவே மேற்கு ஐரோப்பிய நாடுகளின் போருக்கான திட்டமிடலாக உள்ளது. இதனை கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் திசைதிருப்புவதில் வெற்றி கண்டு வருகின்றன. குறிப்பாக பால்டிக் நாடுகளை ரஷ்சியா ஆக்கிரமிக்கக் கூடிய வாய்பு அதிகமுள்ளதாகவும் ரஷ்சியா ஹப்பசொனிக் ஏவுகணைகளையும் குறுந்தூர ஏவுகணைகளையும் உற்பத்தி செய்யும் எண்ணிக்கையை அதிகர்த்து வருவதாக The Economic Times குறிப்பிட்டுள்ளது. ரஷ்சியாவை சூழ இருக்கும் நாடுகளை எச்சரிக்கை செய்து அவற்றை போருக்கு தயார்படுத்தி வருகின்றன. பால்டிக் நாடுகள் ரஷ்சியாவை சூழவுள்ள பகுதியில் சதுப்பு நிலங்களை (Bog Belt) உருவாக்க தொடங்கியதுடன் ரஷ்சியாவுடனான கண்ணிவெடி அகற்றும் உடன்பாட்டிலிருந்து லத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா, பில்லாந்து மற்றும் போலந்து என்பன விலகியுள்ளன. இது அடிப்படையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நலன்கள் சார்ந்த கிழக்கு ஐரோப்பாவுடன் கைகோர்த்துக் கொண்டு ரஷ்சியாவையும் அதன் இருப்பையும் அழித்து விடுவதற்கான உத்தியாகவே காணப்படுகிறது.
இரண்டாவது ஐரோப்பியர்களுடைய மேலாதிக்கும் கீழ்த்தேச நாடுகளின் எழுச்சி இன்னோர் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது மறைமுகமான எகாரணமாகவே கொள்ளப்பட வேண்டும். சீன இந்தியா ரஷ்சியா தென்னாப்பிரிக்கா பிரேசில் போன்ற நாடுகள் மேற்குலக பொருளாதார இராணுவ வாய்ப்புகளுக்கு எதிராக கீழைத்தேச பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் பலப்படுத்திவருகின்றன. இது மேற்கு நாடுகளின் பொருளாதார வாய்ப்புகளை சிதைக்கின்ற வகையில் ஆசிய ஆபிரிக்க இலத்தினமெரிக்க கண்டங்களில் பாரிய பொருளாதாரம் பிணைப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இது மேற்கு ஐரோப்பியர்களின் கடந்த பல நூற்றாண்டு கால ஆதிக்கத்தின் பலவீனமாக மாறியுள்ளது. இதனால் ஐரோப்பியரது ஆதிக்கங்கள் முடிவுக்கு வரும் சூழல் ஒன்றை மேற்குலகம் எதிர்கொண்டு வருகிறது. ஐரோப்பாவின் வளங்களும் வாய்ப்புகளும் பொருளாதார பலமும் கிழக்தேசத்தின் மீதான சுரண்டலே அடிப்படை காரணமாக அமைந்திருந்தது. அத்தகைய சுரண்டலுக்கு நெருக்கடி ஏற்படுகிறபோது அதனை தோற்கடிக்க மிதமான அணுகுமுறைகளையும் இராஜதந்திர செய்முறைகளையும் உத்திகளையும் பகுதியளவான ஆள் போர்களையும்(Proxy war) நிகழ்த்திய போதும் போர்களில் முழுமையான வெற்றியை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஓர் உலகப் போருக்கு மேற்கு ஐரோப்பா கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அரவணைத்துக் கொண்டு மேற்கொள்ள தயாராகின்றது. அத்தகைய போருக்கான அடிப்படைகளை கிழைத்தேச நாடுகளின் விரிவாக்கங்களை தடுக்கவும் அழிவுக்கு உள்ளாக்கவும் திட்டமிடுகின்றது. ரஷ்சியா மீது பொருளாதாரப் போரை வெற்றி கொள்ள முடியாத நிலையிலேயே இந்தியா மீதும் சீனா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொண்டது. அதிக பொருளாதார தடைகளால் அமெரிக்காவே அதிக பாதிப்புகளை எதிர்கொண்டது. இதனால் கிழத்கேசத்தை கட்டுப்படுத்தவும் அவற்றினுடைய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும் போர் ஒன்றுக்கு நுழைவது சாதகமான விளைவுகளை தரும் என்ற தோற்றப்பாட்டை மேற்கு ஐரோப்பியர்கள் திட்டமிடுகின்றனர். மேற்கைரோப்பாவின் ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்கின்ற நாடுகள் எல்லாவற்றையும் போரில் எதிரி நாடுகளாக கருதும் சூழல் ஒன்றை வர்த்தக ரீதியில் திட்டமிட்ட ஐரோப்பா அதில் வெற்றி கண்டுள்ளது.
போர்க்கலை எனும் எண்ணத்தை தந்த சீனப் இராணுவ பொறியியலாளர் சஞ்சூ (Sun Tzu) குறிப்பிடுவது போல் போர் நிகழ்வதற்கு முன்னர் போரை வெற்றி கொள்பவனே சிறந்த போர் உத்தி என்று குறிப்பிட்டது போல் ஐரோப்பா போருக்கு முன்னர் போரை வெல்ல எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போய்விட்டன. எனவே நேரடி போர் ஒன்றை சாத்தியப்படுத்த முனைகின்றது. ஏகாதிபத்தியங்கள் சமரசத்தின் எல்லையை கடந்து விட்டன. இத்தகைய சூழலிலேயே இன்னொரு போர் ஒன்றை ஐரோப்பா விரும்புகின்றது. அதனை நோக்கி உலகம் செல்வதற்கு தயாராகிறது. காரணம் ஐரோப்பியர் விரும்புகின்ற உலக இருபுக்குள்ளேயே ஏனைய கண்டங்களும் ஆட்சிகளும் ஆட்சியாளர்களும் செயல்பட வேண்டும் என ஐரோப்பிய சிந்தனையில் காணப்படுகிறது. இது அரசியல் இராணுவம் பொருளாதார போன்ற அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மீண்டும் ஒரு போர் முகத்தை ஐரோப்பா வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது.
