மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவது அரசின் தந்திரமா – வரதராஜப் பெருமாள்

அரசியல் யாப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் வழங்கி, மக்களாட்சியைக் கொண்டவையாக அவை செயற்படுவதற்கு வேண்டியனவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஜகநாயக் கட்சி கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு மேற்கொண்டுள்ள தீர்மானம் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் வை.விக்கினேஸ்வரன் சார்பில் இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜாப்பெருமாள் வெளியிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தல் நடக்காமல் இருப்பது ஏன்?

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி வந்த இலங்கை அரசு ஒவ்வொன்றும் இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தாமல் காலம் கடத்தி வந்திருகின்றன. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் காலம் தள்ளிக் கொண்டே போவது, அந்தந்த மாகாண மக்களின் அடிப்படை உரிமையை நிராகரிப்பதாகும்.

2017ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் (திருத்த) சட்டமானது நடைமுறைப்படுத்த முடியாத சட்டமாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.
நடைமுறைப்படுத்த முடியாத சட்டமொன்றைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் காலத்தை தள்ளிச் செல்வது ஜனநாயக விரோதமானதாகும். இப்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தல்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடத்துவதாகக் கூறியே இலங்கை வாழ். சிறுபான்மைத் தேசிய இன மக்களின் ஆதரவை அமோகமாகப் பெற்று ஆட்சி அமைத்தார்கள்.

ஆனால், ஆட்சிக்கு வந்த நாள் தொட்டு ஜனாதிபதி உட்பட அரச அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஆள்மாறி ஆள் மாகாண சபைத் தேரதல்களைக் காலம் தள்ளிப்போடுவதற்கு வெவ்வேறு விதமான காரணங்களை கூறி வந்திருக்கின்றார்கள்.
குடைசியாக, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக முடிவெடுப்பதற்கென நாடாளுமன்றக் குழுவொன்றை நியமித்திருக்கின்றார்கள்.
இதுவும் குறிப்பிட்ட தேர்தல்களை மேலும் காலம் தள்ளிச் செல்வதற்கான அரசின் தந்திரமாகவே பார்க்க வேண்டி உள்ளது. மாகாண ஆட்சி முறைமைக்கே எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் கடந்தகாலக் கொள்கையையே தேசிய மக்கள் சக்தி அரசு கடைப்பிடிப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

மக்களாட்சியைக் கொண்ட மாகாண ஆட்சிகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார அமைப்புகள் கால இடைவெளியின்றி தொடர்ச்சியாக நடைமுறையில் செயற்படுவது மிக அவசியமானதாகும். அவற்றுக்கான தேர்தல்கள் நடைபெறுவதை அரச ஆட்சிப்பீடத்தில் இருப்பவர்கள் தங்களது சுய அரசியல் ஆதாய நோக்கோடு தீர்மானிப்பது அதிகார துஸ்பிரயோகமாகும்.

இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் சமூக ஜனநாயக் கட்சியானது,

அதிகாரப் பகிர்வு, அபிவிருத்தி மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவை தொடர்பாக சட்டத்துறையினர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், அரசியல் பொருளாதார சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்றோரை இணைத்த ஒரு மக்கள் ஜனநாயக இயக்கத்தை முன்னெடுப்பதற்காக மாவட்டங்கள் தோறும் மக்கள் பேரவைகளை ஆக்கி ஊக்கமுடன் செயற்பட வைக்கும் வேலைத்திட்டத்தை கட்சி தீவிரப்படுத்தும் எனவும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு தீரமானித்துள்ளதாகவும் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார்.