அரகலயவின் போது மகிந்த ராஜபக்சவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்வதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “புலிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர்.
இதுபோலவே எதிர்க்கட்சிகளும் செயற்படுகின்றன. இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் மட்டுமே” என்றார்.