சீனாவிலிருந்து மீன் இறக்குமதி செய்யும் யோசனையும் அதிலுள்ள பேராபத்தும்.

யாழ் வடமாராட்சி மீனவர்கள் சம்மேளணம் அண்மையில் தீன்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது. அதாவது, சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் யோசனையை கைவிடுங்கள். அதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அத்துடன் காலப்போக்கில் எங்களுடைய உள்ளுர் மீன்பிடியே இல்லாமல் போய்விடும்.
சீனா அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீன்பிடித் துறையின் மீது அதிக ஈடுபாட்டை காண்பித்துவருகின்றது. பொருளாதார நெருக்கடியால் மீனவர்கள் தொழில்களை இழந்திருந்த சந்தர்ப்பங்களில், மீனவர்களுக்கு உலர் உணவுகளை வழங்கியது அத்துடன், இலவசமாக டிசல் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. சீனா தீடீரென்று ஏன் வடக்கு கிழக்கு மீனவர்கள் மீது அக்கறை காண்பிக்கின்றது? இந்தக் கேள்விக்கு எவரிடமும் பதில் இருக்கவில்லை. ஆனால் இப்போது அந்த பதில் கிடைத்திருக்கின்றது. நீண்டகால நோக்கில் வடக்கு கிழக்கின் மீன்பிடித்து துறைக்குள் உள்நுழையும் நோக்கத்துடன்தான், சீனா மீனவர்கள் பக்கம் திரும்பியிருக்கின்றது.

அண்மையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவில் இடம்பெற்ற ஒரு பட்டி – ஒரு வலயம் மகாநாட்டில் பங்குகொண்டிருந்தார். இதன் போது, ஜனாதிபதியுடன் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றிருந்தார். இதன் போது, சீனாவின் ஒரு பட்டி – ஒரு வலயம் திட்டத்தின் கீழ், 1500 மில்லியன் ரூபா முதலீட்டை, வடக்கு கிழக்கு மீன்பிடித்து துறையில் செய்யவுள்ளதாக சீனா வாக்குறுதியளித்திருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் ஆலோசனையும் வெளிப்பட்டிருக்கின்றது. வடமாராட்சி மீனவர்கள் சம்மேளணத்தின் அறிக்கையின்படி, இந்த விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் பிரத்தியேக ஈடுபாட்டை காண்பிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வடக்கில் கடலட்டை பண்ணைகள் பெருகிய போது, அதனால் உள்ளுர் மீன்பிடித் துறை நீண்டகாலத்தில் பாதிக்கப்படும் என அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன. மீனவர்கள் மத்தியிலிருந்தும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டன. அவ்வாறான எதிர்ப்புக்களையும் மீறியே கடலட்டைப் பண்ணைகள் பெருகின. கடல் உயிரியல் மற்றும் சுற்றுச் ச10ழலியல் நிபுனர்களின் கருத்தின்படி, கடலட்டை பண்ணைகளின் பெருக்கம் நீண்டகால அடிப்படையில் உள்ளுர் மீன்பிடியை வலுவிழக்கச் செய்யும் – காலப்போக்கில் உள்ளுர் மீன்பிடியே இல்லாமலும் போகலாம் என்று கூறகின்றனர். இவ்வாறான கடலட்டை பண்ணைகள் அதில் முதலீடு செய்யும் சிலருக்கு மட்டுமே நன்மையளிக்கும்.

தற்போது அவ்வாறான எதிர்வு கூறல்கள் உண்மையாகிவருகின்றனவா என்னும் கேள்வி எழுகின்றது. ஏனெனில் சீனாவிலிருந்து உள்ளுர் நுகர்விற்காக, மீன்களை இறக்கு மதிசெய்யும் யோசனை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இலங்கை ஒரு வளமுள்ள கடல்பகுதியை கொண்டிருக்கும் நாடு. இவ்வாறானதொரு நாட்டில் உள்ளுர் மீன் தேவைகளுக்காக சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய முற்படுவதானது அடிப்படையிலேயே தவறான பொருளாதார அணுகுமுறைகளின் விளைவாகும்.

மீன்களை ஏற்றுமதி செய்வதில் சீனா முன்னணி வகிக்கும் நாடு ஆனால் சட்டவரம்புகளை மீறி, மீன்களை பிடிப்பதில் முன்னணி வகிக்கும் நாடும் சீனாதான். சர்வதேச மீன்பிடி நியமங்களை வரையறைக்கும் ஜ.யு.யு வின் ((Illegal, unregulated and Unreported (IUU) கணிப்பின்படி, மீன்பிடியில் சீனா ஒரு மோசமான நாடாகும். அமெரிக்க காங்கிரஸ் சேவைகள் அறிக்கையின்படி, மீன்பிடி கப்பல்களை கையாளுவதில் சீனா ஒரு சடவிரோத நடாகும். அதே வேளை உலகிலேயே இராணுவ மற்றும் அரசியல் நலன்களுக்காக மீன்பிடிக் கப்பல்களை பயன்படுத்தும் ஒரேயொரு நாடும் சீனாதான்.

இந்த அடிப்படையில் நோக்கும் போது, சீனா அதன் பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச சட்டவிதிகளை பெருமளவில் பொருட்படுத்துவதில்லை என்பது தெளிவாகின்றது. உலகில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான ஆயுத அமைப்பொன்றை வைத்திருக்கும் ஒரேயொரு நாடும் சீனா மட்டும்தான். இந்தப் பின்புலத்தில்தான் சீனாவின் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடப்படும் போது, பாதுகாப்பு கரிசனைகள் அதிகரிக்கின்றன. இந்திய ஊடகங்கள் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. சீனாவின் மீன்பிடி நடவடிக்கைள் அனைத்துமே, குறித்த மீன்பிடி இராணுவ கட்டமைப்பினால்தான் தீர்மானிக்கப்படுகின்றது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களின் விலை, ஒப்பீட்டடிப்படையில் குறைவானது. இதன் காரணமாகவே பல ஆபிரிக்க நாடுகள் சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்கின்றன ஆனால் தற்போது காலப்போக்கில் முற்றிலுமாக சீனாவில் தங்கியிருக்கும் நிலை ஏற்படலாம் என்னும் அச்சத்தினால் ஆபிரிக்க நாடுகள் சீனாவிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தும் தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றன.

இதற்கு கிழக்காபிரிக்க நாடான கென்யா ஒரு சிறந்த உதாரணமாகும். உள்ளுர் நுகர்வுக்காக சீனாவிலிருந்து, அதிகளவில் மீன்களை இறக்குமதி செய்யும் நாடாக கென்யாக இருந்தது. ஆனால் 2021இல், உள்ளுர் மீன்பிடித் துறையின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சீனாவலிருந்து, மீன்கள் இறக்குமதிசெய்வதற்கு தடைவிதித்தது. 2018இல், இந்த தீர்மானத்தை எடுத்த போது, ஒரு புகையிர பாதை நிர்மானத் திட்டத்திற்கான நிதியை நிறுத்திவிடுவதாக சீனா எச்சரித்தது. கடனுதவின் இறுதிப் பகுதியை விடுவிக்கும் உடன்பாட்டிலிருந்தும் வெளியேறியது. இது ஒரு சிறந்த உதாரணம். சீனாவுடனான, ஒப்பந்தங்களிலிருந்து, ஒரு நாடு வெளியேற முற்படும் போது, சீனா எவ்வாறு கடனுதவிகளை அச்சுறுத்தும் ஆயுதமாக பயன்படுத்துகின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

இதற்கப்பால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களின் தரமும் சந்தேகத்துக்கு உரியதாகவும், கென்ய அரசாங்கத்தினால் இனம்காணப்பட்டது. மீன்கள் ஏற்றுமதிக்காக பதனிடப்படும் போது, பின்பற்ற வேண்டிய உலக சுகாதார நிறுவனத்தின் தராதரங்கள் சரியாக பின்பற்றப்படவில்லையென்று, கிழக்காபிரிக்க ஆய்வுகூட தெரிவுக்குழு இனம்கண்டது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களின் பாகங்களை ஆய்வு செய்த, நைரோபி பல்கலைகழக்கத்தின், பொது சுகாதார, மருந்தியல் மற்றும் நச்சியல் துறையின் தலைவர், பேராசிரியர் ஜேம்ஸ் மபரியா இவ்வாறு கூறுகின்றார், சீன மீன்களில் உலோகத்தின் கூறுகள் இருக்கின்றன, இவ்வாறான மீன்களை தொடர்சியாக உட்கொள்ளும் போது, அது மனித உடலை பாரதூரமாக பாதிக்கும் என்கிறார் மபரியா.

இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டின் உள்ளுர் மீன் நுகர்விற்கு இறக்குமதி செய்ய வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை. ஆனாலும் சீனாவிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யும் யோசனை முன்வைக்கப்படுகின்றதென்றால், அந்தளவிற்கு சீனா அதன் பிடியை இலங்கையில் இறுக்கிக் கொண்டு செல்கின்றது என்பதே பொருள். சீனாவின் சந்தைக்கான கடலட்டைகளை உள்ளுரில் ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபம் சீனா, மறுபுறமாக அதன் விளைவாக உள்ளுர் மீன்பிடி பாதிக்கப்படும் போது, உள்ளுர் நுகர்விற்காக சீனாவின் மீன்களை இறக்குமதி செய்ய தூண்டுகின்றது.

வடக்கு கிழக்கின் மீன் நுகர்வு தேவைகளுக்காக சீனாவிலிருந்து மீன்களை இறக்குமதி செய்யும் யோசனையானது அடிப்படையிலேயே தவறானது. இது நிச்சயம் உள்ளுர் மீன்பிடியை முற்றிலுமாக இல்லாமலாக்கும். அடுத்து, மீன்பிடித் துறைக்குள் சீனாவின் ஊடுருவல் அதிகரிக்கும் போது, காலப்போக்கில் உள்ளுர் தேவைகளுக்காக முற்றிலும் சீனாவில் தங்கியிருக்கும் நிலைமையும் உருவாகும். தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இந்த விடயத்தில், தீவிர கவனம் செலுத்த வேண்டும். மீனவர்களின் அச்சம் மிகவும் நியாயமானது. வடக்கு கிழக்கின் உள்ளுர் மீன் தேவைகளுக்காக சீனாவிலிருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படும் திட்டத்தால், வடக்கு கிழக்கின் மீன்பிடியே நீண்டகால அடிப்படையில் இல்லாமல் போகும்.