சிறிதரனை பதவிவிலகுமாறு தமிழரசு கட்சி உத்தரவு

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார். அதே போன்று கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அரியநேந்திரனுக்கு கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியமை தொடர்பில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மீதும் குற்றச்சாட்டுண்டு. கட்சியின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது கட்சியின் உறுப்பினர்களின் கடப்பாடாகும் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இராணுவ அதிகாரியை கணக்காளர் நாயகமாக நியமிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யோசனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆதரவளித்திருக்கின்றார் என்னும் குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.