சிறிதரனை அதிரடியாக நீக்கிய தமிழரசு கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK), தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் மும் மொழிகளிலும் விடயங்களை தெளிவுபடுத்தும் ஆற்றலுள்ளவர்.
இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் வெளிப்படைத் தன்மை அற்ற செயற்பாடுகளிளால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிறிதரனிடம் ஆற்றல்கள் இல்லாத போதும் ஒரு மூத்த உறுப்பினர் என்னுமடிப்படையிலேயே அவர் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்று கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் புதிய முரசிற்கு தெரிவித்திருந்தார்.

அரசியல் யாப்புக் கவுன்சிலில் (Constitutional Council) இருந்து விலக மறுத்த சிறீதரனின் நிலைப்பாடே இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு ஆதரவளித்ததாக சிறிதரன் மீது, தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு குற்றச்சாட்டு முன்வைத்து, அதற்கான விளக்கத்தையும் கோரியிருந்தது.

சிறிதரன் தரப்பு கட்சியின் உள் முரண்பாடுகளை முன்வைத்து தங்களை நியாயப்படுத்த முற்பட்டாலும் கூட, ஒரு கட்சியின் அடிப்படையான கொள்கைக்கு முரணாக செயற்படும் போது அவரை நிக்குவதற்கு கட்சிக்கு உரிமையுண்டு என்னும் வாதம் ஏற்புடைய ஒன்றாக இருப்பதாக தமிழரசு கட்சியின் அரசியல் குழு குறிப்பிடுகின்றது.