சம்பந்தனின் வரலாற்று தவறுகள் ?

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், அவரது இயலாமையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதே சரியானதென்று அண்மையில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவர், பொதுவெளியில் இவ்வாறு கூறியிருப்பது இதுதான் முதல் தடவை. சுமந்திரனை அரசியலுக்கு கொண்டுவந்தவர் சம்பந்தன். அதே போன்று சி.வி.விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவந்தவரும் சம்பந்தன்தான்.

விக்கினேஸ்வரன் இடை நடுவில் சம்பந்தனிலிருந்து விலகி, தனி வழியில், சென்றுவிட்டார். சுமந்திரன் இப்போது கூறும் விடயம் ஏற்கனவே பேசப்பட்ட விடயம்தான். சில மாதங்களுக்கு முன்னர், திருகோணமலையைச் சேர்ந்த குழுவொன்று, தமிழரசு கட்சியின் மத்திய குழுவிடம், திருகோணமலை நிலைமைகள் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாமையால் திருகோணமலையில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் முறையிட்டிருந்தனர். இதற்கு பின்னால் திருகோணமலை தமிழரசு கடசியின் ஒரு பிரிவினர் இயங்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. திருகோணமலையை பொறுத்தவரையில், தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சிக்கு வெளியில்தான் இருக்கின்றனர். பழையவர்கள், புதியவர் என்றவாறு கட்சியில் பிளவுண்டு.

அவர்கள் மத்திய குழுவில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, அது தொடர்பில் சம்பந்தனுடன் கலந்துரையாடுவதற்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு சம்பந்தனை சந்தித்து, கலந்துரையாடியிருந்தது. சம்பந்தன் பதவி விலகுவதற்கோ அல்லது, தனக்கு பதிலாக பிறிதொருவரை சிந்திக்கவோ தயாரில்லை என்னும் செய்தியுடன் குறித்த குழு வெளியேறியது. தற்போது, சம்பந்தனின் பதவி விலகலை சுமந்திரன் பொது வெளியில் முன்வைத்திருக்கின்றார்.

சுமந்திரன் ஏன் இந்தக் கருத்தை இப்போது முன்வைத்தார் என்பதற்கு பதில் இல்லாவிட்டாலும் கூட, நிச்சயம், சுமந்திரனது கருத்துக்களால் சம்பந்தன் கடும் கோபமடைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சம்பந்தனை பொறுத்தவரையில் அவரது பதவி விடயத்தில் பிறிதொருவர் தலையிடுவதை அவர் விரும்பவில்லை. இருக்கும் வரையில் பதவியில் இருக்கவே அவர் விரும்புகின்றார்.

உண்மையில் சம்பந்தன் அவரது காலத்திலேயே அவரது வீழ்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றார். தமிழரசு கட்சியின் வரலாற்றில், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மூத்த தலைவர் ஒருவரை பதவி விலகுமாறு கூறியிருப்பதும் இதுதான் முதல் தடவை. தமிழரசு கட்சியின் மரபில், சக்கர நாற்காலியில் இருந்து அரசியல் கட்சியை வழிநடத்திய வரலாறுண்டு. தமிழரசு கட்சியின் ஸ்தாபகத் தலைவர், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இறக்கும் வரையில், கட்சியின் பெருந் தலைவராகவே இருந்தார். மேடையில் பேச முடியாத நிலையிலிருந்த செல்வநாயகம் அமிர்தலிங்கத்தின் காதுகளுக்குள் ஏதோ கூற, அதனை அமிர்தலிங்கம் சொல்வாராம். இதனை அவதானித்துக் கொண்டிந்த இளைஞர்கள் சிலர் இப்போது சில கட்சிகளின் தலைவர்களாக இருக்கின்றனர். அதே போன்று, தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சிவசிதம்பரம், மரணப் படுக்கையில் இருக்கும் போது கூட, அவரது பதவியை கைவிடவில்லை. இந்த வரிசையில் சம்பந்தன் பதவியிலிருப்பதை, ஒரு தவறாக தமிழரசு கட்சியால் கூற முடியாது.

சம்பந்தன் தமிழரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, ஏனையவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை சம்பந்தன் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை அமிர்தலிங்கம் இருந்திருந்தால் சம்பந்தன் தமிழரசு கட்சியின் முதன்மையான தலைவராக வந்திருக்கவும் முடியாது. சம்பந்தனின் வயது, அனுபவம், ஒப்பீட்டடிப்படையில் சம்பந்தனோடு போட்டியிடக் கூடிய நிலையில் எவரும் இல்லைமை – இவ்வாறான காரணங்களால், சம்பந்தன் தமிழர் அரசியலை வழிநடத்தும் பெருந் தலைவரானார்.

2009இல் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து, அனுபவமுள்ள, ராஜந்திர தரப்புக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் சம்பந்தன் மட்டுமே இருந்தார். இதுதான் சம்பந்தனுக்கு மறுபுறம் வாய்ப்பாகவும் மாறியது. முதல் முதலாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர், ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியலையும் வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார். சம்பந்தனை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் எவருக்குமே மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்திருக்கவில்லை.

தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில், முதல் முறையாக, தமிழரசு கட்சியின் தலைவர் ஒருவரது தலைமையை முன்னாள் இயங்கங்கள் அனைத்துமே ஏற்றுக்கொண்டன. இவ்வாறானதொரு வாய்ப்பானது, சம்பந்தனுக்கு முன்னர் இருந்த – எந்தவொரு மிதவாத அரசியல்வாதிக்கும் கிடைத்திருக்காத வாய்ப்பு. ஆனால் சம்பந்தன் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். தமிழரசு கட்சி மட்டும்தான், முதன்மையானதென்னும் சிறுபிள்ளைத்தனமான வாதத்திற்குள் சிக்குப்பட்டு, அனைவரையும் அரவணைத்தும் செல்லும் தலைமைத்துவமொன்றை வழங்கும் வரலாற்று வாய்ப்பை நழுவவிட்டார். சம்பந்தன் மட்டும் சரியாக நடந்திருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது பலமானதொரு ஜனநாயக அமைப்பாக எழுச்சியுற்றிருக்கும்.

1997இல், ஆரம்பித்த சம்பந்தனின் அரசியல் பயணத்தில் சம்பந்தன், தவிர்க்க முடியாத ஒரு தமிழ் அரசியல்வாதி என்னும் நிலையை, 2009இற்கு பின்னரான சூழலில்தான் பெற்றார். 1977இல் தேர்தலில் வெற்றிபெற்ற சம்பந்தன், அதன் பின்னர் 2001 தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகவே வெற்றிபெற்றார். 1994 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சம்பந்தன், பின்னர் அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற, தங்கத்துரையின் படுகொலையை தொடர்ந்தே, அவரது வெற்றிடத்தை நிரப்பினார்.

இந்த பின்புலத்தில் நோக்கினால் 2009இற்கு பின்னரான காலம் – குறிப்பாக விடுதலைப் புலிகள் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னரான காலப்பகுதிதான், சம்பந்தனது அரசியல் வாழ்வின் பொற்காலமாகும். ஆனால் இந்தக் காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில்தான் சம்பந்தன் தவறிழைத்தார். சம்பந்தனின் அரசியல் தவறுகளை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று, ஒரு அரசியல் கூட்டமைப்பின் தலைவர் என்னும் வகையில், தனது காலத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் தவறிழைத்தார். இரண்டு, ஒரு மூத்த, அங்கீகாரமுள்ள அரசியல் தலைவராக, அரசியல்ரீதியில் செய்ய வேண்டியதை செய்யாமல் தவறிழைத்தார்.

ஒரு அரசியல் கூட்டணியின் தலைவராக சம்பந்தன் தனது கடமைகளை சரிவர செய்திருந்தால், இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பலமான அரசியல் சுட்டணியாக இருந்திருக்கும். தலைமை தொடர்பில் அச்சம்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஏனெனில் சம்பந்தனது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு எவருமே தயக்கம் காண்பிக்கவில்லை. ஆனால் தனது அசமந்தப் போக்குகளாலும், வீறாப்பினாலும், தூரநோக்கற்ற அரசியல் புரிதல்களாலும் – ஒரு வரலாற்று வாய்ப்பை சம்பந்தன் தவறவிட்டார்.

அடுத்தது, அரசியல் ரீதியான வரலாற்று தவறுகள். தீர்மானங்கள் எடுக்க வேண்டிய இடங்களில் இருப்பவர்கள், உரிய காலத்தில் தீர்மானங்களை எடுக்கத் தவறினால், அதன் பின்னர் என்ன நடக்குமென்பதற்கு முதல் உதாரணம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், இரண்டாவது உதாரணம் சம்பந்தன். தாம் நிர்ணயித்துக் கொண்ட இலக்கு மட்டுமே முதன்மையானது, அதற்கு மாறான வாய்ப்புக்கள் அனைத்துமே தேவையற்றது என்னும் அரசியல் புரிதல்தான் விடுதலைப் புலிகளின் முடிவை தீர்மானித்தது. மக்கள் பெரும் அழிவுகளை எதிர்கொண்டனர்.

அதே போன்று வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போது, அதனை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடையும் என்பதற்கு சம்பந்தனது தவறான அணுகுமுறை ஒரு சிறந்த உதாரணம். 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், புதிய அரசியல் யாப்பிற்கு பதிலாக, அரசியலமைப்பில் இருக்கின்ற வாய்ப்புக்களை உச்சமாகப் பயன்படுத்திக் கொளும் உபாயமொன்றை சிந்தித்திருந்தால், நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் ஆனால் சம்பந்தன் புத்திசாதுர்யமாக விடயங்களை கையாளத் தவறியதால், 13வது திருத்தச்சட்டத்தைக் கூட அமுல்படுத்த முடியுமா என்னும் கேள்வியுடன் தமிழர் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

இன்று சம்பந்தனை அவரது கட்சியை சேர்ந்தவர்களே வெளியேறுமாறு கூறுகின்றனர். சம்பந்தனை வெளியேறச் சொல்வதில் கவனிக்க வேண்டிய விடயமொன்றுண்டு. அதனை சொல்ல வேண்டியவர்கள் யார்? ஏனெனில் சுமந்திரன் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் அதாவது, சம்பந்தனது பதவி விலகல் தொடர்பில் அவரை அணுகிய போது, அவர் ஒரு கருத்தை தெரிவித்திருக்கின்றாராம் – அதாவது, தனது நிலையை அறிந்துதான் திருகோணமலை தமிழ் மக்கள் தன்னை தெரிவு செய்திருக்கின்றனர். பின்னர் எதற்காக தான் பதவிவிலக வேண்டும். இதுதான் சம்பந்தனது நிலைப்பாடென்றால் அது சரியானது. ஏனெனில், திருகோணமலை தமிழ் மக்களே அவரை தெரிவு செய்தனர். அந்த அடிப்படையில் அவரை பதவி விலகுமாறு அவர்கள் மட்டுமே கோர முடியும். சுமந்திரனோ அல்லது தமிழரசு கட்சியை சேர்ந்தவர்களோ, வேறு எவருமே அவ்வாறான கோரிக்கையை முன்வைக்க முடியாது. சம்பந்தனை போன்ற ஒருவரை தெரிவு செய்தால், அவரது நிலைமை இவ்வாறுதான் இருக்குமென்பதை முன்னரே மதிப்பிட்டே, அவரை ஆதரித்திருக்க வேண்டும். இப்போது சுடுகிறது மடி என்று கூறுவதில் அர்த்தமில்லை.

ஆனால் ஒன்று, சம்பந்தன் அவரது காலத்திலேயே அவரது தவறுகளின் விளைவுகளுக்கு அவரே சாட்சியாக இருக்கின்றார். இந்த வாய்ப்பு ஏனைய அரசியல்வாதிகள், இயக்கங்களின் தலைவர்களுக்கு கிடைக்கவில்லை. அவரது கட்சியை சேர்ந்தவர்களே, அவரை பதவி விலகுமாறு கூறுவதானது, அவரைப் பொறுத்தவரையில் பெரும் இழுக்கும், தோல்வியுமாகும்.

இப்போது தான் எவருக்கும் தேவையில்லாத ஒருவராகிவிட்டார் என்பதற்கு, சம்பந்தனே சாட்சியாகியிருக்கின்றார். இவ்வாறான அவலநிலையை, எந்தவொரு தமிழ் கட்சியின் தலைவரும் இதுவரையில் எதிர்கொண்டதில்லை. இவ்வாறானதொரு நிலைமை ஒரு நாள் ஏற்படுமென்பதை, சம்பந்தன் ஒரு போதுமே, எண்ணியிருந்திருக்க மாட்டார்.