இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜதந்திர நெருக்கடி தொடர்கின்றது. கடந்த யூன் மாதம், காலிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி செயற்பட்டுவரும் சீக்கிய தலைவரான ஹர்தீப்சிங்க நிஜார் என்பவர், கனடாவில் வைத்து கொல்லப்பட்டிருந்தார். இதற்கு பின்னால் இந்திய முகவர் செயற்பட்டிருப்பதற்கான, நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக, கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, கனடிய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தியாவிற்கான கனடிய தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவரையும் கனடா வெளியேற்றிருந்தது. இதற்கு பதிலடியாக, கனடாவின் இந்தியாவிற்கான அதிகாரியொருவரை இந்தியா வெளியேற்றியிருந்து. கனடிய பிரதமரின் இந்த கருத்தை, அபத்தமென்றும், உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டென்றும், இந்தியா பதிலளித்திருந்தது.
தற்போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் நபர் பிரதிநிதித்துவப்படும் டைகர் போஸ் எனப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு, இந்தியாவினால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருக்கின்றது. படுகொலை செய்யப்பட்ட ஹர்தீப்சிங், இந்தியாவினால் தேடப்பட்டுவரும் ஒரு குற்றவாளி. அவரது தலைக்கு, பத்து கோடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த ஹர்தீப்சிங்க, 2012இல், பாக்கிஸ்தானுக்கு சென்று, அங்குள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பொன்றிடம் ஆயுதப் பயிற்சிகளை பெற்றிருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. வெடிகுண்டுகளை கையாளும் பயற்சிகளையும் குறித்த நபர் பெற்றிருக்கின்றார். இவ்வாறானதொரு பின்புலத்தில் இவரது கொலைக்கு பின்னால் பக்கிஸ்தானிய வெளிய உளவுத்துறையான, ஜ.எஸ்.ஜ அமைப்பு இருக்கலாமென்றும், புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி, செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவில் சீக்கியர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்ற, பஞ்சாப் மானிலத்தை அடிப்படையாகக் கொண்டு, சீக்கியர்களுக்கான தனிநாட்டு கோரிக்கையை முன்வைப்பர்களே, காலிஸ்தான் அமைப்பினராக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னரே இவ்வாறான கோரிக்கை மேலேழுந்தது. 1940களில்தான் முதல் முதலாக காலிஸ்தான் என்னும் பெயர் வெளியானது. காலிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து பல்வேறு நகர்வுகளை காலிஸ்தானியவாதிகள் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர். இந்தியாவில் மானில ஆட்சியமுறைமை அறிமுகமான பின்னர், தனிநாட்டை கோருவதற்கான தேவைகள் அங்கில்லை. இவ்வாறான தனிநாட்டு கோரிக்கைகள் எதிர்காலத்தில் எழலாம் என்பதை கணித்தே, இந்திய ஆட்சியாளர்கள், மானில ஆட்சிமுறைமையை ஏற்படுத்தினர். ஆனாலும் சீக்கியர்களுக்கான தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து, இந்தியாவிற்கு வெளியில் சீக்கிய பிரிவினைவாத குழுவினர், ஜரோப்பிய நாடுகளில் செயற்பட்டுவருகின்றனர். குறிப்பாக இவர்களது செயற்பாடுகள் கனடாவில் தீவிரமாக இருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான் கனடா தொடர்பில், இந்தியா தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றது.
இங்கு பலரும் கவனி;க்கத் தவறுகின்ற விடயமொன்றுண்டு. அதாவது, காலிஸ்தான் கோரிக்கையை வலுப்படுத்துவதில் பாக்கிஸ்தானின் மறைகரமுண்டு. 1971இல், பாக்கிஸ்தான் – இந்திய யுத்தத்தை தொடர்ந்து, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஜெகஜித் சிங், பாக்கிஸ்தான் பிரதமர், பூட்டோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதன் போது, காலிஸ்தான் கோரிக்கைக்கு உதவி வழங்குவதாக பூட்டோ தெரிவித்திருந்தார். கிழக்கு பாக்கிஸ்தானின் உடைவுக்கு பின்னால் இந்தியா இருந்தமைக்கு, பழிவாங்கும் நோக்கில், இந்தியாவில் பிவினை கோரிக்கையை தூண்டும் செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் வெளியக உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ செயற்பட்டுவருகின்றது.
இந்தப் பின்புலத்தில்தான், வெளிநாடுகளில் இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பின்னால் பாக்கியஸ்தான் உளவுத்துறை திரைமறைவில் செயற்பட்டுவருவதான குற்றச்சாட்டுக்கள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், கனடாவை தளமாகக் கொண்டிருக்கும் காலிஸ்தான் அமைப்பினர் பாக்கிஸ்தானுடன் தொடர்பிலிருந்திருக்கின்றனர். 2018இல், காலிஸ்தான் ஆயுததாரிகள் சிலர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டனர். இந்த தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பின்னால் பாக்கிஸ்தானிய உளவுத்துறை இருந்தாக, பஞ்சாப் மானில முதலமைச்சர் அப்போது, குற்றம்சாட்டியிருந்தார்.
காலிஸ்தான் பிரிவினைவாத செயற்பாடுகளுக்கான, ஒரு கூடாரமாக, கனடா பயன்படுத்துவருவது தொடர்பில் இந்தியா பல்வேறு சந்தர்பங்களில் கனடாவை எச்சரித்திருக்கின்றது. ஆனால், கருத்துச் சுதந்திரம் என்னுமடிப்படையில் கனடா பதிலளித்து வருகின்றது. அண்மையில் முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் கொலையை கொண்டாடும் வகையில் கனடிய காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான செயற்பாடுகளை, கருத்துச் சுதந்திரம் என்னும் வகையில், கனடா அவற்றை நியாயப்படுத்தி வருகின்றது. ஆனால் மறுபுறம் இந்தியாவிற்கோ, இவ்வாறான விடயங்கள் இந்தியாவிற்குள் வன்முறையை ஊக்குவிக்கும் தேசிய பாதுகாப்பு விவகாரமாகும். இந்த அடிப்படையில் இந்தியாவிற்கும் கனடாவிற்குமிடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் காணப்படுகின்றன. கனடிய பிரதமர் ஹாப்பர், இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, அப்போதைய வெளிவிவகார அமைச்சரினால் இந்த விடயம் சுட்டிக்காட்டிப்பட்டிருந்தது. அண்மையில் ஜஸ்டின் ரூடோ, ஜ.20 மகாநாட்டிற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போதும், பிரதமர் மோடி, இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். தற்போது, இந்த முரண்பாடுகள் வெளிப்படையான ராஜதந்திர நெருக்கடியாக மாறியிருக்கின்றது. ஏற்கனவே சீனா தங்களின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதாக குற்றம்சாட்டிவரும் கனடா, தற்போது, இந்தியாவின் மீதும் அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்கின்றது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களை வெளிநாடுகளில் அழிக்கும் கொள்கை நிலைப்பாட்டை இதுவரையில் இந்தியா வெளிக்காட்டியதில்லை. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகளே அவ்வாறான வழிமுறையை பின்பற்றிருவருகின்றன.
காலிஸ்தான் தொடர்பில் நாம் எதற்காக சிந்திக்க வேண்டுமென்னும் கேள்வி எழலாம். சிலர் இது பற்றி அரைகுறை அறிவுடன் உளற முற்படுவதால்தான், இந்த விடயம் தொடர்பில் சில விடயங்களை வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது. காலிஸ்தானியர்கள் விடுதலைக்காக போடும் மக்கள் கூட்டம், அவர்களை ஆதரிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்குண்டு என்றவாறான கதைகளை சிலர் கூற முற்படுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. இது ஒரு அடிப்படை அறிவற்ற செயற்பாடு. இந்தியாவிற்குள் பிரிவினையை கோரும் காலிஸ்தானிய குழுக்கள் மற்றும் காஸ்மீரிய தீவிரவாதக் குழுக்கள் அனைத்துமே, பாக்கிஸ்தானிய செல்வாக்கிற்குட்பட்டவை. இந்தியாவை எவ்வாறாயினும் உடைக்க வேண்டும் என்பதே இதற்குபின்னாலுள்ள இரகசிய நிகழ்சிநிரல். இதனை ஒரு ஈழத் தமிழர் ஆதரிக்கின்றார் என்றால், அவர் இந்தியாவிற்கு எதிராக செயற்படுகின்றார் என்பதே பொருளாகும். இது எந்தவகையிலும் ஈழத் தமிழர் நலன்களுடன் தொடர்புபட்டதல்ல மாறாக, ஈழத் தமிழ் மக்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது.
ஆயுத விடுதலைப் போராட்டங்கள் இயங்கிய காலத்தில், ஈழத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில், ஒரு வாதம் மேலோங்கியிருந்தது. அதாவது, விடுதலைக்காக போராடும் நாங்கள் உலகெங்கும் விடுதலைக்காக போராடும் ஏனைய அமைப்புக்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுடனான உறவை பலப்படுத்த வேண்டும். இந்தக் கருத்து ஏறக்குறைய அனைத்து இயங்கங்களின் மத்தியிலும் வேரூன்றியிருந்தது. இந்தப் பின்புலத்தில்தான் பாலஸ்தீனிய விடுதலை அமைப்புடன் ஈழத்து அமைப்புக்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஆரம்ப காலத்தில் பாலஸ்தீனிய அமைப்பிடமிருந்து ஈழத்து ஆயுத அமைப்பின் உறுப்பினர்கள் பயிற்சிகளையும் பெற்றிருந்தனர். அதே போன்று, இந்தியாவில் செயற்பட்டு வந்த இடதுசாரி தீவிரவாத அமைப்புக்களுடனும் தமிழ் இயங்கங்கள் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தன. ஆனால் இவ்வாறு புரட்சிகர இயங்கங்களோடு தொடர்புகளை ஏற்படுத்த முற்பட்ட அனைத்து ஈழத்து இயக்கங்களும், இறுதியில் இந்திய அரசின் பயிற்சிகளை பெற்றே தங்களை பலப்படுத்திக் கொண்டன. அப்போதே, ஈழத்து ஆயுத இயங்கங்களின் புரட்சிகர அரசியல் நிலைப்பாடு தோல்வியடைந்துவிட்டது. அவ்வாறான நிலைப்பாட்டால் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு ஆயுத இயக்கம் வளர்சியுற முடியாதென்பது, அன்றைய சூழலிலேயே நிரூபணமாகிவிட்டது. அப்போதே காலாவதியாகிப் போன விடயத்தை இப்போது சிலர் விளக்கமில்லாது உச்சரிக்க முற்படுகின்றனர். ஒரு புலம்பெயர் தமிழ் ஊடகம் அதன் அறியாமையை வெளிப்படுத்தியிருக்கின்றது.
காலிஸ்தான் பிரிவினைவாத செயற்பாடுகளை ஈழத் தமிழர்கள் எதிர்த்துநிற்க வேண்டும். அதன் பக்கமே ஈழத்தவர்கள் செல்லக் கூடாது. அவ்வாறான முயற்சிகள், போருக்கு பின்னர், தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்ற ஈழத்து தமிழ் மக்களை மேலும் அழிவின் பாதைக்கே கொண்டு செல்லும். புலம்பெயர் சூழலிலுள்ளவர்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும்.
ஒடுக்கு முறையிலிருந்து விடுபடு வேண்டுமென்று எண்ணுபவர்கள், இன்னொரு சூழலில் இயங்குபவர்களளோடு, உறவுகளை ஏற்டுத்திக் கொள்ள வேண்டுமென்னும் அரசியல் அணுமுறையானது, எப்போதோ காலாவதியாவிட்டது. அதிகாரத்தை கோரும் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமும் பலம் பொருந்திய நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொள்வதிலேயே அவர்களது வெற்றி தங்கியிருக்கின்றது. இதுதான் இன்றைய அரசியல் ஒழுங்காகும். இதனை புரிந்து கொள்ள முடிந்தால் எந்தவொரு விடயம் தொடர்பிலும் தடுமாற வேண்டியதில்லை. ஈழத் தமிழர்களுக்குத் தேவை இந்தியாவின் ஆசீர்வாதமே தவிர, இந்தியாவின் எதிரிகளுடையதல்ல.
காலிஸ்தானியர்கள் அடிப்படையிலேயே ஈழத் தமிழர் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவர்கள். அது ஒரு பாக்கிஸ்தானிய நிகழ்சிநிரல். காலிஸ்தானியர்களை விடுதலைக்காக போராடுபவர்கள் என்று கூறிக்கொள்வது, அடிப்படையிலேயே ஒரு முட்டாள்தனமாகும்.