ஈழத் தமிழர் அரசியல் தொடர்ந்தும் தோல்வியின் பாதையில் நகர்கின்றது. யுத்தம் முடிவுற்று பதின்நான்கு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, ஈழத் தமிழ் அரசியல் சூழலில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கூட, தமிழ் தலைமைகள் எப்போரால் நிரூபிக்க முடியவில்லை. அரசியல் என்பது சாத்தியங்களின் கலை – என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப பெறக் கூடியதை பெற்று, பெற வேண்டியதற்காக அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய தலைமைகளை காண முடியாமல் இருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழலில் யதார்த்தபூர்வமான, தர்க்கரீதியான அரசியல் உரையாடலொன்றின் தேவையை நாம் உணர்கின்றோம். தமிழ் ஆயுதத் தலையீட்டின் தோல்விக்கு பின்னரான, கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலான அரசியல் போக்கின் தோல்வி, அவ்வாறானதொரு புதிய அரசியல் உரையாடலுக்கான தேவையை உணர்த்துகின்றது. பிரதான ஊடகங்கள் அதற்கான வரையறைகளுடன் இருக்கின்ற போது, பல்கிப் பெருகியிருக்கும் தமிழ் இணைய ஊடகங்களோ – பழைய தோல்விக் கற்பனைகளுக்கு முலாமிடும் பணியையே செய்ய முற்படுகின்றன. யதார்த்தத்திற்கு முக்கியத்துமளிக்கும் ஊடக வெளி முன்னரைப் போல் சுருங்கித்தானிருக்கின்றது. எது யதார்த்தமோ – அதுவே உண்மையாகும். நமது விருப்பு வெறுப்புக்களிலிருந்து விடயங்களை நோக்காமல், சூழ்நிலையை புரிந்துகொள்ளும் அரசியல், சமூக உரையாடலொன்று நமது தலைமுறைக்கு தேவைப்படுகின்றது. அந்த உரையாடலுக்கான கதவை அகலத் திறக்கும் முயற்சியே – புதிய தமிழ் முரசு.