2009இற்கு பின்னரான அரசியல் என்பது, அடிப்படையிலேயே, ஒரு போர் தோல்விக்கு பின்னரான அரசியலாகும். ஒரு போர் தோல்விக்கு பின்னரான அரசியல் போக்கானது, கடந்த காலத்தை, ஒரு ஆசானாகக் கொண்டே நகர்த்தப்பட வேண்டும். ஏனெனில் கடந்தகாலத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் சரியென்றால், ஒரு போதுமே தோல்வி ஏற்;பட்டிருக்காது, எனவே ஒரு தோல்வி நிகழ்கின்றது என்றால் – அங்கு ஏராளமான தவறுகள் நடந்திருக்கின்றது என்பதே பொருளாகும். ஆனால் நமது சூழலிலோ, கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ள எவருமே முயற்சிக்கவில்லை.
சுயவிமர்சனம் சார்ந்து சிந்திப்பதற்கு அனைவருமே அஞ்சினர். அதனை மறுப்பதற்கு புதிய விளக்கங்கள் புனைந்தனர். ஒரு பெரும் தோல்வியின் பின்னர், எழுந்துநிற்க முயற்சிக்கும் ஒரு சமூகம் செய்ய வேண்டியது சுயவிமர்சனமாகும். சுயவிமர்சனமின்றி எழுந்து நிற்பதை பற்றி யோசிக்கவே முடியாது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், யுத்தத்திற்கு பின்னரான தமிழ் தேசிய அரசியலில், முதல் நகர்விலேயே தமிழ் தேசிய அரசியல் ஒரு முள்ளில் சிக்கிக்கொண்டது. அந்த முள்ளின் பிடியிலிருந்து, இன்றுவரையில் தமிழ் தேசிய அரசியலால் அசைய முடியவில்லை. யுத்தம் முடிவுற்று பதின்நான்கு ஆண்டுகளாகிவிட்ட பின்னரும் கூட, இன்றுவரையில் முன்னோக்கி நகர்வதற்கான பாதை தெரியாமலேயே தமிழர் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த இடத்தில் எவருமே தங்களை தனித்துவமானவர்கள் என்று கூற முடியாது. தமிழ் மக்களின் நலன்களை வெற்றிகொள்வதில் அனைவருமே தோல்வியாளர்கள்தான். அனைவருமே பொறுப்பாளிகள்தான். இந்த விடயத்தில் தமிழ் சமூகத்திற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு.
இந்த பின்புலத்தில் நோக்கினால் இரண்டு கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஒன்று, ஏன் முன்நோக்கி நம்மால் பயணிக்க முடியவில்லை? இரண்டு, இந்த இடத்திலிருந்து நாம் எங்கு செல்ல முயற்சிக்கின்றோம்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் தமிழ் சூழலில் நிர்திடமான பதில் இல்லை. இதன் காரணமாகவே எராளமான பதில்களும், அந்த பதில்களை நியாயப்படுத்துவதற்கான வாதங்களும் எட்டிப்பார்க்கின்றன.
அரசியல் எப்போதுமே சாத்தியங்களின் கலையாகும். சாத்தியங்களை கையாளுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்ற போது மட்டும்தான், அரசியல் நம்பிக்கையளிக்கும். வாய்ப்புக்களை தவறவிட்டால் அதன் பின்னர் முன்னைய வாய்ப்புக்கள் கிடைப்பதற்கு உத்தரவாதங்கள் எதுவுமில்லை. இதனை இன்னொரு வகையில் கூறுவதானால், பேருந்தை தவறவிட்டுவிட்டு பின்னாலிருந்து கையசைப்பதில் எந்தவொரு பயனுமில்லை. தற்போது தமிழ் தேசிய அரசியல் சூழலில் நடைபெறும் அனைத்து விவாதங்களும் இந்த அடிப்படையைக் கொண்டதுதான். வாய்ப்புக்களை தவறவிட்டால் ஒரு சமூகத்திற்கு என்ன நடக்கும் என்பதற்கான உதாரணம்தான் ஈழத் தமிழ் சமூகத்தின் இன்றைய நிலைமை.
இந்த பின்புலத்தில்தான் தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்ப விடயங்களை கையாள வேண்டும். இருப்பவற்றை கொண்டுதான் சமைக்க வேண்டும் என்றவாறான கருத்தை என்னைப் போன்றவர்கள் – தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றோம். தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எவரெல்லாம் சிந்திக்கின்றாரோ, அவர்கள் வந்தடைய வேண்டிய இடம் இது ஒன்றுதான். இப்போது இதனை பலரும் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். இந்த இடத்தில்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற அரசியலமைப்பிலுள்ள விடயங்களை முதலில் கையாள வேண்டுமென்று நாம் கூறிவருகின்றோம். தமிழ் தேசிய கட்சிகளில் பெரும்பாலானவை இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்றன.
யுத்தத்திற்கு பின்னரான தமிழ் தேசிய அரசியல் என்பது, அடிப்படையிலேயே, வெளிநாடுகளின் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதுதான். மனித உரிமை சார்ந்த அழுத்தங்களின் ஊடாக, இலங்கை அரசாங்கத்தை இறங்கிவரச் செய்வதுதான், தமிழர் அரசியலின் பிரதான இலக்காக இருந்தது. ஆரம்பத்தில் இந்தியாவை நோக்கி கோரிக்கைகளை முன்வைப்பதில், தமிழ் தேசிய கட்சிகள் பெரியளவில் ஆர்வம் காண்பித்திருக்கவில்லை. புலம்பெயர் சமூகத்தால் மேற்கு நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்த முடியுமென்னும் தவறான நம்பிக்கையே மேலோங்கியிருந்தது.
கடந்த ஆண்டுதான், முதல் முதலாக, தமிழ் தேசிய கட்சிகள், இந்தியாவை நோக்கச் சென்றிருந்தன. ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. கடந்த பதின்நான்கு வருடங்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு, தமிழ் கட்சிகள் ஒரு நகர்வை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுதான்.
2015இல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவை முற்றிலுமாக மறந்தே செயற்பட்டது. எவ்வாறு இந்தியாவின் உதவியில்லாமல் தனிநாடு ஒன்றை தங்களால் அடைய முடியுமென்று விடுதலைப் புலிகளின் தலைமை கருதிச் செயற்பட்டதோ, அவ்வாறானதொரு அணுகுமுறைதான், சம்பந்தனிடமும் இருந்தது. அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் பற்றி எவருமே பேச வேண்டியதில்லை என்று சம்பந்தன் சூழுரைத்தார் – நாங்கள் அதனைத் தாண்டி அதிக தூரம் சென்றுவிட்மோம் என்றார்.
ஆனால் இன்றோ, மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தமிழர் அரசியல் தேங்கிக்கிடக்கின்றது. சம்பந்தன் இன்னொரு வரலாற்று தவறையும் இழைத்தார். அதாவது, பிராந்திய சக்தியொன்றின் தலைவரும், உலகின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவருமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை கைநழுவிட்டார். தமிழ் மக்களின் புத்திக் கூர்மையை பரிகசிக்கும் வகையில் அதற்கு பதிலளித்தார். தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதியின் மகனுக்கு திருமணம், அதனால் பிறிதொரு நேரத்தை தருமாறு இந்திய தூதரகத்திற்கு அறிவித்தார். இவ்வாறானவர்களை தங்களின் அரசியல் தலைவர்களாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு, வெளிநாடுகள் எவ்வாறு உதவ முடியும்? அவ்வாறிருந்த போதும், இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களின் நியாயங்களுக்காக குரல் கொடுத்துவருகின்றது. இந்தியா ஒன்றுதான், வடக்கு கிழக்கை வரலாற்று வாழ்விடமாகக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நியாயமானது என்று வலியுறுத்திவரும் ஒரேயொரு நாடாகும்.
இந்தியா போதிய அழுத்தங்களை கொடுக்கவில்லை, என்றவாறான – ஒரு தவறான கருத்தை சிலர் முன்வைக்க முயற்சிக்கின்றனர். அத்துடன், இந்தியா தமிழ் மக்களின் நலன்களை 13வது திருத்தச்சட்டத்திற்குள் திணிக்க முயல்வதாகவும் அதற்காக பல முகவர்களை பயன்படுத்துவதாகவும் பொய்யான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றனர்.
2009இற்கு பின்னரான தமிழ் தேசிய அரசியல் போக்கில் இது ஒரு நோயாகவே தொடர்கின்றது. யதார்த்தமாக சிந்தக்க வேண்டுமென்று எவரேனும் கூறினால் அவர்களுக்கு பின்னால் இந்தியா இருக்கின்றது. இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய போதும், அதனை விரும்பாதவர்கள், இது இந்தியாவின் நிகழ்ச்சிநிரலென்றே கதைகளை புனைந்தனர். இவ்வாறு எல்லாவற்றுக்குப் பின்னாலும் யாரோ ஒருவரது கை இருப்பதாக கூறுபவர்களின் பின்னாலும் யாரோ ஒருவரது கை இருக்க வேண்டுமல்லவா?
ஏனெனில் இவ்வாறான பொய்யான கதைகளை பரப்ப முற்படுபவர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு ஒற்றுமையுண்டு. அனைவருமே இந்தியாவை சாடுபவர்களாக இருக்கின்றனர். அத்துடன், 13வது திருத்தச்சட்டத்தை ஒரு ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ளக் கூடாதென்று வாதிடுபவர்கள். அவ்வாறாயின் இவர்களுக்கு பின்னாலுள்ள, அந்த திரைமறைவு சக்தி எது?
இலங்கையின் வடக்கு கிழக்கு வரலாற்று ரீதியாக தென்னிந்தியாவுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருக்கும் பகுதியாகும். ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்தியாவிற்குமான பிணைப்பு மிகவும் வலுவானது. இவ்வாறானதொரு பின்புலத்தில், அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுக்குள் சீனாவும் ஆங்காங்கே மூக்கை நுழைக்கின்றது. சீனாவின் ஊடுருவும் அணுகுமுறைகளில் ஒன்று, சென்று ஆடுவதாகும். இதில் முதலாவது செல்வது, பின்னர் ஆடுவதா அல்லது இல்லையா என்பது இரண்டாவது. தற்போது, வடக்கு கிழக்குப் பகுதிகளில் நிவாரணப் பொருட்களுடன் சீனா வட்டமிடுகின்றது.
இவ்வாறானதொரு சூழலில், இந்தியாவை சாடும் கருத்துக்கள் வெளிவருவதை எவ்வாறு சந்தேகிக்காமல் இருக்க முடியும்?
சீனாவை தமிழ் தேசியவாத சக்திகள் எதிர்க்க வேண்டுமா , இல்லையா என்னும் புதிய வாழைப் பழமொன்றில், ஊசி ஏற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாக தெரிகின்றது, இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சொற்பமானவர்கள். ஆனாலும் வாழைப்பழத்தில் ஊசியிருப்பதை அறியாது, சிலர் விழுங்கிவிட்டால், அது மிகவும் ஆபத்தானது. சீனா எந்தக் காலத்திலும், தமிழர் விவகாரத்தை கருத்தில் கொண்ட நாடல்ல. அவ்வாறு கருத்தில் கொள்வதற்கான எந்தவொரு கடப்பாடும் அதற்கில்லை. தவிர, யுத்தத்திற்கு பின்னரான, தமிழர் கோரிக்கைகளான மனித உரிமை மற்றும் நீதி என்னும் சொற்களானது, சீனாவின் கொள்கைக்குள் என்றுமே அடங்காதது. இவ்வாறான பின்புலத்தில், இந்தியாவிற்காக சீனாவை எதற்காக எதிர்க்க வேண்டும் என்னும் கேள்வியே தவறானது. உண்மையில் இது எவரையும் எதிர்ப்பது பற்றியதல்ல மாறாக, தமிழ் மக்கள் முன்னிறுத்தும் அரசியலின் அடிப்படையில், எவருடன் பேசலாம், எவருடன் பேச முடியாது என்பதாகும்.
இந்தியா அதன் வரலாற்றுப் பொறுப்பை, சரியான தருணங்களில் நிறைவேற்றிய ஒரு நாடு. ஆனால் அன்றைய சூழலை, தமிழர் தரப்போ வாய்ப்புக்களை புத்திசாதுர்யமாக கையாளவில்லை. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தக்கட்டுரையாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டு, இந்தியாவின் மீது, குற்றம்சாட்டுவதில் எவ்வித பயனுமில்லை.
இந்தியா ஒரு பிராந்திய சக்தி. அதே வேளை உலகின் முக்கிய சக்தி. அவ்வாறான ஒரு நாடு, அதன் நீண்டகால நலன்களை கருத்தில் கொண்டுதான் சில தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். நமக்கு சுடுகிற போதெல்லாம், மடியை பிடியுங்கள் – என்றவாறு, நாம் நாடுகளை நோக்க முடியாது. ஒரு காலத்தில், இந்தியா அதன் தோள்களை நமக்காக தந்தது. ஆனால் தமிழர் தரப்பு சந்தர்ப்பத்தை புத்திசாதுர்யமாக கையாளவில்லை. அதற்காக இப்போது எல்லாமே, முடிந்துவிட்டது என்பதல்ல அர்த்தம். இப்போதிருக்கும் வாய்ப்புக்களை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வது எப்படி, அதற்காக இந்தியாவை எவ்வாறு அணுகுவது என்று சிந்தித்தால், சில வாய்ப்புக்கள் தென்படலாம்.