இஸ்ரேலை கண்டிக்கும் தகுதி யாருக்குண்டு?

பாலஸ்தீனிய இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் கடந்த 7ம் திகதி, இஸ்ரேலிய மக்கள் மீது, திடீர் தாக்குலை மேற்கொண்டிருந்தது. ஹமாஸ் எனப்படும் குறித்த அமைப்பானது, இஸ்ரேலை அழிப்பதை கொள்கையாகக் கொண்டிருக்கும் பலஸ்தீனிய ஆயுத அமைப்பாகும். அமெரிக்கா உட்பட ஜரோப்பிய நாடுகள் பலவற்றால் ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது. யூதர்களின் பிரதான விடுமுறை தினத்தின் போதே ஹமாஸ் இந்தக் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

இது ஒரு இராணுவ தாக்குதல் அல்ல. மாறாக, முற்றிலும் யூத சிவிலியன்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட மோசமான தாக்குலாகும். இதன் போது, 1200இற்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர். சிறுவர்கள் வயதானவர்கள், பெண்;கள் என பலர், பணயக் கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனர். யூதக் குடியிருப்புக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுததாரிகள், வீடு, வீடாக சென்று, யூதர்களை வெளியில் இழுத்து, கொலை செய்திருக்கின்றனர். பலர் அவர்களது பிள்ளைகளின் முன்னாலேயே சுடப்பட்டிருக்கின்றனர்.

இது பற்றி கருத்துக் கூறும் ஹிப்று பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றியலாளருமான யுவா நுவால் ஹராரி, ஹமாஸின் தாக்குதல் யூதர்களின் மீது உளவில் யுத்தமொன்றை முன்னெடுக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறுகின்றார். மிகவும் கொடுரமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் தாக்குதல் போன்றே, ஹமாஸின் தாக்குதல் நடவடிக்கைகளும் நன்கு திட்டமிடப்பட்டிருந்ததாக ஹாராரி கூறுகின்றார். ஹாராரி இஸ்ரேல் அரசின் அணுகுமுறைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைக்க தயங்காத ஒருவர். பல தலைமுறைகளுக்கு யூத – பலஸ்தீனிய மோதல்கள் தொடர வேண்டும் என்பதே, ஹமாஸ் தாக்குதலின் உள் நோக்கமென்றும் அவர் கூறுகின்றார். திட்டமிட்ட வகையில் யூத மக்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டிருப்பதை நோக்கும் போது, ஹாராரியின் கணிப்பு மிகவும் சரியானது.

ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிடம் அமைதியை எதிர்பார்க்க முடியுமா? நிச்சயமாக இல்லை. யூத குடியிருப்புக்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல், யுத்தத்தை பிரகடணம் செய்தது. ஹமாஸை துடைத்தழிப்பதே இந்த யுத்தத்தின் இலக்கென்றும் இஸ்ரேலிய பிரதமர் நெத்தனியாகு சூழுரைத்தார். அப்பாவி யூத மக்கள் மீதான ஹமாஸின் தாக்குதலின் விளைவுகளை அப்பாவி பாலஸ்தீனிய மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். பலஸ்தீனியர்களின் காசா பகுதி சுடுகாடாகி வருகின்றது. வைத்திசாலை மீது விழுந்த குண்டுகளால், ஒரே நேரத்தல் 500இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதனை இஸ்ரேலிய படைகளே மேற்கொண்டதாக பலரும் குற்றம்சாட்டிவருகின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனோ, இதற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை, இது வேறொரு தரப்பால் செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கின்றார்.

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தை தொடர்ந்து, நமது தமிழ் சூழலிலும் இதன் பிரதிபலிப்பை காண முடிகின்றது. காசா பகுதியிலுள்ள வைத்திசாலை தாக்கப்பட்ட சம்பவத்தை நடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன் கண்டித்திருக்கின்றார். இது வெறுக்கத்தக்க போர் குற்றமென்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அதே போன்று இன்னும் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும் பாலஸ்தீனியர்களுடன் ஈழத் தமிழர்கள் மனதளவில் இணைந்திருக்க வேண்டும் என்றவாறு தங்களின் கதைகளை சொல்லியிருக்கின்றனர்.

மானுடத்தின் மீதான நேயத்தினடிப்படையில் உலகில் எப்பகுதியில் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டாலும், அதன் மீதான நமது கரிசனையை காண்பிப்பதில் தவறில்லை. நாங்களும் அவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொண்ட ஒரு மக்கள் கூட்டமென்னும் வகையில், காசா பகுதியில் அகப்பட்டிருக்கும், அப்பாவி பலஸ்தீனிய மக்கள் தொடர்பில் நமது கரிசனைகளை வெளிப்படுத்த வேண்டுமென்று ஒருவர் கூறினால் அதில் தவறில்லை. ஆனால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது, மக்கள் மீதான கரிசனையில் பக்கச்சார்பு இருக்கக் கூடாது. எவராயினும் அவர் மக்கள்தான். இந்த அடிப்படையில் சிந்தித்தால் மட்டும்தான், நமது எண்ணத்தில் பரிசுத்தம் தெரியும். ஆனால் தமிழ் சூழலில் பாலஸ்தீனம் தொடர்பில் நீலிக்கண்ணீர் வடிக்க முற்படும் நமது தமிழ் அன்பர்கள் எவரிடமும் அந்த பரிசுத்தம் இல்லை என்பதுதான் பிரச்சினையாகும்.

பாலஸ்தீனியர்களுக்கும் நமக்குமுள்ள உறவு என்ன ? இப்படியொரு கேள்வியை கேட்டால் – அதற்கான பதில் இப்படியிருக்கும். ஒரு காலத்தில் பாலஸ்தீனம் நமது விடுதலை இயக்க போராளிகளுக்கு பயிற்சியளித்தது. எமது போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை அவர்கள், அன்று வழங்கியவர்கள். உண்மைதான். ஆனால் அப்போதிருந்த பாலஸ்தீனம் ஜசீர் அறபாத்தின் பாலஸ்தீனமாகும். இப்போதிருப்பது, இஸ்லாமிய சகோதரத்துவ கருத்தியலால் வழிநடத்தப்படும் ஹமாஸின் பாலஸ்தீனமாகும்.

இந்த அடிப்படையில் விவாதிப்பதாயின் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அனைவரும் இஸ்ரேலுடன்தான் நிற்க வேண்டும். ஏனெனில் அன்றைய சூழலில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் பயிற்சியளித்த கதை பிரபலமானது. ஆரம்பத்தில் இரகசியமாக இருந்த விடயம், பின்னர் மொசாட் அதிகாரியான விக்டர் ஒட்ரோவ்ஸ்கி, எழுதிய, வஞ்சக வழிகளின் ஊடாக என்னும் நூல் வெளியானதைத் தொடர்ந்து, இது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த நூலில் இலங்கை இராணுவத்திற்கும், சமவேளையில் பொதுவாக புலிகள் என்றழைக்கப்படும் இலங்கைத் தமிழ் ஆயுத அமைப்பிற்கும், மொசாட் பயிற்சியளித்த கதையை அவர் விபரித்திருக்கின்றார். இரண்டு தரப்புக்களும் ஒருவரையொருவர் சந்தித்துவிடக் கூடாதென்னும், தனது மேலதிகாரியின் உத்தரவிற்காக தான் எவ்வாறு அவதானத்துடன் செயற்பட வேண்டியிருந்தது, பற்றியெல்லாம், விக்டர் விபரித்திருக்கின்றார். அந்தக் காலத்தில் புலிகள் என்றழைக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டும்தான். இந்த அடிப்படையில் சிந்திப்பதாயின், ஈழத் தமிழர்கள் மனதளவில் இஸ்ரேலுடனுமல்லவா நிற்க வேண்டும்.

ஆனால் பிரச்சினை வேறு. அன்றைய அரசியல் சூழலில், ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு நோக்கத்திற்காக ஈழ ஆயுத இயக்கங்களுக்கு பயிற்சியளிக்க முன்வந்திருந்தது. பின்னர், அனைவரையும் ஓரங்கட்டும் நோக்கில், அனைத்தையும் இந்தியா பொறுப்பெடுத்தது. இந்தியாவின் பயற்சி மற்றும் நிதியுதவியில்தான் சாதாரணமாக இருந்த தமிழ் ஆயுத அமைப்புக்கள் திடிரென்று வீங்கின. இலங்கை இராணுவத்திற்கு பெரும் சவாலாக மாறின. இந்த இடத்தில் ஈழத் தமிழர்கள் இந்தியாவுடன்தான் அதிகம் மனதளவில் நிற்க வேண்டும். எப்போதுமே நிற்க வேண்டும்.

ஆனால் விடயங்களை தொகுத்து நோக்கினால் அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. ஒரு காலத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றோம் என்பதற்காக, ஹமாஸால் வழிநடத்தப்படும் பாலஸ்தீனத்துடன் ஈழத் தமிழர்கள் மனதளவில் நிற்க வேண்டுமென்று கூறுவது சிறுபிள்ளைத்தனம். இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கை புரிந்துகொள்ள முடியாதவர்களே, இவ்வாறு உளறிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பாதிக்கப்படும் மக்களின் பக்கமாக எங்களுடைய கரிசனையை காண்பிக்க வேண்டுமென்று ஒருவர் கூறினால், அது சரியானது. ஆனால் அதிலும் ஒரு சிக்கலுண்டு. அப்பாவி யூத மக்கள் கொல்லப்படும் போது, அமைதியாக உறங்கிவிட்டு, பின்னர் திடிரென்று விழித்து, பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறுவதானது, ஒரு மோசடியாகும்.

இரு வாரங்களுக்கு முன்னர், ஹமாஸ் அப்பாவி யூத மக்களை கொன்ற போது, அது தொடர்பில் எவரும் கண்டணங்களை வெளியிடவில்லை. ஏன்? ஏன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யூத மக்களுக்காக பேசவில்லை? இப்போது பாலஸ்தீனியர்கள் மீது திடீர் கரிசனைவரக் காரணமென்ன? ஒரு வேளை பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுத்தால், இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் சந்தோசப்படுவார்களென்று சுமந்திரன் எண்ணுகின்றாரோ!

அப்பாவி மக்களை இலக்கு வைக்கும் அணுகுமுறையை எவர் மேற்கொண்டாலும் நாம் அதனை கண்டிக்க வேண்டும். தங்களது – யூத, கிறிஸ்தவ மற்றும் அமெரிக்க எதிர்ப்பு வாதத்திற்காக, சாதாரண மக்களை இலக்கு வைக்க முடியுமென்னும் கொலை வாதமொன்றை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் கைக்கொண்டிருக்கின்றன. அதுவே அவர்களது அடிப்படையான தாக்குதல் உக்தியுமாகும்.

இந்த அடிப்படையில்தான், 2001இல், ஒஸாமா பின்லேடன் தலைமையிலான அல் ஹைடா அமைப்பு, அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதன் போது, அண்ணளவாக 3000 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அல் ஹைடாவின் தொடர்சிதான் ஜ.எஸ்.ஜ.எஸ். இப்போது இந்த வரிசையில் பாலஸ்தீனிய ஹமாஸ். உண்மையில் இஸ்ரேலை கண்டிப்பதைவிடவும், அப்பாவி மக்களை இராணுவ இலக்காகக் கொள்ளும் ஹமாஸ் போன்ற அமைப்புக்களைத்தான் நாம் கண்டிக்க வேண்டும். ஆனால் நமது சூழலில் அதனை காணமுடியவில்லை. யூத மக்களுக்காக குரல் கொடுக்க முடியாதவர்கள் பாலஸ்தீனிய மக்களுக்காக குரல் கொடுக்கும் தகுதியற்றவர்களாவர்.

அப்படியில்லாவிட்டால், இந்த விடயத்தில் எந்தவொரு கருத்தையும் கூறாது அமைதியாக இருக்க வேண்டும். அதனை வேண்டுமென்றால் ஒரு ராஜதந்திர நகர்வென்று கூறிவிட்டுப் போகலாம். ஆனால் ஒரு நிலைப்பாடு எடுப்பதாயின், நிச்சயம் ஹமாஸின் பக்கமாக எடுக்கவே முடியாது. ஏனெனில் அது இப்போது ஜ.எஸ்.ஜ.எஸ். அமைப்புடன் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றது. அரசியல் மாற்றங்களை உற்று நோக்காமல் வெறும் மனவெழுச்சியிலிருந்து தீர்மானங்களை எடுப்பதானது, அரசியல்ரீயில், தமிழர்களை மேலும் தனிமைப்படுத்தும்.