இந்திய எதிர்ப்புவாத நினைவு கூர்தல்களுக்கு பின்னால் ?

பரகசியம் – 1

1987ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 21 – 22 ஆம் திகதிகளில், இந்திய அமைதிப் படையினர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் தரையிறங்க முற்பட்டனர் – அப்போது வைத்தியசாலை வளாகத்திற்குள்ளிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முற்றிலும் புதிய அனுபவத்தை எதிர்கொண்ட, இந்திய துருப்புக்கள், பதில் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன் போது, வைத்தியசாலையில் கடமையிலிருந்த வைத்தியர்கள் உட்பட நோயாளிகளுமாக 60 – 70 வரையான சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவமானது, பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது இடம்பெற்றதாக, அப்போது, இந்திய இராணுவ நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த, லெப்ரினன் ஜெனரல் தீபந்தர் சிங் குறிப்பிட்டிருந்தார் – நிச்சயமாக, திட்டமிட்டு சிவிலியன்களை தாக்கவேண்டிய எந்தவொரு அவசியமும் இந்திய படைகளுக்கு இருந்திருக்கவில்லை – ஏனெனில் இந்திய அமைதிப் படையினர் வந்தது சண்டையிடுவதற்கல்ல. விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக, பிரேமதாசவுடன் ஆதரவுடன், ஆயுதங்களை திருப்பிய போதுதான், பதிலுக்கு சண்டையிட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. இல்லாவிட்டால் இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் ஓரு போதும் இந்திய படைகளின் பக்கத்திலிருந்து நடந்திருக்காது.

இந்த சம்பவம் இடம்பெற்று 36 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இப்போதும் இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் என்னுமடிப்படையில் இதனை சில குழுக்கள் நினைவு கூர முற்படுகின்றனர். யுத்தத்தின் போது, சிவிலியன்கள் கொல்லப்படுவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானதென்றாலும், ஆயுத அமைப்புக்களும் அரசாங்க படைகளும் மோதுகின்ற சந்தர்பங்களில் இவ்வாறான துயர சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனை நினைவு கூர்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல ஆனால் இதனை இந்திய எதிர்ப்புக்கான கருவியாக பயன்படுத்த முற்படுவதுதான் பிரச்சினையானது.

இதன் பின்னணி என்னவென்று ஆராய்ந்த போது சில விடயங்கள் அகப்பட்டன. அண்மையில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணின் இசை நிகழ்சியொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மக்கள் நிகழ்வில் அலை மோதினர். நாராயணன், மங்கள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டு, அவரது மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிகழ்வில் பங்குகொள்ள வேண்டாமென்று சந்தோஸ் நாராயணனுக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்னும் பெயரில் இயங்கிவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கடிதமொன்றை அனுப்பியிருந்தது. இது இந்திய படைகளினால் மேற்கொள்ளப்பட்ட, வைத்தியசாலை படுகொலையை நினைவு கூரும் நாள் – எனவே அந்த நாளில் இந்திய – இலங்கை அசுகள் திட்டமிட்டு இந்த இசை நிகழ்சியை ஏற்பாடு செய்திருக்கின்றன – எனவே இதில் தாங்கள் பங்குகொள்ள வேண்டாம் – அப்படி பங்குகொண்டால் உங்களின் நற்பெயர் கெட்டுவிடும் என்றவாறு, ஒருவித அச்சுறுத்தல் பாணியில் கஜேத்திரகுமார் பொன்னம்பலம் சந்தோஸ் நாராயணணை எச்சரித்திருந்தார் ஆனாலும் இசை நிகழ்வோ சிறப்பாக இடம்பெற்றது. இதிலுள்ள இரகசியமும் வேறு – அதாவது, குறித்த திகதியை சந்தோஸ் நாராயணன்தான் கொடுத்திருக்கின்றார். இதற்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. மேலும் யாழ்ப்பாணத்திலுள்ள எவருமே இந்த விடயம் தொடர்பில் தூதரகத்தில் முறையிடவும் இல்லை.

சந்தோஸ் நாராயணன் அச்சுறுத்தப்பட்டதன் பின்னர், தென்னிந்தியாவின் பிரபல பத்திரிகையான தினமலர், இதற்கு பின்னால் சீனா இருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

இது பற்றிய தகவல்களை திரட்டிய போது, அந்தச் செய்தியை பொய்யென்று தட்டிக் கழித்துவிட முடியதென்னும் தகவலே கிடைத்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை ஒரு களமாகக் கொண்டே, சீனா நாட்டுக்குள் புகுந்தது. சீனாவின் உள் நுழையும் தந்திரம் வித்தியாசமானது. எங்கு இந்தியாவும் அமெரிக்காவும் தயக்கம் காண்பிக்கின்றதோ, அது சீனாவிற்கான வாய்ப்பு. அதே போன்று, எங்கு அமெரிக்க இந்திய எதிர்ப்புக்களும் வெறுப்புக்களும் இருக்கின்றதோ, அதுதான் சீனாவுக்கான முதலீடு. உண்மையில் சீனாதான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை வெற்றிகொள்வதற்கான ஆயுத பலத்தை வழங்கியது. இதன் காரணமாகத்தான் மகிந்த சீனாவின் வலைக்குள் விழுந்தார். ஒரு வேளை இந்த உதவியை இந்தியா செய்திருந்தால் மகிந்த சீனாவின் பக்கம் சென்றிருக்க மாட்டார். சீனா சூழ்நிலையை துல்லியமாக கணித்தே காய்களை நகர்த்தியிருந்தது. இந்தியாவும் அமெரிக்காவும் மகிந்தவின் யுத்தத்திற்கு தாக்குதல் ஆயுதங்களை வழங்காது – அதற்கான அரசியல் சூழல் இல்லையென்பதை, சரியாக கணித்துக் கொண்டே – சீனா, களத்தில் இறங்கியது. அதன் இலக்கை அடைந்தது.

அண்மைக்காலமாக சீனா வடக்கு கிழக்கிற்குள் காலூன்றுவதற்கான ஆர்வத்தையும் காண்பித்துவருகின்றது ஆனால் இதில் மிகுந்த எச்சரிக்கையுடனேயே காய்களை நகர்த்துகின்றது. வடக்கு கிழக்கின் அரசியல் சூழலை துல்லியமாக கணித்து வைத்திருக்கும் சீனா, இந்திய எதிர்ப்புக் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மறைமுகமாக ஆதரிக்கின்றது. ஒரு விடயத்தை மக்கள் கவனிக்க வேண்டும். இன்று இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் தொடர்பில் சத்தமிடும் சைக்கிள் கட்சியினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் எவையுமே , இறுதி யுத்தத்தை தொய்வில்லாமல் கொண்டுசெல்வதற்கு, மகிந்தவிற்கு உதவிய – சீனா தொடர்பில் வாய்திறப்பதில்லை. ஏன்? ஆனால் மறுவளமாக, திலீபன், பூபதி ஆகியோரை நினைவு கூர்தலென்னும் பெயரில் இந்திய எதிர்ப்பை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்தும் வேலையையே சைக்கிள் கட்சியினர் செய்கின்றனர். இதனால் இவர்களுக்கு என்ன இலாபம்? ஏன் இவர்கள் இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்? இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுப்பதால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு நன்மையில்லை. அப்படியாயின் யாருக்கு நன்மை?

அதே வேளை, சீன சார்பு, தென்னிலங்கை சிங்கள கடும்போக்குவாத குழுக்களும், கஜேந்திரகுமார் ஒருவர்தான் தங்களுக்கு சவாலானவர் என்றவாறான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பலமான கட்சியென்றால் – அது சைக்கிள் அணியினர், மட்டும்தான் என்றவாறான கருத்தை உருவாக்கப் பார்க்கின்றனர். இதுவும் தற்செயலாக நடைபெறும் விடயமல்ல. இதற்கு பின்னாலும் ஒரு நிகழ்சிநிரல் இருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது போன்றுதான் காசாவிலும் இனப்படுகொலை இடம்பெற்றுவருவதாக கஜேந்திரகுமார் பேசியிருக்கின்றார் ஆனால் முள்ளிவாய்க்காலும் காசாவும் ஒன்றல்ல. அப்படி ஒப்பிடுவது முட்டாள்தனமானது. ஆனாலும் கஜேந்திரகுமார் அதனை செய்கின்றார் ஆனால் சீனாவின், சின்ஜியாங் மானிலத்திலுள்ள, உய்குர் இன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை அரங்கேற்றிவருவதாக உலகளவில் குற்றச்சாட்டுக்கள் உண்டு ஆனால் இதுபற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ ஏனையவர்களோ வாய்திறந்ததில்லை. ஏன்?

இனிமேல் இது இரகசியம் இல்லை – அதாவது, வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்கள் அனைத்துமே சீனாவிற்காகத்தான் செய்யப்படுகின்றன. இந்தப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான துருப்புச் சீட்டாகவே, இந்திய அமைதிப்படை கால நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன. இதனை நமது மக்கள் மறந்துவிடக் கூடாது.