இந்திய – இலங்கை ஒப்பந்தமே அடிப்படையானது

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கான சந்திப்பொன்று இடம்பெற்றது. மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு கிழக்கு சிவில் சமூகக் குழு இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் தேசிய நிலைப்பாட்டில் செயற்படும் பிரதான கட்சிகள் அனைத்தும் இதில் பங்குகொண்டிருந்தன. வழமைபோல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை. சி.வி.விக்கினேஸ்வரன் தவறுதலாக நேரத்தை தவறவிட்டுவிட்டதாக பின்னர் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார் அத்துடன் முயற்சியை தொடருமாறும் கூறியிருக்கி;ன்றார். இந்த வகையில் நோக்கினால், தமிழ் தேசிய அரசியல் பரப்பில் செயற்படும் பிரதான கட்சிகள் அனைவருமே நிகழ்வை ஆதரித்திருந்தனர்.

“தமிழ் தேசிய கட்சிகள் செய்ய வேண்டியது என்ன” என்னும் தலைப்பில் இடம்பெற்ற, இந்தச் சந்திப்பில் பேச்சாளர்கள் மட்டுமே பேசியிருந்தனர். இந்த விடயத்தில் ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்திருக்கின்றனர். அதாவது, முதல் சந்திப்பிலேயே அரசியல்வாதிகள் பேசுகின்ற போது, தேவையற்ற முரண்பாடுகள் ஏற்பட்டுவிடலாம் என்பதால், அரசியல்வாதிகள் எவரும் நிகழ்வில் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா மற்றும் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடுள்ள புத்திஜீவிகள் மற்றும் ஊடகர்கள் சிலரது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும், மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு கிழக்கு சிவில் சமூகம் சில மாதங்களுக்கு முன்னர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் ஏட்டிக்கு போட்டியான நிலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்தான், ஒரு சிவில் சமூகமாக ராஜதந்திர விடயங்களில் தலையீடு செய்ய வேண்டும் என்னும் தீர்மானத்தை மேற்கொண்டது. தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு சிவில் சமூகக் குழு, இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியது. இதுதான் முதல் சந்தர்ப்பமாகும். இந்த விடயத்திற்கு இ;ந்திய ஊடகங்கள் முக்கியத்துவமளித்திருந்தன.

தமிழ் மக்களுக்கான உச்சபட்சமான அரசியல் தீர்வாக சமஸ்டி இருந்தாலும் கூட, ஒரு இடைக்கால ஏற்பாடாக, அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தச்சட்டத்தை உச்சபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை மக்கள் முறைப்பாட்டுக்கான சிவில் சமூகக் குழு கொண்டிருக்கின்றது. இந்த இடத்தில்தான் இந்தியாவின் தலையீடு தேவைப்படுகின்றது. இந்தியா தொடர்ந்தும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வருகின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தமே அதற்கான அடிப்படையாக இருக்கின்றது. அந்த வகையில், ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில், இந்தியா மட்டும்தான், உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் ஒரேயொரு வெளித்ததரப்பாகும்.

இந்த அடிப்படையில்தான், மக்கள் முறைப்பாட்டுக்கான சிவில் சமூக குழு, அரசியல் கட்சிகளுக்கு சமதையாக பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதமொன்றை அனுப்பியிருந்தது. பிரதான ஆறு தமிழ் கட்சிகள் இணைந்து, 2022இல், பிரமதமர் மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது. ஆனால் பின்னர் முதல் கடிதத்தில் கையெழுத்திட்ட இலங்கை தமிழரசு கட்சி, தனியானதொரு கடிதத்தை அனுப்பியிருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தி;ன் விழைவான, 13வது திருத்தச்சட்டத்தை முற்றிலுமாhக இல்லாதொழிக்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனியானதொரு கடிதத்தை அனுப்பியிருந்தது. அரசியல் கட்சிகள் இவ்வாறு தங்களுக்குள் குழும்பிக் கொண்டிருந்த நிலையில்தான், மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு கிழக்கு சிவில் சமூகம் செயலில் இறங்கியது.

இந்த சிவில் சமூக முயற்சியின் மீதும் வழமைபோல் விமர்சன கற்கள் வீசப்பட்டன. இவர்கள் சிவில் சமூகமா என்னும் கேள்வியும் எழுப்பப்பட்டது. இவர்கள் தங்களை தாங்களே சிவில் சமூகமென்று அழைத்துக் கொள்பவர்கள் என்றும் கூறப்பட்டது. யுத்தமில்லாத கடந்த பதின்நான்கு வருடங்களில் பல குழுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. அவ்வாறானவர்கள் அனைவருமே தங்களை சிவில் சமூகக் குழுக்கள் என்றே அழைத்துக் கொண்டனர். அந்த வேளையில் எவரும் அவர்களது தகுதி பற்றி பேசவில்லை. தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் பெயரில் பல்வேறு அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. கஜேந்திரகுமார் தலைமையில், 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வடக்கில் ஊர்தி பவணி முன்னெடுக்கப்பட்ட போது, தமிழ் சிவில் சமூகம் அதற்கு சார்பாக அறிக்கை வெளியிட்டது. இப்போதும் குறித்த குழுவானது, அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுகின்றது. இவர்கள் யார்? இவர்களுடைய பின்னணி என்ன? அப்போது எவரும் கேள்வி எழுப்பவில்லை. இதே போன்று, ஒவ்வொரு மாவட்டங்களிலும் தங்களை சிவில் சமூகக் குழு என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

தமிழ் சிவில் சமூக அமையம் தொடக்கம் தமிழ் மக்கள் பேரவை வரையில் அனைத்து முயற்சிகளுமே, ஒரு குறிப்பிட்டவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது. அப்போது தகுதி பற்றி கேள்வி எழுப்பாதவர்கள், இப்போது ஏன் கேள்வி எழுப்புகின்றனர்? பதில் இலகுவானது. மக்கள் முறைப்பாட்டுக்கான சிவில் சமூகக் குழு சர்வதேச அரசியல் பற்றிய புரிதலோடு இயங்கும் ஒரேயொரு குழுவாகும். இந்தியாவை தவிர்த்து ஈழத் தமிழர்களுக்கு பிரத்தியேகமான அரசியல் இருக்க முடியாது என்பதில் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. பல குழுக்கள் தோன்றி மறைந்தது போன்று, இந்தக் குழுவிற்கான தேவை இல்லாமல் போகலாம். அப்போது, இதுவும் உதிர்ந்து போகலாம். ஆனால் இன்றைய சூழலில் இதன் பணியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். யார் – எவர் என்பதற்கு அப்பால், அவர்கள் கூறவரும் விடயத்தின் முக்கியத்துவம் என்ன ? அதன் காலப் பொருத்தப்பாடு என்ன? என்னும் கேள்விகளின் அடிப்படையில்தான் நாம் விடயங்களை உற்றுநோக்க வேண்டும்.

தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியில் பலர் தோல்வியடைந்திருக்கின்றனர். இதனை உணராமல், இந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. முன்னர் சில முயற்சிகள் தோல்வியடைந்தன என்பதால் மீண்டும் முயற்சிக்கக் கூடாதென்று கருதலாமா? கடந்த 74 வருடங்களாக தோற்றுப் போன சமஸ்டிக் கோரிக்கையைத்தான் இப்போதும் நமது கட்சிகள் உயர்த்திக் பிடிக்கின்றன? கடந்த பதின்நான்கு வருடங்களாக தோற்றுப் போன நீதிக்கான கோரிக்கைகளைத்தானே, நமது கட்சிகள் தொடர்ந்தும் உச்சரிக்கின்றன?

இன்றைய சூழல் முன்னரை விடவும் முக்கியமானது. அடுத்த ஆண்டு ஒரு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இலங்கையின் எதிர்காலத்தில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையலாம். ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக கூறிவரும் நிலையில், மறுபுறும் தமிழ் கட்சிகள் மத்தியிலிருந்து பலவாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் கொழும்பின் அதிகார தரப்புடன் பேரம்பேச வேண்டிய நிலையிலுக்கும் தமிழர் தரப்பு தங்களுக்குள் பிளவுற்றிருக்கின்றது. இந்த அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டால் தமிழ் மக்கள் ஒரு தரப்பாக நிற்க முடியாத நிலைமை ஏற்படலாம். அரசாங்க ஆதரவு தமிழ் கட்சிகள் அதிக ஆசனத்தை பெறுமானால், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை கையாளும் ஜனநாயக பலத்தை கட்சிகள் இழக்க நேரிடும். இவ்வாறானதொரு சூழலில்தான், தமிழ் கட்சிகள் ஒரு இடைக்கால ஏற்பாடாவாவது, ஒரணியாக வேண்டும் என்னும் நிலைப்பாடு தொடர்பில் சாதகமாக சிந்திக்க வேண்டியிருக்கின்றது. கடந்தவாரம் இடம்பெற்ற சிவில் சமூக கூட்டத்தின் அடிப்படை இதுதான்.

தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை தேவை. இவ்வாறு கூறுகின்ற போது முன்வைக்கப்படும் கேள்வி ஒன்றுண்டு. அதாவது, கொள்கை அடிப்படையிலான ஒன்றிணைவு தொடர்பில் பேசுவதா அல்லது தந்திரோபாய அடிப்படையிலான கூட்டு தொடர்பில் பேசுவதா? எது சரியானது? இங்கு எது சரியானது என்பதற்கப்பால், இன்றைய சூழலில் எது சாத்தியமானது என்னும் கேள்வியையே, நாம் கேட்க வேண்டும். ஏனெனில், தேர்தல் அரசியலில் பங்குகொள்ளாத அமைப்பு ஒன்றை கட்டியெழுப்பு முற்பட்டால் அங்கு கொள்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம். மக்களை ஒரு கொள்கை நிலையில் வழிநடத்துவது ஒன்றுதான் அந்த அமைப்பின் இலக்காக இருக்க முடியும். அங்கு பதவிப் போட்டிகள் வருவற்கான வாய்ப்பில்லை. ஆனால், இங்கு அப்படியல்ல. தேர்தலை இலக்காகக் கொண்டிருக்கும் கட்சிகள் தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது, தேர்தல் நலன்களையும் சேர்த்துத்தான் முடிவுகளை மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொள்ளாமல் கற்பனை செய்வதால் பயனில்லை.

ஒரு இடைக்கால ஏற்பாடு என்னுமடிப்படையில் ஒன்றாக பயணிப்பவர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதுதான் சரியானது. அந்த இடைக்கால ஏற்பாட்டிற்கான ஆகக் கூடிய கொள்கை ஒன்றை வரையறைத்துக் கொள்ளலாம். இடைக்கால இலக்கு வெற்றிகொள்ளப்பட்ட பின்னர், அடுத்த கட்டத்திற்கான அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ள முடியும். அதில் உடன்படக் கூடியவர்கள் தொடரலாம், உடன்பாடு இல்லாதவர்கள் விலகிச் செல்லலாம். இதன் முதல் படி, ஒரு வலுவான தேர்தல் கூட்டுத்தான். ஏனெனில் இங்கு தேர்தல் மூலமான வெற்றியே அதிகாரத்தை வழங்குகின்றது. ஆசனங்களின் எண்ணிக்கையே கட்சிகளின் தகுதியை தீர்மானிக்கின்றது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக கூடிய ஆசனங்ளை வெற்றிகொள்ளும் பொறிமுறை தொடர்பில் மட்டுமே தமிழ் தேசிய கட்சிகள் சிந்திக்க வேண்டும். ஒரு வலுவான அரசியல் கூட்டும், முறையான தேர்தல் வியூகமும் இருந்தால், வடக்கு கிழக்கின் அனைத்து ஆசனங்களையும் வெற்றிகொள்வதற்கான வாய்ப்பும் இருக்கின்றது.

இந்த அடிப்படையில் மக்கள் முறைப்பாட்டுக்கான வடக்கு கிழக்கு சிவில் சமூகம் ஒரு திசையை காண்பித்திருக்கின்றது. அவர்களுடன் ஏனைய சிவில் சமூக குழுக்களும் புத்திஜீவிகளும் இணைந்து கொண்டால், இதனை ஒரு வலுவான மக்கள் கருத்தாக மாற்றியமைக்க முடியும். ஒற்றுமையான செயற்பாடுகளை மக்கள் விரும்புகின்றனர். தொடர்ந்தும் பிளவடைந்து செல்வதை மக்கள் விரும்பவில்லை. தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், அரசியல் வேலைத்திட்டத்திற்கான வியூகம் ஒன்றை வகுத்துக்கொள்ள முடியும்.