தமிழ் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக இந்திய பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியிருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நிதானமான போக்கும் காணப்படுகின்றது. அதே போன்று, தெளிவற்ற அணுகுமுறையும் காணப்படுகின்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெளிவான பார்வை காணப்படுகின்றது. இந்தக் கூட்டில் இருப்பர்கள் அனைவருமே முன்னாள் ஆயுத இயக்கப் பின்புலம் கொண்டவர்கள். ஒப்பீட்டடிப்படையில் மேற்குலகுடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் இந்தியாவிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கோரியிருக்கின்றனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான இந்திய தலையீட்டையே, அவர்கள் கோருகின்றனர். அவர்களது கடிதம் அந்த அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. அதற்காக தமிழர் தரப்பிலிருந்து நீண்டகாலமாக கோரப்படும் சமஸ்டித் தீர்வை அவர்கள் நிராகரிக்கவில்லை ஆனால் முன்னோக்கிச் செல்லுவதற்கான ஒரு ஏற்பாடாக, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். தர்க்கரீதியில் இது சரியானது.
அடுத்த நிலைப்பாடு சிக்கலானது. புத்திசாலித்தனமற்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இந்தியா சமஸ்டித் தீர்வை வலியுறுத்தவேண்டுமென்று கோரியிருக்கின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் அணுனுமுறையிலும் இவ்வாறான போக்கே தெரிகின்றது. கஜேந்திரகுமார் அவ்வாறானதொரு கடிதத்;தை எழுதியிருப்பதால், அதற்கு சமதையான நிலைப்பாட்டைத்தான், தாங்களும் எடுக்க வேண்டுமென்று சம்பந்தன் கருதியிருக்கலாம். தமிழர்களின் கோரிக்கையென்று ஒன்றை முன்வைக்கலாம். அதில் தறில்லை. ஆனால், இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்ற போது, இந்தியாவை புரிந்துகொண்டு, அதற்கேற்பவே அணுக வேண்டும். எங்களது விருப்பங்களை கூறுவது கோரிக்கையல்ல. கோரிக்கைகளை முன்வைக்கும் போது, அதில் தந்திரோபாயம் இருக்க வேண்டும். அதே வேளை, இந்தியாவினாலும் நிராகரிக்க முடியாத விடயமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாங்கள் பிறிதொரு நாட்டிடமே கோரிக்கையை முன்வைக்கின்றோம். இந்த இடத்தில்தான் இந்தியா எங்களுக்கு ஏன் தேவையனெ;னும் கேள்வி எழுகின்றது?
இதனை இரண்டு நிலையில் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, இலங்கை அரசியல் நிலையிலிருந்து நோக்குவது. இரண்டாவது, சர்வதேச அரசியல் பின்புலத்திலிருந்து நோக்குவது. முதலில் இலங்கை அரசியலை புரிந்துகொள்வோம். இலங்கைத் தீவின் அரசியலென்பது சிங்கள மேலாதிக்க அரசியலாகும். தென்னிலங்கை மைய அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்ள, சிங்கள அரசியல் சமூகம் தயாராக இல்லை. இன்றுவரையில் இந்த நிலைமை தொடர்கின்றது. இந்த இடத்தில்தான், இந்தியாவின் தலையீடு தேவைப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மறுத்துவரும் நிலையில்தான், இந்தியாவின் அழுத்தங்கள் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. இந்தியா எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்? எந்த அடிப்படையில் பிரயோகிக் முடியும்?
இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியான தலையீட்டைச் செய்த காலத்திலிருந்து ஒரு கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதாவது, இலங்கையை துண்டாட அனுமதிப்பதில்லை. அடுத்தது, தமிழ் மக்கள் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கில் மாகாண அரசியல் நிர்வாக முறையின் கீழ் அதிகாரப்பகிர்வு. இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்துதான், இலங்கையின் உள் விவகாரத்தை இந்தியா அணுகி வருகின்றது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்த கொள்கையின் அடிப்படையில்தான் உருவானது. இதன் பின்னர் எதிர்பாராத திருப்பங்கள் சில அரசியலில் இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவிற்கு எதிராக திரும்பியது. இந்தியாவை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதை ஒரேயொரு இலக்காகக் கொண்டே விடுதலைப் புலிகள் செயற்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை தந்திரத்தோடு கணித்துக் கொண்ட, பிரேமதாச விடுதலைப் புலிகளை அரவணைத்து, இந்தியாவை வெளியேற்றும் திட்டத்தை வகுத்தார். அவரது எதிர்பார்ப்பு இறுதியில் நிறைவேறியது.
இதன் பின்னர் இலங்கையின் அரசியல் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்யவில்லை. உண்மையில் இந்தியா இந்த விடயத்தில் அவமானகரமாகவே வெளியேற நேர்ந்தது. எந்த மக்களுக்கு இந்தியா உதவ முன்வந்ததோ, எந்த மக்கள் மீது பரிவுணர்வு கொண்டிருந்ததோ, எந்த இயக்கத்திற்கு பயிற்சியும், ஆயுதமும், உணவும் வழங்கியதோ, அவர்களே இறுதியில், இந்தியாவை அன்னிய சக்தியென்று கூறி, வெளியேறுமாறு கூறினர். அவ்வாறு கூறிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியர், அன்ரன் பாலசிங்கம், பின்னர், இந்தியா எங்களுக்கு தேவையென்று கூறினார். 2000ஆம் ஆண்டு, இந்திய ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டார். 2006இல், மன்னிப்பு கோருவதன் மூலம் பழைய கசப்புனர்வை மாற்றியமைக்கவும் முயற்சித்தார். ஆனால் அப்போது, காலம் அதிகம் கடந்திருந்தது. இன்று யுத்தம் நிறைவுற்று 14 வருடங்களாகிவிட்டது. இந்த 14 வருடங்களில், ஏராளமான விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இந்த நிலையில்தான், இந்தியாவினால் தலையீடு செய்யக் கூடிய விடயமொன்றில், இந்தியாவை தலையீடு செய்யுமாறு கோர வேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது.
இந்தியா தலையீடு செய்யக் கூடிய, அதன் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரேயொரு விடயம், 13வது திருத்தச்சட்டம் மட்டும்தான். இலங்கைக்கு விஜயம் செய்த, இந்திய பிரதமர் மோடி, கூட்டுறவு சமஸ்டி முறைமையின் மீதான தனது ஈடுபாட்டை தெரிவித்திருந்தார். அதனை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு, இந்தியாவிடம் சமஸ்டியை வலியுறுத்தலாமென்று எண்ணுவது தவறு. ஏனெனில் இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடாக 13வது திருத்தச்சட்டமே இருக்கின்றது. அதிலிருந்து ஒரு கூட்டுறவு சமஸ்டியை நோக்கிச் செல்ல முடியுமென்றால், அது சிறப்பானது. அதற்கு நாங்கள் முயற்சிக்கலாம் ஆனால் அதனை இந்தியா தட்டில் வைத்து தரவேண்டுமென்று வாதிடுவதும், அதற்காக தற்போதிருப்பதை உச்சபட்சமாக பயன்படுத்திக்கொள்ள மறுப்பதும்தான் தவறானது.
இப்போது சர்வதேச அரசியல் பின்புலத்தில், இந்தியாவின் தேவையை நோக்குவோம். இன்றைய உலக அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. அன்று எதிரணிகளில் இருந்த இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது ஒரணியில் இருக்கின்றன. அன்று, அமெரிக்காவுடன் இணைந்திருந்த சீனா, இன்று அமெரிக்காவிற்கு எதிர்நிலையிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் பிராந்தியத்தில் சக்தி மிக்க நாடுகளாக இருப்பவற்றின் முக்கியத்துவம் முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அதிகரித்துவிட்டது. ரஸ்ய -உக்ரெயின் யுத்தத்தின் போது, இந்தியாவின் அணுகுமுறை இதற்கு சிறந்த உதாரணம். உக்ரெயினுக்கு பக்கபலமாக மேற்குலகம் நிற்கின்றது.#
அமெரிக்கா தொடர்ந்தும் உக்ரெயினுக்கு உதவி வருகின்றது. ஆனால் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கின்ற இந்தியா, இந்த யுத்தத்திலிருந்து தன்னை அதிகம் விலத்தி வைத்திருக்கின்றது. அமெரிக்கா ரஸ்யாவின் மீது பொருளாதார தடையை விதித்திருக்கின்றது. ஆனால் இந்தியாவோ, சுதந்திரமாக ரஸ்யாவுடன் வியாபாரம் செய்கின்றது. இது எவ்வாறு நிகழ்கின்றது? ஏனெனில், உலகம் அதிகம் பிராந்திய மயப்படுத்தப்பட்டுவருகின்றது. ஆனால் முன்னர் அவ்வாறில்லை. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த காலத்தில், அது சோவியத் யூனியனுடன் நட்பிலிருந்தது. சோவியத் யூனியனுடனான பாதுகாப்பு உடன்பாட்டை ஒரு கவசமாகக் கொண்டுதான், இந்திராகாந்தி, தெற்காசி அரசியலில் சுயாதீனமாக இயங்கினார். கிழக்கு பாக்கிஸ்தானை உடைப்பதற்கான இந்திய நகர்வின் போது, அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கும் நோக்கிலேயே, சோவியத் யூனியனுடன், இந்தியா அவ்வாறானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. இன்றைய அரசியல் சூழல் தலைகீழாகிவிட்டது. சோவியத் யூனியனின் செல்வாக்கு வளையத்திற்குள் இருந்த காலத்திலேயே, இந்தியாவை மீறி, செயற்படாத, அமெரிக்கா எவ்வாறு இப்போது செயற்படும். அமெரிக்காவின் அசைவின்றி, மேற்குலகின் தலையீட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. இவ்வாறானதொரு சூழலில், இந்தியாவை தவிர்த்து, ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்விற்கான அழுத்தங்களை எதிர்பார்க்கலாமா?
எனவே இலங்கையின் அரசியல் பின்புலத்தில் நோக்கினாலும், இந்தியா எங்களுக்குத் தேவை. சர்வதேச அரசியல் பின்புலத்தில் நோக்கினாலும் இந்தியா எங்களுக்குத் தேவை. இந்தியாவின் காத்திரமான தலையீடின்றி, ஈழத் தமிழர் அரசியலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்போதுமே, ஏற்படப் போவதில்லை. இந்த விடயங்களை சரியாக புரிந்துகொண்டால், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை புரிந்துகொள்வதில் சிரமமிருக்காது. இந்தியாவிடம் செல்லாமல் வேறு எங்கு சென்றும் பயனில்லை. இந்தியாவை தவிர்த்து இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு அரசியல் தீர்வு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. இதனை நினைவில் நிறுத்திக்கொள்வது அவசியம்.