இது இனவாதமில்லையா – எம்.ஏ. சுமந்திரன்

தமிழ் மக்களின் மொழியுரிமையை அரசு அடியோடு புறக்கணிக்கின்றது என்பதற்கு வெலிஓயா ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் தகுந்த தற்கு சான்றாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். ‘வெலிஓயா’ எனப்படும் பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி வழமைக்கு மாறாக தனிச் சிங்களத்தில் இடம்பெற்றமை தொடர்பில் நேற்று ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
மொழி உரிமை முக்கியமானது. ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் பேசும் உரிமை இருக்கின்றது என ஜனாதிபதி திரும்பத் திரும்பக் கூறுகின்றார். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. இதற்கு மணலாறு (வெலிஓயா) ஒரு சிறந்த உதாரணம். இவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகவுள்ளது.

மணலாறு என்னும் தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமத்திற்கு தற்போது வெலிஓயா எனப் பெயர் மாற்றி வைத்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்தக் கூட்டத்துக்கு வவுனியா வடக்கு பிரதேச சபை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் கலந்துகொள்வது வழமையானது. இக் கூட்டத்துக்கு வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணவேணி வழமையாகவே சமுகமளிப்பவர். இக்கூட்டத்தில் பங்குகொள்பவர்களில் அதிகமானோர் தமிழ் மக்கள் உத்தியோகத்தர்களும் அவ்வாறுதான் உள்ளனர்.

இக் கூட்டமானது இதுவரை காலமும் மொழிபெயர்ப்புடனேயே இடம்பெறுவது வழமை. இக் கூட்டம் இடம்பெற்றதற்கு முதல் நாள் கிவுல் ஓயாத் திட்டத்துக்கு எதிராக நாம் ஓர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை அனைவருக்கும் தெரியும். அடுத்த நாள் இந்தக் கூட்டம் இடம்பெறுகின்றபோது, வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு வழமையாக ஆசனம் ஒதுக்கும் இடத்தில் இருக்கை ஒதுக்கப்படவில்லை.

வழமையை மாற்ற முடியாது எனத் தெரிவித்த தவிசாளர் மேடையிலேயே அமர்ந்தார், அதன் பின்பு கூட்டமானது முழுமையாகத் தனிச் சிங்களத்தில் மட்டுமே இடம்பெற்றது மொழிபெயர்ப்பு கேட்டபோதும் கொடுக்கப்படவில்லை ஆகையினால் தவிசாளர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, ‘நாம் இனவாதிகள் அல்லர். நாங்கள் இனவாதச் செயல்பாட்டில் ஈடுபடுவது கிடையாது என்று ஜனாதிபதி கூறுகின்றார், தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து, மொழி உரிமை முக்கியமானது, ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் பேசும் உரிமை இருக்கின்றது எனத் திரும்பத் திரும்பக் கூறினார். ஆனால் நடைமுறையில் எப்படி உள்ளது?

இந்த ஊடக சந்திப்பில் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், மருத்துவர் ப.சத்தியலிங்கம் உட்பட தமிழரசின் எம்.பிக்களான குகதாசன், கோடீஸ்வரன், சாணக்கியன், மருத்துவர் சிறிநாத், சிறிநேசன் ஆகியோரும், வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணவேணியும் கலந்துகொண்டனர்.