அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (22.11.2023) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றம் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயற்படுகிறது. இங்கு இடம்பெறும் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த மக்களும் நாடாளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரது செயற்பாடுகளினால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 9 (அ) பிரிவில் ‘நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை மற்றும் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் வெளியாட்களுக்கு வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்’ என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைசார் மேற்பார்வை குழுவின் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படாமல் கடந்த மாதம் 19ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஊடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் நாடாளுமன்ற கோட்பாடுகளுக்கு எதிரானது. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.